இறைவனுக்கு வந்த பயம்!
சைவ சமயத்தின் மீதும் சிவபெருமான் மீதும் கொண்ட மிகுந்த பற்றின் காரணமாக பாண்டிய நாட்டு அரசியான மங்கையர்க்கரசி திருவாலவாய் கோவிலுக்கு தினமும் சென்று தொண்டு செய்து வந்தாள். இறைவனுக்கு பயம் வந்துவிட்டது.
என்னதான் அரசியாக இருந்தாலும் வருபவள் பெண். என்னதான் கடவுளாக இருந்தாலும் நான் ஆண். நாங்கள் இருவரும் என்னதான் தூயவர்களாக இருந்தாலும் நாளைக்கு ஊர் உலகத்திலே ஒரு தப்பான செய்தி வரக்கூடாது. அன்போடு பணி செய்ய வரும் மங்கையர்க்கரசியையும் வராதே என்று சொல்வதும் சரியல்ல.
இறைவன் பார்த்தான். தன் மனைவியாகிய அங்கையற்கண்ணியை அழைத்து இந்தப் பெண் வந்து பணிவிடை செய்துவிட்டுப் போகும் வரை நீ எனக்குப் பக்கத்திலே இரு என்று கூறிவிட்டான்.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
(திருஞானசம்பந்தர் தேவாரம் – திருவாலவாய்)
இரா.சம்பந்தன்