|

கண்ணதாசனும் மே மாதமும்!

அது அவன்தான் மனிதன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த காலம். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்திலும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையிலும் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு பாடல்களை எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசன் ஒப்பந்தமானார்.

எல்லாப் பாடல்களையும் எழுதிக் கொடுத்த கவிஞர் ஒரு காதல் பாடலை மட்டும் எழுதிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். திருலோகச்சந்தர் ஒரு முறை விஸ்வநாதனிடம் மே மாதத்துக்கு முன்பு எனக்கு பாட்டு வேண்டும் என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

அன்று முதல் கண்ணதாசனைக் காணும் போது எல்லாம் மே மாதம் பாட்டு வேண்டும் என்று விஸ்வநாதன் நச்சரிக்கத் தொடங்கினார்.

ஒருநாள் கண்ணதாசன் என்னடா விச்சு எப்ப பார்த்தாலும் ஆடு மாதிரி மே மே என்று கத்திக்கொண்டு நிக்கிறாய் உனக்கு மே தானே வேணும். நில்லு எழுதித் தாறேன் என்று அற்புதமான பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தார்.

அந்தப் பாடல்தான் அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே என்ற பாடலாகும். இதில் என்ன வியப்பு என்றால் அந்தப் பாடலின் அத்தனை வரிகளும் மே மே என்றுதான் முடியும். அதில் இருபத்திரண்டு மே வரும். அது தான் கண்ணதாசன்.

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்றமே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

இரா.சம்பந்தன் (படித்ததில் பிடித்தது!)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.