கண்டுகொள்ளப்படாத கண்ணதாசன் பாடல் ஒன்று!
கம்பன் நிலத்து நிற்பதற்கு அவன் எடுத்துக் கொண்ட காவியப் பொருள் காரணமாயிற்று. பாரதியார் புகழ் பெறுவதற்கு அவரின் தேசபக்திப் பாடல்கள் காரணமாயிற்று. பாரதிதாசன் போற்றப்படுவதற்கு அவரின் தமிழ்ப் பற்றுக் காரணமாயிற்று. கலைஞர் நிலைத்திருக்க அவரின் அடுக்கு மொழி காரணமாயிற்று. அதுபோலக் கண்ணதாசன் நிலைத்து வாழ அர்த்தமுள்ள இந்து மதம் யேசுகாவியம் போன்றவற்றோடு திரைப்படப் பாடல்களும் காரணமாயின.
எல்லோராலும் விரும்பப்படும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருக்கின்றார். அவரின் தத்துவப்பாடல்கள் ஆட்சி செய்யும் மனங்களும் ஏராளம். சோகப்பாடல்கள் காயப்படுத்திய மனங்களும் ஏராளம். காதல் பாடல்கள் புகுந்து கொண்ட மனங்களும் ஏராளம். கண்ணதாசன் பாடல்களை இந்தக் கண்ணோடத்திலேயே பார்த்துப் பழகிப் போன தமிழ்ச் சமுதாயம் அவரின் பாடல் ஒன்றை தலைமேல் போற்ற மறந்துவிட்டது.
அது 1968ம் ஆண்டு வெளியான உயிரா மானமா என்று ஒரு படம். மெல்லிசை மன்னர் எனப்படும் விஸ்வநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் பின் உதவிக்கு ஈஸ்வரியும் இணைந்து பாடிய பாடல் ஒன்றை அந்தப் படத்துக்கு கண்ணதாசன் எழுதினார். தனது தேசபக்தி பாரதியாருக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதைக் கண்ணதாசன் நிறுவி விட்டுப் போன பாடல் அது.
அவரின் தேசபக்திக்கு சான்றாக பாரதவிலாஸ் போன்ற படங்களில் பாடல்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் தனிப்பாடல்கள். மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்த எழுதிய பாட்டிலே நாட்டுப்பற்றை உட்கார வைத்த கவிதை உத்திக்காக இந்தப் பாடலை இங்கே பேசவேண்டியிருக்கின்றது. பாடல் இதுதான்.
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு
ஒரு சோவியத் யூனியன் பெண்ணும் தமிழ் இளைஞன் ஒருவனுக்குமான காதல் பாடல் இது. மணப்பெண் என்றால் சீதனம் வேண்டுமே. அந்தப்பெண் கொண்டுவந்த சீர்வரிசையைப் பற்றி கண்ணதாசன் விபரிக்கின்றார்.
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நாங்கள் உமகளித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
இந்த வரிகள் மிகப்பெரிய செய்தியொன்றை எடுத்து விளக்குகின்றது. சோவியத் யூனியன் இந்தியாவுக்கு குறிப்பாகத் தமிழ் நாட்டுக்குச் செய்த உதவி நெய்வேலி அனல் மின் நிலையமாகும். இந்த
நெய்வேலி அனல் மின் நிலையம் இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1962 ஆம் ஆண்டு தெற்காசியாவின் முதல் மற்றும் ஒரே பழுப்பு நிலக்கரி மின் நிலையமாக நிறுவப்பட்டது. இந்தோ-சோவியத் கூட்டு முயற்சியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக முதலாம் அனல் மின் நிலையம் 9 அலகுகளுடன் உருவாக்கப்பட்டது.
அடுத்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சோவியத் யூனியன் செய்த உதவியைக் கையில் எடுக்கிறார் கண்ணதாசன். அப்போது வரலாற்றச் சிறப்பமிக்க தூத்துக்குடி துறைமுகத்தின் விரிவாக்க வேலைகளில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருந்தது சோவியத் யூனியன்.
வருங்காலத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு மிகப்பெரிய கப்பல்கள் வரும். தமிழகத்தின் கடல் வாணிபம் பெருகும். செல்வம் தமிழ்நாட்டிலே குவியும் எங்கள் தமிழகமே பூந்தோட்டமாக மாறிவிடும். இவையெல்லாம் நீ கொண்டுவந்த சீதனமல்லவா என்று அந்தப் பெண்ணுக்கு மகிழ்வோடு சொல்கிறான் காதலன்.
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே
செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே
எங்கள் தமிழ் நாட்டுக்கு கேரளம் என்று ஒரு தங்கை இருக்கின்றாள். அங்கே அழகான நதிகள் இருக்கின்றன. அங்கே நீ வந்து தவழ்ந்து விளையாடினால் உனக்கு மகிழ்வு ஏற்படும் என்று இன்னொரு செய்தியையும் சொல்கிறான் அவன்.
தமிழ்மொழி கொண்ட நங்கை
தங்க நிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே
நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே
இந்த வரிகள் பாரதியாரின் கவிதையொன்றை எதிர்த்துப் போராடுகின்றன. சிந்துநதியின் மிசை நிலவினிலே சேரநன்நாட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டிவிளையாடி வருவோம் என்றார் பாரதியார். சிந்துவின் முதன்மையான நீர் ஆதாரம் திபெத்தில் உள்ளது; திபெத்தில் தோன்றிய சிந்து ஆறு பின்னர் லடாக் மற்றும் பால்டிஸ்த் வழியாக வடமேற்குப் பகுதியில் காரகோரம் மலைக்கு தெற்கே கில்கித் நோக்கி செல்கிறது.
கண்ணதாசன் சொன்னார். நாம் அங்கேயெல்லாம் போய்த்தான் மகிழ்ச்சியைச் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. கேரளத்திலேயே அதை அனுபவிக்கலாம் வா என்கிறார் அவர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு வெளிநாட்டுப் பெண்ணுடன் காதல் பாட்டு எழுத வேண்டும் என்றபோது வாலியால் பைச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ என்று தான் எழுத முடிந்தது. ஆனால் உயிரா மானமா என்ற படத்துக்கு சோவியத்யூனியன் பெண்ணோடு ஒரு காதல் பாட்டு எழுதுங்கள் என்று கே.எஸ். கோபாலகிருஸ்னன் கேட்டுக்கொண்ட போது இவ்வளவு விடயத்தையும் ஒரு காதல் பாடலிலே உள்ளடக்கி எழுதிக் கொடுத்தார் கண்ணதாசன்.
அவருடைய இந்திய தேச பக்தியும் தமிழ்நாட்டுப் பற்றும் சோவியத் யூனியன் மீது கொண்ட மரியாதை போன்றனவெல்லாம் நிறைந்து கிடக்கும் இந்தப் பாடலை வெறும் சினிமாப்பாடலாகவே எண்ணிக் கொண்டு தமிழ்ச்சமூகம் கடந்து போனது தான் மிகவும் கவலைக்குரிய ஒரு செய்தியாகும்.
இரா.சம்பந்தன்
(கனடா தமிழர் தகவல் 5.8.2025 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது)