இன்று நினைத்தால் இதுவும் தவறுதான்!
சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட இந்து மதத்திலே திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு முறை திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையில் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்த போது சிவன் சோதி வடிவாக தோன்றி அந்தச் சோதியின் அடியையும் முடியையும் யார் கண்டு பிடிக்கின்றார்களோ அவரே பெரியவர் என்றான்.
உடனே பிரம்மா அன்னப் பறவை வடிவம் தாங்கி முடியைத் தேடிச் செல்ல திருமால் பன்றி வடிவம் எடுத்து நிலத்தை அகழ்ந்து சோதியின் அடியைக் காணச் சென்றார். இருவரும் தம் முயற்சியில் வெற்றி பெறாமலேயே திரும்பினார்கள் என்பது புராணக் கதை.
ஒவ்வொரு தடவையும் பத்துப் பாட்டுகளாகப் பதிகம் பாடிய சம்பந்தர் மறக்காமல் எல்லாப் பதிகத்திலும் ஒன்பதாவது பாட்டாக இந்த அடிமுடி தேடிய கதையைப் பாடுவார். உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அவரின் மந்திரம் ஆவது நீறு என்ற திருநீற்றுப் பதிகத்தை எடுத்துக் கொண்டால் ஒன்பதாவது பாட்டு மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு என்றும் திருகோணமலைப் பதிகத்தை எடுத்துக் கொண்டால் ஒன்பதாவது பாட்டிலே பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரும் அறியா என்றும் பாடியிருப்பதைக் காட்டலாம்.
சிறுவனான சம்பந்தர் இப்படிப் பாடினார் என்றால் சாத்வீகமே உயிர் மூச்சாகக் கொண்டவரும் திருப்பணிகளையே கடமையாக நினைத்தவரும் எண்பத்தொரு வயதுவரை வாழ்ந்த முதியவருமான நாவுக்கரசர் தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று பாடினார்.
தன் பதிகங்களிலே இறைவனைத் தன் நண்பன் என்று காட்டிக் கொண்ட சுந்தரர் தனது திருவண்ணாமலைப் பதிகத்திலே காண்டற்கரிய கடவுளாய் நீண்டவன் நாராயணன் நான்முகனுக்கே என்று தானும் அந்த அடிமுடி தேடிய செய்தியை விபரித்துப் பேசுவார்.
மந்திரியாகப் பதவி வகித்த மணிவாசகர் தன் திருவாசக்திலே பல இடங்களில் அடி முடி தேடிய கதையை எடுத்துப் பேசுவார். மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் என்று திரு திருவெம்பாவையிலும் திருமாலும் பன்றியாச் சென்றுணராத் திருவடியை என்று திருத் தௌ;ளோணத்திலும் பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நான்மறையும் போயறியா சேவேறு திருவடி என்று திருக்கோத்தும்பியிலும் பாடுவாhர் அவர்.
இந்த நால்லரையும் இந்து சமயத் தூண்கள் என்று வரலாறு சொல்லும். சமண பௌத்த மதங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி வெற்றிபெற்று இந்து மதத்தைக் காப்பாற்றிய இவர்கள் இன்றும் இந்து மக்கள் மனங்களிலே வாழ்கின்றார்கள். பிரச்சனை அதுவல்ல.
தங்களைப் போலவே வைணவ மக்களால் வழிபடு தெய்வமாகக் கொண்டாடப்படும் ஒரு கடவுளை அடிமுடி தேடித் தோற்றார் என்று புராணங்கள் சொன்னாலும் நாகரீக நெறி உணர்ந்த அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு தங்கள் தேவார திருவாசகங்களில் அது பற்றிப் பேசலாமா என்பது தான் கேள்வி.
தசாவதாரத்திலே வாரக அவதாரம் என்று ஒரு பன்றி அவதாரம் பற்றி வைணவ நூலான திவ்யப் பிரபந்தம் கூடப் பேசுகின்றதே என்று இவர்கள் சமாதானம் சொல்லலாம். அது நியாயமான வாதம் அல்ல. தங்கள் சொந்தக் கடவுளைப் பற்றி வைணவம் எது வேண்டுமானாலும் பேசட்டும். இன்னொரு சமயம் அது பற்றிப் பேசுவது ஏற்புடையது அல்ல.
வேற்று மதத்தவராக இருந்தாலும் இளங்கோவடிகள் சிவனையும் திருமாலையும் ஏற்றத்தாழ்வு இன்றி தன் இலக்கியம் முழுவதும் பேசுவார். இந்த நாயன்மார்கள் காலத்துக்குப் பின்பு தோன்றியவன் கம்பன். அவன் திருமாலைக் குல தெய்வமாகக் கொண்டிருந்தாலும்; எங்கே பிற கடவுளரைப் பற்றிப் பாட வேண்டி வருகின்ற போதும் சிவனை முதலில் சொல்லி மற்றத் தெய்வங்களைப் பின்பு சொல்லும் ஒரு மரபைப் பின்பற்றினான்.
என் அனைய முனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையர் ஆனால்
பல் நகமும் நகு வெள்ளிப் பனி வரையும்
பால் கடலும் பதும பீடத்து
தன் நகரும் கற்பக நாட்டு அணி நகரும்
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ?
இகல் கடந்த புலவு வேலோய்!
(கம்பராமாயணம் – பாலகாண்டம் – கையடைப்படலம்)
இந்தப்பாடலில் கம்பன் இறையுலங்களை வரிசைப்படுத்திக் காட்டுவான். எல்லா மலைகளையும் பார்த்து இகழ்கின்ற வெள்ளிப்பனி மலையான சிவன் உறையும் கைலாசமலை அடுத்து திருமால் உறையும் பாற்கடல் இருக்கும் வைகுண்டம் பின்பு தாமரையை இருப்பிடமாகக் கொண்ட பிரமன் உறையும் சத்திய உலகம் கற்பக தருக்கள் நிறைந்த இந்திரனின் மனோவதி என்று வரிசைப்படுத்தி தன் தெய்வமான திருமாலின் வைகுண்டத்தை இரண்டாவதாக சொன்னான் கம்பன்.
அவன் நினைத்திருந்தால் தனது இலக்கியத்திலே திருமாலை முதலில் சொல்லி சிவனைப் பின்பு சொல்லியிருக்கலாம். அப்படி அவன் செய்யவில்லை. அது மட்டுமல்ல கிடகிந்தா காண்டத்திலே அநுமனைப் புகழும் போது கீழ்ப் படாநின்ற நீக்கி கிளர்படாது ஆகி என்றும் நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும் கோட்படாப் பதமே ஐய! குரங்கு உருக்கொண்டது என்று சிவனின் பெருமை பற்றிப் பேசி அந்தச் சிவனே அநுமனாக வந்து விட்டான் என்று பாராட்டுவான்.
அப்படி ஒரு நாகரீக வரலாறு பின் வந்தவர்களிடம் இருக்கும் போது இந்த நான்கு பேரும் திருமாலின் எத்தனையோ போற்றத்தக்க செயல்கள் இருக்க அடி முடி தேடிய கதையை மட்டும் திரும்பத் திரும்ப பேசியிருக்கிறார்கள். கிறீஸ்தவர்கள் இந்து மக்களைப் புண்படுத்தும் போது மனம் நோகும் நாம் சமயகுரவர்கள் வைணவ மக்களைப் புண்படுத்தியதைப் பக்தியோடு பார்க்கின்றோம். இது தான் உலகம்.