காதலர் தினத்தில் ஓர்நாள்!
கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான்
காதலரின் தினமென்றால் என்ன என்றே
குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு
குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள்
பயிலுமொரு அன்பாலே காதல் மாந்தர்
பரிசளித்து தம்மவரைப் போற்றும் காலம்
மயிலுருவ மங்கையரும் மனதைத் தொட்ட
மானிடரும் போற்றுவது அதுதான் என்றாள்!
வண்ணமலர் ரோஜாவின் ஆட்சி எங்கும்
வழியெல்லாம் இதயத்தின் படங்கள் தொங்கும்
வெண்ணிலவில் கடல்மணலில் சோலை எங்கும்
விரும்புமிடம் மீதன்று சோடி தங்கும்
கண்ணழகில் கதைபுனையும் காதல் சோடி
கனநேரம் விளையாடும் அன்பு கூடி
பெண்ணியலார் சுவையுணரும் திருநாள் என்று
பிழைகூறி எதிர்ப்பாரும் உண்டு என்றாள்
அன்பினது வலிமையினை அகிலம் காண
ஆரம்பிக்கப் பட்டதிந்த நினைவு நாளும்
இன்பியலை அடிப்படையாக் கொண்ட காதல்
இனத்துக்கே முத்திரையாய் போன தின்றே
முன்பிதனில் இருந்தபல தூய்ம்மை வற்றி
முழுவதுமே உண்மையென நம்பா வண்ணம்
துன்பியலும் கலந்ததுதான் இறைவா இந்த
தொன்மைமிகு காதலர்நாள் என்றாள் தேவி
நல்லதுநாம் பூவுலகம் சென்றே அந்த
நாளதனைப் பார்த்துவரும் எண்ணம் கொண்டோம்
மெல்லியளே நீயிளமைப் பருவம் கொள்வாய்
மெய்மயங்கும் ஆடவனாய் நானும் மாறி
செல்லுகிறோம் பூவுலகம் காதல் நாளின்
சிறப்பதனைக் கண்டுவர என்றான் ஈசன்
நெல்லுமணி போலுமையாள் சிரிப்பைச் சிந்தி
நிலவுலகம் பார்ப்பதற்கு விருப்பம் கொண்டாள்
பாதியுடல் தான்கொடுத்து மனைவிக் காக
பரமசிவன் செய்தசெயல் தோற்கும் வண்ணம்
வீதிதனில் காதலர்கள் கட்டிக் கொண்டு
வீறுநடை போடுவதை இறைவன் கண்டான்
மோதிவிடும் அந்தளவு கூட்டம் எங்கும்
முகமெல்லாம் புன்னகையும் முத்தம் என்று
ஆதிநிலை கண்டவாகள் பார்த்து ஈசன்
ஆண்டவன்நான் வாழ்ந்ததெலாம் வீணே என்றான்
கரையொதுங்கும் அலைகளுக்குப் போட்டி யாக
காதலியின் கன்னமெலாம் மாறி மாறி
இரைபிடுங்கும் காக்கையென ஒருவன் அங்கே
இதழ்பதித்து முத்தமிட்டான் இறைவன் காண
அரைதெரியக் கிடந்தவளும் அவனுக் காக
அதைத்திருப்பிக் கொடுப்பதையும் இறைவன் கண்டான்
நிரைநிரையாய் அதுபோல பலரும் செய்ய
நின்றுவிட்டான் இறையவனும் நடுங்கி நெஞ்சம்!
நெஞ்சிருக்கும் அன்புதனை நேரில் காட்ட
நினைப்பவர்க்குப் பூவிருக்கே இவர்கள் என்ன
கொஞ்சிவிளை யாடுகிறார் பலரும் காண
கொடுமையிது காதலர்கள் தினமே யல்ல
வஞ்சியரும் வாலிபரும் வயதின் நோயால்
வளையவரும் காமுகர்கள் தினமே இன்று
நஞ்சுவது பாற்கடலில் இல்லை இல்லை
நான்காணும் மனதுகளில் என்றான் ஈசன்
பரமசிவன் மதிமயங்கி நிற்க அந்தப்
பார்வதியாள் அவனருகில் வந்து மெல்லக்
கரமதனைப் பற்றியொரு குடிசை வீட்டில்
கண்கலங்கும் அன்னையினைக் காட்ட லானாள்
புரமெரிக்கும் முன்னாலே ஐயோ இந்தப்
புள்ளையைநான் எரித்திருக்க வேண்டும் என்றே
சிரமதனில் கைவைத்து அழுதான் ஈசன்
சீரழிந்த அன்னையவள் கதையைக் கேட்டு!
குடிகார அப்பாக்கு குழந்தை யான
குமர்நான்கு பின்னாலே அருமைத் தம்பி
கடிகார முள்போல அவனைச் சுற்றும்
காதலியாள் அவள்காண செல்லும் தம்பி
முடிகோதும் முன்னாலே முன்னால் ஏதும்
முப்பதுவோ நாற்பதுவோ வைத்தல் வேண்டும்
அடிபோடி எனச்சொல்லிச் சிரிப்பான் அம்மா
அன்பாக நல்லதுக்கு எதுவும் சொன்னால்!
மொட்டாகிப் பூவாகிப் பறிப்போர் இன்றி
முழவாழ்வும் நெத்தாகிப் போன அக்கா
கட்டாமல் இருக்கின்றாள் வீட்டில் என்ற
கவலையது இல்லாத அந்தத் தம்பி
தொட்டானே கடற்கரையில் ஒருத்தி கையை
துடித்திட்டான் இறையவனும் இதயம் நொந்து
பட்டால்தான் தெரியுதுமா புவியின் வாழ்வு
பார்க்காதே இதையெல்லாம் என்றான் ஈசன்
மலையரசன் மகளாக பிறந்து நீயும்
மாசில்லாத் தவந்தானே செய்தாய் தேவி
சிலைவளைத்து புரமெரித்த சக்தி வாய்ந்த
சிவப்பதவி பெற்றுள்ள நானே காமக்
கலைதெரிந்த மன்மதனைக் கொன்ற பின்பே
கைப்பிடித்தேன் உனையன்றோ எதிலும் காமம்
தலைநுழைத்தல் கேடுவரும் காதல் கூடத்
தந்துவிடும் தோல்வியினை என்றும் சொன்னான்!
காதலிலே சிறுகூறு காமம் இந்தக்
கலைதெரிந்த கைகளுக்குப் பூவும் வேண்டாம்
காதலிலே ஒருகூறு மானம் அந்தக்
கண்ணியத்தைக் காத்திட்டால் காதல் வெல்லும்
காதலிலே இன்னுமொரு கூறு பெற்றார்
கண்கலங்க வைக்காத அன்பு என்றும்
காதலிலே இருந்திடனும் தூய்ம்மை என்றே
கயிலைமலை அடைந்தபின்னும் இறைவன் சொன்னான்!