கனியாத காலம்!
கூட்டிலுள்ள பறவையெனக் குடும்பப் பெண்ணாய்
குனிந்ததலை நிமிராமல் வாழ்ந்த நானும்
வாட்டிநிற்கும் வறுமையினைப் போக்க எண்ணி
வருமான ஆசையினால் யூரியுப் போனேன்
வீட்டினையும் அடுப்படியில் சமையல் செய்யும்
விளக்கமதை மட்டும்தான் முதலில் போட்டேன்
கூட்டுமென நான்நினைத்த லைக்கு எல்லாம்
குறைந்து கொண்டே போகநான் பிறரைப்போல
நாட்டிலுள்ள நடப்புகளை எடுத்துப் பேசி
நாலுபத்து லைக்குகளைக் கூட்டப் பார்த்தேன்
போட்டபல செய்திகளில் லைக்குக் காக
பொய்யான சிலபலதும் கலந்து சொன்னேன்
கேட்டபல நற்பெயர்கள் யூரியுப் தன்னில்
கீழிறங்கி லைக்குகளும் குறைய மீண்டும்
ஆட்டமுடன் அழகான சேலை கட்டி
அப்படியும் இப்படியும் பேசிப் பார்த்தேன்
வாட்டமுற வைத்ததெந்தன் லைக்கு கோபம்
வந்ததனால் அரைகுறையாய் உடுப்புப் போட்டேன்
காட்டிலுள்ள எருமைகுளம் கிடத்தல் போல
கட்டிலிலே கால்பரப்பிக் கிடந்து பார்த்தேன்
கொட்டியது லைக்கெல்லாம் கோடி யாக
கோவணத்தில் எனைப்பார்த்த பொடியள் எல்லாம்
போட்டியிட்டுச் செல்நம்பர் வட்ஸ்அப் கேட்க
பொங்கியது சனல்கிடைத்த காசால் உள்ளம்
ஓட்டமிது எத்தனைநாள் இப்போ மீண்டும்
ஓன்றிரண்டு குறைகிறது லைக்கும் காசும்
காட்டவென இரண்டுசொத்து இன்னும் உண்டு
காலந்தான் கனியவில்லை அதற்கு இன்னும்!
இரா.சம்பந்தன்