|

கலித்தொகை கொடுத்த கடன்தொகை!



ஒரு பெண் தன் தோழியுடன் விரைந்து ஓடும் ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்த போது தண்ணீர் அவளை இழுத்துச் செல்கின்றது. அதனைக் கண்டு ஆற்றின் கரையிலே நின்றுகொண்டிருந்த இளைஞன் ஒருவன் தண்ணீரிலே குதித்து அந்தப் பெண்ணைத் தூக்கிவந்து கரை சேர்க்கின்றான்.
அப்படி அவன் தூக்கி வரும்போது அவன் மார்போடு அவள் மார்பும் உரசிக் கொள்கின்றது. அதனைக் கண்ட சில ஊரவர்கள் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசிக் கொள்கின்றார்கள். அவர்கள் பேசியதைக் கேட்ட அவள் ஒருவன் ஆபத்திலே செய்த உதவியை இப்படிப் பழித்து உரைக்கிறீர்களே. நான் மனம் அறிந்து அப்படி நடந்து கொள்ளவில்லை.
என் கற்பின் தூய்மையை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் என் சக்தியைக் கொண்டு இப்போதே வானத்திலிருந்து மழை பெய்வித்துக் காட்டுகிறேன் பார்க்கிறீர்களா என்று கோபத்துடன் கேட்டு விட்டு வீட்டுக்குப் போய் விடுகின்றாள்.
தனக்கு ஆபத்தின் போது கைகொடுத்தவனை அவள் உள்ளம் மறக்க மறுக்கின்றது. அதைக் காதலாகவும் உணர்ந்து தன் தோழிக்கும் சொல்லி விடுகின்றாள் அவள். சரி ஆகட்டும் பார்க்கலாம் என்கின்றாள் தோழி. ஆனால் வீட்டிலே அப்பனும் அம்மையும் அண்ணன்மாரும் அவளுக்கு வேறு இடத்தில் மணம் பேசுகின்றார்கள்.
தோழி அந்தப் பெண்ணின் வளர்ப்புத் தாயிடம் கோபமாகச் சொல்கின்றாள். ஒரு பெண்ணின் மனம் அறிந்து நீங்கள் அறவழியிலே நடக்காவிட்டால் வள்ளிக் கொடியிலே கிழங்குகள் தோன்றமாட்டா. மலையிலே தேன்கூடு கிடைக்காமல் போய்விடும் வயலிலே தினை விளையாது ஒரு தவறும் செய்யாத பெண்கள் கணவனைத் தெய்வம் என்று வணங்கி எழுவதால் தான் அவர்கள் அம்புகள் குறி தவறாமல் இருக்கின்றன. எனவே அனைத்தையும் பெரியவர்களான நீங்கள் யோசித்து நடவுங்கள் என்றாள்.
தோழி சொன்ன செய்தி அப்பெண்ணைப் பெற்றவள் காதுகளுக்கும் தந்தைக்கும் அண்ணன்மாருக்கும் தெரியவர அவர்கள் கோபம் தணிந்து அந்தக் காதலை ஏற்றுக் கொண்டு அவர்களின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
அனைத்துமே நன்மையாக அமைந்ததில் அந்தப் பெண்கள் இருவரும் மகிழ்வு அடைகின்றார்கள். கலித்தொகையிலே முப்பத்தொன்பதாவது பாடலாக இது தொகுக்கப்பட்டுள்ளது. கபிலர் என்ற புலவர் பாடியிருக்கின்றார். பாடல் நீளம் கருதி சில அடிகள் கட்டுரையில் தவிக்கப்பட்டுள்ளன. அந்த இரு பெண்களின் மகிழ்ச்சியையும் விபரிக்கின்றார் கபிலர்.
தோழி கேட்கின்றாள் கல்யாணத்தின் போது அவனை நீ முன்னரே தெரிந்தவன் போல பார்ப்பாயா அல்லது தெரியாதவன் போல காட்டிக் கொள்வாயா
அதற்கு மணப்பெண் சொல்கின்றாள் என் கண்களை உனக்குத் தருகின்றேன். நீ உன் கண்களை கைகளாலே பொத்திக்கொண்டு என் கண்களாலே பார். அது நானும் பார்த்தது போல அமையும் என்கின்றாள்.
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண் புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அரு மழைதரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;

சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ் வீழர் வரை மிசைத் தேன் தொடர்
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;

காந்தள் கடி கமழும் கண் வாங்கு இருஞ் சிலம்பின்
வாங்கு அமை மென்தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
என ஆங்கு,அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்

அவரும் தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக் கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொலோ
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென் மன் கொலோ

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண்

இங்கே முக்கியமான இரு செய்திகள் பேசப்படுகின்றன. முதலாவது பெண்கள்; தம் கற்பின் வலிமையை நிரூபித்துக் காட்ட வானத்திலிருந்து மழையைப் பெய்விக்கும் ஆற்றலோடு அல்லது அந்த நம்பிக்கையோடு வாழ்ந்திருக்கின்றார்கள். மற்றது கணவனைத் தெய்வமென்று வணங்கித் துயில் எழும் பண்பாடு பெண்களிடம் இருந்ததால் அது கணவன்மாருக்கு நன்மையைக் கொடுத்திருக்கின்றது என்பதாகும்.
இந்த இரு கருத்துக்ளையும் கலித்தொகையிடம் இருந்து கடன் வாங்கித்தான் திருவள்ளுவர் தனது வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்திலே மிகவும் புகழ் பெற்ற ஐந்தாவது குறளை எழுதினார்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இளங்கோவடிகள் கம்பன் முதற்கொண்டு திருக்குறளில் இருந்து கடன் எடுக்காத இலக்கியவாதிகள் இல்லை. அந்தத் திருக்குறளுக்கே சங்க இலக்கியம் கருத்துக்கடன் வழங்கியிருக்கின்றது,

இரா.சம்பந்தன்

கனடா தமிழர் தகவல் 5.1.2026 இதழில் நான் எழுதிய கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.