காஞ்சியில் வாழ்ந்த துறவி!
சுவாமிநாதன் என்ற சிறுவனாக இருந்து காஞ்சி மடத்துக்கு அதிபதியாகி பின்நாளில் சங்கராச்சாரியார் என்று பலராலும் மதிக்கப்பட்ட மகா பெரியவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.
ஒரு முறை அவருக்கு மடத்திலே வழங்கப்பட்ட உணவில் கீரைக்கறியும் இருந்தது. அதைச் சுவைத்து உண்ட அவர் சமையல்காரரை அழைத்து கீரை நல்லாக இருந்துதப்பா. நாளைக்கும் அதைச் செய்து தருவியா என்று கேட்டார்
பெரியவர் ஆசையோடு கேட்டுவிட்டாரே என்று இன்னும் சுவையாக செய்து கொடுத்தார் சமையல்காரர். அன்றும் சாப்பிட்ட பெரியவர் அதற்கு அடுத்த நாள் எதுவுமே சாப்பிவில்லை. எந்த உணவும் இன்றி பல நாட்கள் கழித்த பின் பதினைந்தாவது நாள் மாட்டுச் சாணத்தைக் கொண்டுவரச் செய்து அதைக் கரைத்துக் குடித்து தன் உபவாசத்தை முடித்துக் கொண்டார் பெரியவர்.
பெரியவா ஏன் இந்தக் கொடும் தண்டனை உங்களுக்கு என்று கண்கலங்கிக் கேட்டார்கள் மடத்தில் இருந்தவர்கள். பெரியவர் சொன்னார்.
அதொன்றும் இல்லை. இரண்டு நாட்கள் கீரைக்கறி சாப்பிட்டோனா முன்றாவது நாளும் சந்திரமௌலீஸ்வரருக்கு பூசை செய்யும் போது இன்றைக்கும் கீரை இருக்குமா என்று ஒருகணம் என் மனம் நினைத்தது.
ஓகோ சன்னியாசியாகிய எனக்குள்ளே பழைய சுவாமிநாதன் இன்னமும் ஒளிந்திருக்கின்றான் என்று நான் நினைத்தேன். அவனை வெளியேற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் பெரியவர்.
படித்ததில் பிடித்தது.