|

சங்க இலக்கியத்தில் சத்திர சிகிச்சை!

பொழுது சாயத் தொடங்கிவிட்டது. அன்றைய நாள் போரும் முடிவுக்கு வருகின்றது. எல்லோரும் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நடந்து வருகின்றார்கள். காயம் பட்ட சிலர் தூக்கி வரப்படுகின்றார்கள். அவரவர் காயங்களுக்கு ஏற்ப மருத்துவர்கள் மருந்து இடுகின்றார்கள். வேதனை தவிர்க்க அவர்களுக்கு மூலிகைச் சாறுகள் அருந்தக் கொடுக்கப்படுகின்றன.

பாசறைக்கு வெளியேயும் மனிதர்கள் விலங்குகள் என்ற வேறுபாடின்றி காயம் பட்ட யானை குதிரை வேவுத் தொழிலில் ஈடுபட்ட பருந்து கழுகு போன்ற பறவைகள் என்று அனைத்துக்குமே மருத்துவ வசதிகளும் உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

பாசறையிலே தனக்காகப் போரிட்டு காயமடைந்த படை வீரர்களை ஒவ்வொருவராகப் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டு வருகின்றான் சேர மன்னனான செங்குட்டுவன். கலங்கிய கண்ணோடு சிலரின் கன்னங்களைத் தடவிக் கொள்கின்றான். அருகமர்ந்து நடந்ததை விசாரிக்கின்றான்.

நாளை போராட அவனும் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. மார்பை மூடிய போர்வை இரத்தத்தில் நனைய ஒரு புறத்தே கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஒரு போர் வீரனை அவன் கண்கள் காண்கின்றன.

சற்றுச் சினங்கொண்டு மருத்துவர்களை அழைத்து விசாரிக்கின்றான். எதிகளுடைய கூரிய வேல் ஆழமாகப் புகுந்து விட்டது. அதை அவர்கள் மீண்டும் பறித்து எடுக்கும் போது அது நெஞ்சைக் பிளந்து விட்டது. இனி மருத்துவத்துக்கு அங்கே வேலை இல்லை. மரணம் அவனை நெருங்கி விட்டது. அதனால் நாம் அவனைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்கிறார்கள் அவர்கள்.

ஓடிச்சென்று அவன் அருகிலே அமர்கின்றான் மன்னன். அவன் தலையை மெதுவாக தன் மடிமீது தூக்கிவைத்து மகனே என்று அழைக்கின்றான் . மார்புப் போர்வையை விலக்கி அவனடைந்த புண்ணைப் பார்க்கின்றான் மன்னன். மறுகணம் அவன் முகம் மலர்கின்றது.

வைத்தியர்களே நான் காயமடைந்தால் எனக்கு முதலுதவி அளிக்க வந்திருக்கும் பெரிய மருத்துவரை நான் அழைப்பதாகச் சொல்லுங்கள் என்று கட்டளை இடுகின்றான்.

அவர் ஓடோடி வந்ததும் பெரியவரே இந்தக் காயத்தைப் பாருங்கள் என்ன செய்து பிழைக்க வைக்கலாம் என்று கேட்கின்றான் செங்குட்டுவன்.

மன்னா தாங்கள் காயமடைந்தால் உதவுதற்காக சில மருந்துகள் கொண்டுவந்திருக்கின்றோம். மார்பைத் தைத்து உயிர்பிழைக்க வைக்கமுடியும் அது சத்திரசிகிச்சை என்கிறார்கள் அவர்கள். உடனே செய்யுங்கள் என்கிறான் மன்னன். உடனே அந்தப் போர்வீரன் மருத்துவ முகாமுக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றான்.

அந்த முகாமிலே சிரல் எனப்படும் மீன்கொத்திப் பறவையின் அலகு போன்ற கூரிய ஊசிகள் தென்படுகின்றன. அந்தப் போர்வீரன் மயக்கமடைவதற்கு சில மூலிகை இலைகளை மணப்பதற்கு கொடுக்கின்றார்கள்.

அவன் மயக்கநிலை அடைந்ததும் அவன் மார்புக் காயம் சுத்தம் செய்யப்பட்டு மருந்து இடப்பட்டுத் தையல் போடப்படுகின்றது. அவன் சில நாட்களில் குணமடைந்தும் விடுகின்றான்.

அவன் மார்புப் புண்ணிலே ஊசி நுளைந்து மேல் வந்ததை சிரல் பறவை கடல் நீரைக் கிழித்துக்கொண்டு உள்ளே சென்று மீனைப் பற்றிக் கொண்டு கணப்போதில் வெளிவரும் செயலுக்கு ஒப்பிட்டது சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து.

இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்

மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி

நெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்

அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது

தும்பை சூடாது மலைந்த மாட்சி

அன்னோர் பெரும நல்நுதல் கணவ

(சங்க இலக்கியம் – பதிற்றுப்பத்து – ஐந்தாவது பத்து)

இந்தச் சிகிச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது நிகழ்ந்து விடவில்லை. போரிலே காயம்பட்ட பலருக்குச் சர்வசாதாரணமாக செய்யப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை எடுத்துக்காட்ட வடு ஆர் மார்பின் அம்புசேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது என்று அழுத்திச் சொன்னது பதிற்றுப்பத்து.

காயங்களுக்குத் தையல் போடப்பட்ட காரணத்தால் மார்பிலே வடுவோடு விளங்கிய பலர் செங்குட்டுவனைச் சூழ்ந்து இருந்தார்களாம். அவர்களுக்கு ஏதோ காட்டுமிராண்டித் தனமாக சிகிச்சை செய்யப்படவில்லை. அவர்கள் தாம் பயன்படுத்திய வெண்மையான தூய ஊசியை நெடுவெள் ஊசி என்று குறிப்பிட்டனர்.

எம் முன்னோர்கள் காயங்களுக்குத் தையல் போடும் மருத்துவத் தகுதியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் புறக்காயங்கள் இன்றி உடலுக்குள்ளே நோய் வந்தாலும் அறுவைச் சிகிச்சை செய்யும் கலையை அறிந்திருந்தார்கள். இதனைக் கம்பராமாயணத்திலே விபீடனன் கூற்றாக கம்பன் எடுத்துக்காட்டுவான்.

உடலுக்குள்ளே ஏதாவது கட்டி வந்தாலும் அவ்விடத்திலே அறுத்து அங்கே தங்கி நிற்கும் அசுத்த இரத்தத்தை நீங்கி விட்டு நோய்க்கிருமிகள் மேலும் பரவாத வண்ணம் அவ்விடத்தைத் தீ கொண்டு சுட்டு வெட்டியதற்கும் சுட்டதுக்கும் ஒரு சேர வேறொரு மருந்துகொடுத்து நோயினால் வருகின்ற துயரத்தைப் போக்கும் செயலைச் செய்யக்கூடியவர்கள் அன்று இருந்தார்கள்.

உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் போக்கிச்

சுடலுறச் சுட்டு வேறோர்மருந்தினார் துயரம் தீர்வார்

(கம்பராமாயணம்)

கனடா தமிழர் தகவல் 5.5.2025 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.