எனது சிந்தனை!
மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை
மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை
கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக்
கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை
கேடுகெட்ட நீதிமன்றம் சிலுவை மீது
கிடத்திவைத்த தண்டணையைப் பெற்ற போதும்
கூடிநின்றார் முன்னிலையில் மூன்று நாளில்
கொன்றவர்க்கும் கண்விழித்து அருள்செய் தானைப்
பாடுதற்கும் பணிவதற்கும் எதுவும் சொல்லாப்
பரமசிவன் சைவநெறி பிறந்தேன் நானும்
தேடுதற்கு அரியபரம் பொருளை வாழ்வில்
தில்லையிலே நடராஜன் என்றால் என்ன
தேவனெனச் சர்ச்சுகளில் சொன்னால் என்ன
வாடிமுகம் சோர்வதில்லை தெய்வம் ஆனால்
வழக்குகளும் சச்சரவும் எமக்குள் தானே!