சித்திரையும் நாங்களும்!
அதிகாலை வேளையிலே சிரிக்கும் வெய்யில்
அதனோடு சேர்ந்தெங்கும் சிரிக்கும் பூக்கள்
பொதியாகக் கனிதொங்கும் மரங்கள் எங்கும்
புகுந்துபழம் கொறிக்குமந்த அணில்கள் கூட்டம்
மதியாதார் முற்றத்தை மிதியார் போல
மதில்மீதே காக்கையினம் நடந்து போகும்
பதியாகப் போட்டபனம் பாத்தி யெல்லாம்
பசுங்காலால் முயல்வந்து சேதம் செய்யும்
வானமெங்கும் சோளகத்தின் ஆட்சி வந்து
வருகின்ற முகில்குலத்தைக் கலைத்துச் செல்லும்
கானமெங்கும் குயிலிருந்து இசைக்கக் காதல்
கணவனுடன் தூக்கணமும் கூடு பின்னும்
தீனமுதம் தேடிவரும் கோழிச் சேவல்
திண்ணையிலே காயவைத்த அரிசி கொத்தும்
மோனநிலை அடைந்துவிட்ட துறவி போல
முற்றத்தில் நாய்கிடக்கும் கண்கள் மூடி
தோட்டவயல் வெளியெல்லாம் கொடிகள் ஏற்றத்
தோடங்கிடுவார் சிறுவர்கள் அந்தக் காலம்
மாட்டுவண்டில் கிடுகுவரும் வீடு மேய
மாடிழுக்கும் குழைவண்டில் தெருவால் போகும்
போட்டுவைத்த விறகினுக்குள் சாரைப் பாம்பு
புகுந்திருந்து இளைப்பாறும் எங்கள் ஊரில்
ஆட்டுக்குட்டி வளவெல்லாம் துள்ளி ஓட
அதன்பின்னால் பசுக்கன்று தானும் ஓடும்
தேன்கூடு போலிருந்து சனங்கள் வாழ்ந்து
தின்றுகுடித்து உறங்கிதோர் காலம் தன்னில்
வான்கூடும் சித்திரையும் வந்து அங்கே
வளஞ்சேர்த்த நினைவுகளை எண்ணி இன்று
மீன்கூடும் வலைபோலச் சிக்கிக் கொண்டு
மீண்டுவர முடியாமல் புறநா டெல்லாம்
மான்கூட்டம் தலைசுமக்கும் கொம்பு போல
மனஞ்சுமந்து தவிக்கின்றோம் தமிழர் நாமே!
இரா.சம்பந்தன்.