குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்!
ஒரு வேலையைச் செய்துதான் முடிக்க வேண்டும் வைராக்கியம் கொண்டவர்கள் தேகம் சற்றுக் களைப்பாக இருக்கின்றது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று பின்போட மாட்டார்கள். பசிக்கிறது சாப்பாடு உண்ட பின்பு செய்வோம் என்று தாமதிக்க மாட்டார்கள். அந்த வேலையை முடிக்க வேண்டுமே என்ற கவலையில் நித்திரையும் கொள்ள மாட்டார்கள். மற்றவர்களுடைய குறை குற்றங்களைக் கதைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்க மாட்டார்கள். தாம் தொடங்கிய வேலை கடினமானதாக இருந்தாலும் பின்வாங்க மாட்டார்கள். யாராவது அவமதித்து பேசினாலும் அதையிட்டுக் கோபம் அடைய மாட்டார்கள். தங்கள் காரியத்திலே மட்டும் அவர்கள் கவனமாக இருந்து வெற்றி பெறுவார்கள்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
(குமரகுருபரரின் நீதி நெறி விளக்கம் பாடல் 53)
இரா.சம்பந்தன்.