ஐந்து பூதமும் – அழியும் உடல்களும்
தத்துவக் கவிதை
தண்ணீருள் தண்ணீரும் வீழ்ந்து போனால்
தவறியங்கு விழுந்ததண்ணீர் சாவ தில்லை
விண்ணோக்கி எரிகின்ற நெருப்பி னோடு
வேறுமொரு தீகலந்தால் சாவ தில்லை
தோண்ணூறு மணிவேகக் காற்றி னுள்ளே
தொற்றுகின்ற புதுக்காற்றும் சாவ தில்லை
மண்ணோடு மண்கலந்து போனால் கூட
மடிவதில்லை சேர்ந்தமணல் உயர்ந்து நிற்கும்
கண்காணா விண்ணேறி வீழும் எல்லாம்
வாழாமல் செத்ததில்லை மனிதன் பெற்ற
எண்சாணில் அமைந்தவுடல் மட்டும் இந்த
ஐம்பூதத் தாக்குதலால் அழியு மென்றால்
புண்போன்ற எம்முடலை ஐந்து பூதப்
பொருட்கலவை என்றுரைத்தல் தவறு தானே
உண்ணாமல் சிலநாட்கள் கிடந்தால் பாயில்
உருக்குலையும் உடல்களைநம் பூதம் காவா
பெண்னோடு உடல்பாதி கலந்து நின்றார்
பிறப்பித்தார் உயிரினத்தை அல்ல அல்ல
விண்ணோடு தெய்வமது உதித்த போதே
வேறுபல உயிரினமும் தோன்றிற்று அன்றே!