குடைக்குள் பெய்த மழை ஆனவளே!
குடைக்குள் பெய்த மழை ஆனவளே!
உன் மீது கொண்ட வெறுப்பு
உன் மறைவோடு போய்விடும்
என்று தான் நினைத்தேன்
என் காதலை நீ
மறுத்திருந்தால் நானும்
மறந்திருப்பேன்
ஆனால் நீ
காதலிப்பது போல நடித்ததை
எப்படி மறக்க முடியும்?
குடைக்குள் மழை பெய்தால்
கொண்டாட மனம் வருமா
அதனாலே என்
வெறுப்பும் தணியவில்லை
இன்றோ நீ
மறைந்து விட்டாய்
வாழ்வினை முடித்துக் கொண்டு!
என்னை வெறுத்தவளே
விண்ணை விரும்பினையே
அதனால் உன் மரணமும்
எனக்குப் பிடிக்கவில்லை
உன் மரண ஊர்வலம்
சென்ற தெருவும்
எனக்குப் பிடிப்பதில்லை
உன்னைக் கொழுத்திய
மயாணமும் பிடிப்பதில்லை
உன்னைச் சுட்டெரித்த
நெருப்பையும் பிடிப்பதில்லை
இவையெலாம் என்மனத்துப்
பொறாமைப்புல் விளைநிலங்கள்
வாழத்தான் அழைக்கவில்லை
வாழ்வை முடித்த பின்னும்
கூடத்தான் வரச்சொல்லிக்
கூவியென்னை அழைக்கவில்லை
எட்டாத பழங்களெலாம்
புளிக்குமென அமைதி கொள்ள
முட்டாள் நரியா நான்
முழுநிலவின் காதலன் யான்!
கட்டாமல் ஏமாற்றிக்
கதறவிட்டாய் போகட்டும்
என்னோடு
ஓட்டாமல் புளியம்பழ
ஓடாக இருந்த உன்ளை
நல்லவள் தான் என்கிறதே
நாலுசனம் ஊரெல்லாம்
அப்படியானால் இன்று நீ
சொர்க்கம் அடைந்திருப்பாய்
இருந்து கொள் அங்கேயே
நானும் மறையுமொரு
நாளொன்று வருந்தானே
நானும் உயிர்விடுத்து
நரகினுக்கே சென்றிடுவேன்
ஏனென்று கேட்கிறியா?
நீயில்லாத நரகம் தான்
எனக்கான சொர்க்கமடி
நான் அங்கே போய்விடுவேன்
வருந்தாமல் வாழ்ந்திடுவேன்!