|

கவிதையே உன் விலை என்ன?

அது நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் தமிழகத்தை ஆண்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. ஒருநாள் இரவு மன்னன் நகரைச் சோதனை செய்வதற்காக குதிரை மீது ஏறிச் செல்கின்றான். அங்கே ஒரு தாசி வீட்டில் இருந்து ஒலித்த ஒரு பாடல் மன்னனை நிறுத்தி விடுகின்றது.
மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியுங் காலம்
மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்குங் காலங்
கொங்கைகளுங் கொன்றைகளும் பொன்சொரியும்காலம்
கோகனக நகை முல்லை முகைநகைக்குங் காலம்
செங்கைமுகி லனையகொடைச் செம்பொன்பெய் மேகத்
தியாகியெனு நந்தியருள் சேராத காலம்
அங்குயிரு மிடங்குடலு மானமழைக் காலம்
அவரொருவர் நாமொருவ ரானகொடுங் காலம்.

மிகவும் துன்பமயமான குரல். காதலனின் பிரிவை எண்ணி ஒரு பெண் மனமுருகிப் பாடும் அந்தப் பாடலை மன்னன் கேட்டான். பாடல் முடிவு அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக்; கொடுத்தது. அந்தப் பெண் பிரிந்து வருந்துவது தன்னை எண்ணித்தான் என்பதனை மன்னன் அறிந்து கொண்டு அரண்மனைக்குத் திரும்புகிறான்.

மறுநாள் அந்தத் தாசியை அழைத்து அந்தப் பாடலைப் பற்றி விசாரிக்கின்றான். அரசே! இது என் வீட்டில் மறைந்து வாழும் உங்கள் தம்பிகள் உங்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள பாடிய கலம்பகம் என்னும் இலக்கியம். அதை நீங்கள் கேட்கக் கூடாது என்றாள் தாசி.

இல்லை. மிகவும் இனிமையான பாடல்களாக இருக்கின்றன. அதுவும் என் மீது பாடப்பட்ட இலக்கியம். அதை நான் கேளாவிட்டால் எப்படி? பெண்ணே அந்த நூலில் உனக்கு வேறு பாடல்கள் ஏதாவது தெரியுமா?

ஒரு சில பாடல்கள் தெரியும் அரசே.

இது கார் காலத்துக்கு உரிய முகில்கள் ஒன்று கூடி மழை பொழிகின்ற காலம். முன்பு என்னையும் என் காதலனையும் ஒன்று சேர்த்து உறவாக்கிய தெய்வம் இப்போது இருவரையும் பகையாக்கி விட்ட காலம். என் காதலன் வருவான் வருவான் என்று வழியைப் பார்த்தேங்குகின்ற பொல்லாத காலமாகவும் இது இருக்கின்றது. பாவியாகிய நான் தனித்திருந்து வாடுகின்ற காலமும் இதுதான். ஏன் காதலருக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் எனக்கு யாரும் சொல்லாத காலமாகவும் இது இருக்கின்றது. ஊரெல்லாம் அயர்ந்து உறங்குpன்ற இந்த இரவிலே என் இரு கண்களும் புலம்புகின்ற காலமும் இதுவே. எங்கள் இருவரையும் இந்த மண்ணை விட்டு அழிப்பதற்கான காலமாகவும் இது தெரிகிறதே. ஏன் காதலனாகிய நந்திமன்னனின் தோளைத் தழுவி நான் கிடக்க வேண்டிய காலத்திலே அது நடக்காத காலமாகவும் இது இருக்கிறதே.

பருவ முகிலெழுந்து மழைபொழியுங் காலம்
பண்டுறவாக் கியதெய்வம் பகையாக்குங் காலம்
வருவர் வருவர்என்று வழிபார்க்குங் காலம்
வல்வினையேன் தனியிருந்து வாடுமொரு காலம்
ஓருவர்நமக் குண்மைசொலி உரையாத காலம்
ஊருறங்க நம்மிருகண் உறங்காத காலம்
இருவரையும் இந்நிலம்விட் டழிக்கின்ற காலம்
இராசமன்னன் நந்திதோள் சேராத காலம்.

தாசி பாடினாள். மெய்மறந்து கேட்டான் நந்திவர்மன். பெண்ணே இந்த நூலை நான் முழுவதுமாக கேட்க வேண்டும். என் தம்பிகளை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் அவர்களைப் புலவர்களாக நூலோடு வரச் சொல். செய்வாயா என்று கேட்டான் நந்தி.

மன்னா! வேண்டாம் இந்த விபரீத ஆசை. அந்தக் கலம்பகம் கேட்பதற்கு என்று ஒரு நிபந்தனை இருக்கின்றது. அரண்மனையில் இருந்து சுடுகாடு வரையும் தொண்ணூற்றொன்பது பந்தல்கள் அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் இருந்து ஒவ்வொரு பாட்டைக் கேட்க வேண்டும். பாடல் முடிய பந்தல் எரிக்கப்பட்டு விடும். நூறாவது பாடலைச் சுடுகாட்டுச் சிதை விறகில் படுத்திருந்து கேட்க வேண்டும். அத்தோடு அதுவும் எரிக்கப்படும். நாம் உங்களை இழந்து விடுவோம். இதைத் தெரிந்து கொண்டுதான் உங்களைக் கொல்வதற்காக இந்தக் கலம்பக இலக்கியம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நூலையும் தடை செய்து தம்பிகளையும் கைது செய்யுங்கள். இந்தத் தாசியின் தலையையும் துண்டியுங்கள் என்றார்கள் மந்திரிகள்.

இல்லை. இது நல்ல ஒரு தமிழ் இலக்கியமாக இருக்கின்றது. அவர்களை அழைத்து நான் முழு நூலையும் கேட்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். மரணத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்றான் மன்னன்.

தம்பிகள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களின் கவிதைகளைக் கேட்டுக் கொண்டே இறுதியாக சிதையில் ஏறிப் படுத்தான் நந்திவர்மன். அவன் மரணித்து விட்டதாக எழுதப்பட்ட பாடலைப் பாடினார்கள் தம்பிகள்.
நந்தி இந்தப் பாடலைக் கேட்டான்.

வானுறு மதியை யடைந்ததுன் தட்பம்
மறிகடல் புகுந்ததுன் பெருமை
கானுறு புலியை யடைந்ததுன் சீற்றங்
கற்பக மடைந்ததுன் கொடைகள்
தேனுற மலரா ளரியிடம் புகுந்தாள்
செந்தழ லடைந்ததுன் மேனி
யானு மென்கலியு மெவ்விடம் புகுவோம்
நந்தியே யெந்தை பிரானே.

நந்தி மன்னனே! எங்கள் தந்தையே! உன்னிடத்திலே இதுவரை இருந்த குளிர்மை நிலவிடம் போய்ச் சேர்ந்து விட்டதே. உன் பெருமையெல்லாம் கடலிலே புகுந்து மறைந்து விட்டதே. நீ பகைவரிடம் காட்டிய கோபத்தை இனி கானகத்திலே புலியிடத்திலே அல்லவா காணமுடியும். இல்லை என்னாது கொடுத்த உன் கொடையை தேவருலக கற்பக தருவிடமல்லவா இனிமேல் நாம் காணமுடியும். உன்னோடு இருந்த திருமகள் நீ இல்லாததால் திருமாலிடமே திரும்பிப் போய்விட்டாள். அதைக் கண்டு உன் மேனியும் சிவந்த நெருப்புக்கு இரையாகி விட்டதே. இனி நானும் என் வறுமையும் யாரிடம் சென்று தஞ்சம் அடைவோம்? என்ற பொருள்பட பாடினார்கள் தம்பிகள்.

அதைக் கேட்டுக் கொண்டே உயிர் துறந்தான் நந்திவர்மன். நான் உயிரை இழக்காது இருந்திருந்தால் நல்ல ஒரு இலக்கியத்தை தமிழ் இழந்திருக்கும் என்றுதான் அவன் ஆத்மா நிம்மதி அடைந்திருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.