குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!
காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து நிற்கும் காலை அடுத்து வைத்து ஆயர் குடி நிறைந்த காட்டுவழி நடந்திட்டாள் தன் கையால் வளர்த்த பெண்ணைத் தனிமனையில் காண்பதற்கு.
காதல் மலர்ந்து அதனால் கலவரங்கள் உருவாகி சாதல் விளிம்புவரை சங்கடங்கள் கொடுத்தாளைத் தடுத்து வைத்து ஆதல் இனியொன்றும் அடைவதற்கு இல்லையென போக விட்டாலும் பொல்லாத மனம் தாய்க்கு. புழுப்போலத் தினம் துடிக்கும்.
மகளே எனநினைக்கும் அது. மனத்திரையில் முகம் பார்க்கும். தவளத் தெரியாத கன்றுக்கு வயல் உழவா திகிலில் தவித்திருக்கும். திரும்பாது அடம் பிடிக்கும். காதலாம் காதல் கணப்போது கோவிக்கும். குளிரும் அடுத்த கணம். குரலெடுத்து ஓலமிடும். பார்த்தாள் அப்பெண்ணை வளர்த்து வந்த செவிலித் தாய்.
பதறாதே நான்சென்று பார்த்து வருகின்றேன் எனச் சொல்லிப் புறப்பட்டாள் அக்கிழவி. அவர்கள் போனவழி தெரியவில்லை. வழிகேட்டு நடந்திட்டாள். பெற்றவரை விடுத்து வந்து புதிசாய் மணமுடித்த சிறிசுகளைத் தேடுகிறேன். கேட்டறிந்தாள் அக்கிழவி தம் குழந்தை வாழுமிடம்.
கைப்பிடித்த கணவனது கட்டழகுக் குடிசைக்கு தைத்துவைத்த முட்கதவைத் தட்டினாள் அக்கிழவி தானூன்றும் தண்டாலே. கீச்சென்று ஒலியெழுப்பித் திறந்துகொண்ட கதவை முந்தி அப்பாச்சி எனத் துள்ளிக் கூச்சலிட்டாள் அப்பெண்ணாள். கணவணும் வந்தாச்சி வா உள்ளே எனச்சொன்னான். ஆச்சி கால் வைக்கும் முன்னாலே அன்பு பிடித்திழுத்து தப்பொன்றும் இல்லாமல் தமிழ் வழக்கை எடுத்துரைக்கும்.
சமைக்கிறேன் அப்பாச்சி சற்றுப் பொறுத்துக்கொள். இமைவெட்டிக் கண்ணாலே இரு என்று பாய் போட்டாள். குடிக்க மோர் கொடுத்தாள். கொடுத்தாள் பாக்குரலை. கட்டிவைத்த வெத்திலையை எடும் என்றாள் கணவனிடம்.
உறைந்து கல்லான உறிகிடந்த மோர் பிசைந்தாள். குலைந்து நிலமசைந்த உடுபுடவைக் கொய்யகத்தை மோர் பிசைந்த கைக்காந்தள் ஐந்துவிரல் மலர்களினால் அள்ளிச் சரிசெய்தாள் கழுவாமல் அப்படியே. காட்டு மரமொடித்துக் காயவைத்த விறகெடுத்து அடுப்பருகே குந்தி இருந்தவளும் குவளை மலர் போன்ற கண்ணுள்ளே புகை செல்ல கவலை எதுவுமின்றி ஊதி அடுப்பெரித்தாள் பணத்தில் மிதந்ததெல்லாம் பழையகதை ஆகிடவே.
அடுப்பு வைத்த சட்டியிலே இட்டதயிர் அளவை விட பலமடங்கு புளியெடுத்து கொட்டிக் கலக்கியவள் தனைப்பார்த்து உதையெல்லாம் உன்கணவன் உண்பானா எனக்கேட்க உன்னினாள் கிழவி. உதடுகளோ திறக்கவில்லை.
மோர்க்குழம்பும் சோறும் அப்பாச்சி உனக்கென்றாள். திகைத்தாள் கிழவி. தப்பிக்க வழி பார்த்தாள். என்ன பழக்கமெடி ஆம்பிளைகள் வீடிருக்க பெண்கள் உண்பதுவா உன்னவனுக்கு கொடு முதலில் என்றாள். சிரித்துவிட்டு அப்பெண்ணும் கணவனுக்கு இலை போட்டாள்.
ஒருவாய் உண்டுவிட்டு ஓடுவான் புருசனென எதிர்பார்த்த ஆச்சிக்கு ஏமாற்றம். அள்ளியுண்டு அவன் தனது மனைவியிடம் அருமையாய் இருக்தென்ற அன்பு வார்த்தைகளை ஆச்சி செவி கேட்டாள். உண்மையிலே வாந்திவரும் ஒரு உணவை சமைத்தவளை திண்ணையிலே இருத்தி வைத்துத் திட்டிமனம் வருத்தாமல் அன்புக்கு இடம் கொடுத்த ஆடவனை ஆச்சி கண்டாள்.
அந்த வார்த்தையைப் கேட்டு உண்மையாகவா என்று மகிழ்ச்சியால் மேலும் முகம் மலர்ந்த தங்கள் வீட்டுப் பெண்ணை ஆச்சி பார்த்தாள். தன்னைக் கேட்டிருக்கலாம். ஆச்சி முறையாகச் சொல்லிக் கொடுத்திருப்பாள். அவள் கேட்கவில்லை.
என்னவனுக்கு என் கையால் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு அன்பின் உயர்வினையும் நீ என்ன செய்து தந்தாலும் நான் குற்றம் காணாமல் சாப்பிடுவேன் என்ற இன்னொரு அன்பின் பக்குவத்தையும் ஆச்சி மெய்மறந்து பார்த்தாள்.
போடு பிள்ளை இலையென்றாள். புரிந்துகொண்டு சாப்பிட்டாள். வயிறு நிறைவதற்குள் மனம் நிறைந்த ஆச்சியவள் சிந்தித்தாள். இப்படியோர் வாழ்வுதனை இயற்றும் இந்தச் சிறிசுகளை எப்படியோ அழ வைத்து என்னவெல்லாம் செய்தோம் நாம். பொருள் படைத்தோர் வீடுகளில் பொண்ணுகளாய் பிறந்து விட்டால் இருள் வாழ்வுப் பாதையைத்தான் இணைக்கின்றோம் அவர்களுடன்.
வீடு வசதில்லை. வேண்டும் உடை அதிகமில்லை. தோடு மணிநகைகள் தொடுவதற்கும் வசதியில்லை. பத்துக் கறிசமைத்துப் பசியாறப் பணமுமில்லை. ஓலைப் பாயும் ஒருபானை சட்டியுடன் ஒற்றுமையாய் வாழும் இவர்களது மனம் முழுக்க நிறைந்த அன்பிருக்கு. நிம்மதியும் பூத்திருக்கு.
போயிவர்கள் பெற்றவர்கள் செவியெறிய வேண்டுமிதை. கற்பனையில் தீர்வெழுதிக் காதலை நீர் குழப்பாதீர். சேய்களது வாழ்க்கையெலாம் சிறந்துவிடும் காதலினால்! போய்ப்பாரும் நும்மகளை என்றுரைக்க வேண்டுமென்றாள்.
விடைபெற்றாள் அப்பாச்சி விளக்குவைக்கும் நேரமதில். தடையாக தான் நின்று அவர் சுகத்தைக் குழப்பாமல்! நடையைத்தான் விரைவாக்க நம் கிழவி முயன்றாலும் அவர் வீட்டு சுமையொன்று அவள் முதுகில். அதற்குள்ளே அன்பு மட்டும்!
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே
(சங்க இலக்கியம் குறுந்தொகை 167 பாடியவர் கூடலூர் கிழார்)
கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.1.2023) வெளியான எனது கட்டுரை இது