காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது. பிற மதக் கொள்கைகளில் எவையெல்லாம் மக்கள் மனங்களில் வெறுப்பை ஏற்படுத்துகின்றவோ அவற்றையெல்லாம் தான் ஆதரிப்பதன் மூலமே தன்னைக் கட்டியெழுப்ப முடியும் என்று உணர்ந்து கொண்ட சைவம் சமணர்களும் பௌத்தர்களும் அறவே வெறுத்த பெண் என்பவளையும் அவளால் கிடைக்கக்கூடிய சுகங்களையும் அரவணைத்துச் செல்ல முயன்றது.
இதன் பின்னரே பக்தி இலக்கியங்களில் நாயகன் நாயகி பாவம் தலைதூக்கியது. கூச்சமில்லாமல் இறைவனைக் காதலனாகவும் தங்களைக் காதலியாகவும் கொண்டு பெண்ணடியார்களும் ஆணடியார்களும் இறைவனைப் பாடத் தொடங்கினர். இது இளம் சமுதாயத்தினர் மனத்தில் கிளர்ச்சி உணர்வைத் தோற்றுவிக்க அவர்கள் சைவத்தின் பக்கம் சாயத் தொடங்கினர். அதன் விளைவு அண்ணா கம்பரசம் எழுதும் அளவுக்கு புராணங்களும் இதிகாசங்களும் பெண்சுகத்தை அள்ளிக் கொட்டின.
கம்பனின் உண்டாட்டு படலமும் சயங்கொண்டானின் திருக்கடை திறப்பும் அப்படித்தான் தோன்றின. திருப்புகழ் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் அரைதனில் உடைதனை அவிழ்த்து பின் அங்குள அரசிலைத் தடவி என்று சொல்லிக்கொண்டு போகும். இந்த முன்னுரையோடு காஞ்சிப்புராணம் என்ற ஒரு சமய இலக்கியத்தில் உள்ள ஒரு பாடலுக்கு செல்கின்றோம்.
காஞ்சிமா நகரத்திலே விலைமாதர்கள் நிறைந்து வாழுகின்ற தெரு அது. விலைமாதர்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக தங்களைப் போலவே தங்கள் வீட்டையும் எப்போதும் அழகாக வைத்திருப்பார்கள். அப்படி ஒரு வீட்டிலே அழகிற்காக ஜன்னல் ஓரம் ஒரு முத்து மாலையைக் கட்டித் தொங்கவிட்டிருக்கின்றார்கள்.
அந்த ஜன்னலுக்கு எதிரான தெருவின் மறுபக்கத்திலே அரிசி பருப்பு உப்பு போன்ற பொருட்களை வெளியூர்களில் சென்று வாங்கி வந்து வியாபாரம் செய்யும் வணிகர் ஒருவரின் கடையும் இருக்கின்றது. தினமும் அந்தக் கடையை அந்த விலைமாது வீட்டு முத்துமாலை பார்த்துக்கொண்டே இருக்கும். அவர் வெளியூhகளில் சென்று மூட்டைகளில் வாங்கிவந்த பொருட்களை மிகவும் களைப்போடு அடுக்கி வைப்பார்.
ஒருநாள் முத்துமாலை அவர் படும் துன்பத்தைப் பார்த்து சிரித்துவிட்டு தனக்குள் எண்ணிக் கொண்டது. இந்தத் தெருவின் ஒரு புறத்திலே விலை மாதர்கள் வியாபாரம் செய்கின்றார்கள். மறுபுறத்திலே வணிகர்கள் வியாபாரம் செய்கின்றார்கள். ஆனால் எங்கள் வீட்டு வியாபாரத்திலே விற்கப்படும் பொருள் எங்களைவிட்டு எங்கும் போய்விடுவதில்லை. அது எப்பவும் எங்களுடனேயே இருக்கும். நாளையும் அது திரும்பவும் விற்கப்படும். அப்படி ஒரே பொருளைத் தினமும் விற்கும் எங்கள் வீடுகளில் நடப்பது வியாபாராமா அல்லது படிப்பறிவில்லாத முட்டாள் பயல்களே மூட்டை தூக்கிச் சுமந்து நீங்கள் செய்வது வியாபாரமா என்று முத்துமாலை சிரித்ததாக காஞ்சிப் புராணம் பேசுகின்றது.
விற்றிடும் அல்குல் தன்னை மீளவும் தமதே ஆக்கி
மற்றைய நாளும் விற்கும் வரைவிலா வீதி இச்சீர்
கற்றிலா வணிக மாக்கள் ஆவணக் கவினை நோக்கி
பற்றுவெண் தரளக் கோவை பத்தியார் சிரித்தது அம்மா
இந்தப் பாடல் சாதாரண தமிழ் இலக்கியப்பாடல் அல்ல. சைவ சமயத்தைக் கட்டிக்காக்கத் தோற்றுவிக்கப்பட்ட திருக்கயிலாய பரம்பரையைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டது. துறவறம் பூண்டு வாழ்ந்த சுவாமிகளுக்கு தன் நூலுக்குப் பொருத்தமற்ற சிற்றின்பச் செய்திகளையும்;நூலிலே இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கான காரணம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டு இருக்கின்றது.
திருக்குறள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. உழவு என்ற அதிகாரத்திலே தேவையற்ற செய்தியொன்றை ஒரு குறளிலே உவமையாகப் புகுத்தி மிகவும் முக்கியான கருத்தொன்றை சிறு பிராயத்தினருக்கு சொல்லிக் கொடுக்க சங்கடப்படும் நிலைக்கு ஆசிரியர்களை ஆளாக்கிவிட்டுப் போனார் திருவள்ளுவர்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலர்ந்து
இல்லாளின் ஊடி விடும்
(திருக்குறள் – உழவு –குறள் 1039)
தினமும் வீட்டுக்குச் சென்று தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஒருமனிதன் செய்யத் தவறுவானாகில் அவன் மனைவி எப்படி அவனை வெறுத்து ஊடல் கொள்வாளோ அது போல தனது நிலத்துக்கு தினமும் சென்று தன் கடமைகளைச் செய்யாத உழவனை வெறுத்து அந்த நிலம் எப்படிப் பலன் கொடுக்காமல் இருந்துவிடும். இது இந்தக் குறளின் பொருள்.
இந்தக் குறளை செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலர்ந்து இல்லாளாய்ச் சினந்து விடும் என்று திருவள்ளுவர் தனது ஊடலை எடுத்துவிட்டு சினம் என்று பாவித்திருந்தால் பிள்ளைகளுக்கு படிப்பிப்பதில் தயக்கம் இல்லை. கணவன் உதவிகள் கிடைக்காத மனைவி ஒருத்தி எப்படிக் கோபப் படுவாளோ அது போல தனக்கும் வேண்டிய உதவிகள் கிடைக்காது போனால் நிலமும் கோபப்படும் என்று குழந்தைகளக்க விளக்கி விட்டுப் போகலாம்.
நான் சொல்வது அதுவல்ல என்பது போல ஊடல் என்ற சொற்பிரயோகத்தைச் செய்தார் திருவள்ளுவர். ஊடல் என்ற சொற்பிரயோகம் ஒரு மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் காம சுகத்தை மட்டும் தனியாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. காமத்துப் பாலிலே இந்த உவமை தென்படுமானால் அது வேறு விடயம். ஏற்றக் கொள்ளக் கூடியது.
உழவு என்ற அதிகாரத்திலே அது வருவது குறளுக்கு இலக்கியச் சுவையைக் கொடுத்தாலும் மனதுக்கு நெருடலாகத்தான் இருக்கின்றது. இது வள்ளுவருக்குத் தெரியாத விடயமல்ல. என்ன செய்வது. தன் இலக்கியத்தை மக்களிடையே கொண்டு செல்ல காமத்தின் துளிகளையும் அவ்வப்போது அள்ளித் தெளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் சிவஞான சுவாமிகள் போல வள்ளுவனுக்கும் இருந்தது. இன்றைய வைரமுத்துவுக்கும் இருக்கின்றது.
கனடா தமிழர் தகவல் 5.7.2025 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது