சிங்கமும் – சுண்டெலியும்!
நன்றிக் கடன்
விண்மூடிக் கிளைவளர்ந்த மரத்தில் ஏறி
விளையாடிக் கொண்டிருந்த எலியில் ஒன்று
கண்மூடி நிழல்கிடந்த சிங்க மீது
கால்தவறி விழுந்துவிட எழுந்த சிங்கம்
மண்மூடிக் கிடந்தசிறு புற்றில் பாய்ந்து
மறைவதறகுள் எலியதனைக் காலால் பற்றிப்
புண்மூடிக் கிடந்தபெரு வாய்க்குக் கிட்ட
பொல்லாத கோபத்தில் எடுத்த வேளை
கையெடுத்து எலிப்பிள்ளை அழுது அந்தக்
காட்டரசை பணிவோடு வணங்கிச் சொல்லும்
மெய்யடுத்த தூக்கத்தில் கிடந்த உங்கள்
மேனியிலே விழுந்ததுவோ தவறு ஆனால்
பொய்யுரைக்க வில்லையையா பொறுத்துக் கொண்டு
போய்வரவே விட்டுவிட வேண்டும் என்னைச்
செய்தபெரும் உதவிக்கு மாற்றாய் நன்றி
செய்திடுவேன் ஆபத்தில் என்றோ ஓர்நாள்
எலிக்குழந்தை சொன்னமொழி கேட்டுச் சிங்கம்
எழுந்திருந்து சிரித்துவிட்டு போய்வா என்றே
பலிக்குணத்தை கொன்றுதின்னும் செயலை விட்டு
பக்குவமாய் நிலத்தினிலே எலியை விட்டு
புலிக்குலத்துப் பிறவிக்கு ஆபத்தாம் அப்போதிந்தப்
புற்றுறையும் எலிவந்து உதவு மாமே
கெலிப்பிறவி சுண்டெலியின் கொழுப்பை பாரேன்
கெட்டபயல் எனச்சொல்லி உறங்கும் மீண்டும்
விரித்தவலை நடுவினிலே காட்டில் ஓர்நாள்
வேட்டுவர்கள் வைத்திருந்த இறைச்சித் துண்டை
சிரித்தமுகத் தோடந்தச் சிங்கம் சென்று
சிறுத்தநகக் காலாலே தட்டிப் பார்க்க
பிரித்தவலை தன்னாலே மூடிக் கொள்ளும்
பிரச்சனையில் சிங்கமது மாட்டிக் கொள்ளும்
தரித்தவுயிர் வேட்டுவரால் போகும் காலம்
தன்னருகே வருவதனை உணர்ந்த சிங்கம்
பெருத்தகுரல் தானெடுத்துப் பெரிதாய்க் கத்தி
பிளந்துவிட வலைதன்னை முயன்று பார்க்கும்
பருத்தபெரும் பற்களினால் பலனே இல்லை
பட்டறிவை சிங்கமது உணர்ந்த போதில்
கருத்தசிறு வாலசைய கடிதில் வந்தே
கடுமுயற்சி செய்தெலியும் வலையை வெட்டித்
உருத்தெரிய சிங்கத்தை வெளியே விட்டு
உதவியல்ல நன்றியிது என்றே போகும்.
நாட்குறித்து உலகமெலாம் நன்றிக் காக
நாளொன்றை ஒதுக்கமுதல் அந்தக் காலம்
ஆட்பிடித்துக் காட்டாமல் விலங்கை வைத்து
அரியதொரு கதைவகுத்துப் பாடம் ஆக்கி
வாட்பிடித்து மோதுகின்ற கோபம் விட்டால்
வாழ்க்கையிலே கிடைப்பதெலாம் நன்மை என்ற
கோட்பதத்தை சொல்லிவைத்த முன்னோர் வாழி
குழந்தைகட்குக் கொண்டுசென்ற மொழிகள் வாழி!
இரா. ஞானசம்பந்தன்.