இலாபத்தை வென்ற நட்டம்!
பெருமழையாம் பின்னேரம் நீங்கள் சென்று
பின்கதவுக் கண்ணாடி பூட்டி னேனா
ஒருமுறைதான் பாருங்கோ காரை என்று
ஓடிவந்து மனைவிசொல்லிக் குளிக்கப் போனாள்
தெருமுனையில் வீட்டருகே நின்ற காரைத்
தேடிப்போய் நான்பார்த்துத் திரும்பி வந்தேன்
வரும்பொழுதே ஓரிரண்டு துளிகள் வீழ
வந்திருந்து வெளியாலே மழையைப் பார்த்தேன்
செடிகொடிக்கு ஒருவாரம் தண்ணீர் போதும்
செலவில்லை தண்ணீர்பில் குறையும் என்ற
முடிவுடனே நிம்மதியாய் இருந்த நெஞ்சின்
மூலையியிலே வலியொன்று வந்தே போகும்
இடிமழைதான் புறநாட்டில் வந்தால் நாங்கள்
இறங்கியெங்கள் கார்க்கதவை மட்டும் தானே
படிவரைக்குப் ஓடிப்போய்ப் பார்த்து வந்து
பக்குவமாய் இருக்கின்றோம் இங்கே ஆனால்
புழுதிமணம் வீசுகின்ற குளிர்ந்த காற்றை
புறநாட்டில் கண்டதில்லை இன்று நாங்கள்
கொழுவிக்கொடி காய்ந்தபல சேலை வேட்டி
குழந்தைகளின் சட்டையென்று ஓடிச் சென்று
நழுவிநிலம் வீழ்தவையும் எடுத்து வந்த
நாளையெல்லாம் பார்த்ததில்லை நனையும் ஆட்டை
எழுதுகின்ற கணக்கையக்கா மூடி விட்டு
எழுந்துசென்று பிடிப்பதுவும் இல்லை இங்கே
முற்றத்தில் காயவைத்த விறகை அம்மா
முழுமூச்சாய் அள்ளிடுவாள் ஓடிச் சென்று
பற்றற்ற ஞானிகளைப் போலக் காகம்
பலவேலி கிழுவைகளில் இருக்கும் அங்கே
குற்றத்தை புரிந்தவர்போல் தலையைச் சாய்த்து
கோழியெலாம் குடிலோரம் கூடி நிற்கும்
சுற்றத்தை எங்கிருந்தோ கூட்டி வந்து
சுவரேறும் எறும்பினமும் இல்லை இங்கே
ஊரைவிட்டு வெளியேறிப் போகா விட்டால்
உருக்குலைந்து போயிருக்கும் எங்கள் வாழ்வு
கூரையெலாம் கோபுரமாய் ஊரில் மாறக்
கொட்டியது புறநாட்டுக் காசு தானே
ஆரையெல்லாம் ஏமாற்றப் பழசைப் பேசி
அழுவதெல்லாம் எனக்கேட்பார் உண்டு ஆனால்
வேரைவிட்டுப் புறநாட்டில் கண்ட லாபம்
வென்றதில்லை நாமடைந்த நட்டம் தன்னை!
இரா.சம்பந்தன்