இரண்டு ரூபாய் கள்ளு!
ஒற்றையடிப் பாதையிலே நடந்து சென்று
உறவினர்கள் தலைதெரிந்தால் ஒளித்து நின்று
பற்றையதன் பின்னாலே வைத்து விற்ற
குற்றமிது என்றுமனம் சொல்லச் சொல்ல
குடித்துவிட்டு இரணடு ரூபாய் தாளை நீட்டி
மற்றவர்க்கு தெரியாமல் வாங்கி வைத்த
மலபாரின் பீடியினை வாயில் வைத்து
வெற்றிலையின் கடையினிலே கயிற்றில் தொங்கி
வேலியிலே புகையின்ற நெருப்பில் மூட்டி
புற்களுக்கு நடுவினிலே சாம்பல் தட்டி
புகையிழுத்து வரும்போதே தும்மி மூக்கை
வெற்றுவிரல் இரண்டாலே சீறி அங்கே
வீதியிலே மின்கம்பத் தூணில் பூசி
புற்றோரம் தலைகாட்டும் பாம்பு போல
புறத்தட்டிப் படலைக்குள் நுளைந்து சென்று
பெற்றவர்க்கும் தெரியாமல் வாழ்ந்த வாழ்வை
பிறநாட்டில் போய்வாழ்ந்து போத்தல் கோழி
மற்றவற்றால் அடைந்தவர்கள் யாரும் இல்லை
மனமகிழ்வும் புறநாட்டுக் குடியில் இல்லை.