ஆமையும் – கொக்கும்!
நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்கு
நெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டு
கூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்
குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும்
சீர்கெட்ட குளத்திலே இனியும் – நாங்கள்
சிறப்புடன் வாழவே முடியாது வேறு
ஊர்சென்று குளந்தேட வேண்டும் – அதுவே
உயிர்வாழ வழியென்று பேசிய போதில்
கனகாலம் அவற்றுடன் நட்பாய் – வாழ்ந்து
காலத்தைப் போக்கிய நண்பனாம் ஆமை
கனமான மனத்துடன் வந்து – கொக்குகள்
கால்களைப் பிடித்துமே கவலையாயச் சொல்லும்
பறக்கச் சிறகுண்டு உமக்கு – அதனால்
பறக்க நினைக்கிறீர் குளத்தினை விட்டு
இறக்கப் போகிறேன் நானும் – இந்த
இரையற்ற குளத்திலே சிறகற்று வாழ்ந்தே
போவதாய் இருந்தால் நீங்கள் – என்னையும்
போகும் இடத்துக்கு அழையுங்கள் இல்லைச்
சாகவே விடுவதாய் இருந்தால் – நீங்கள்
சரியென்று படுவதைச் செய்யுங்கள் என்னும்
குடிகொண்ட நாள்முதல் ஒன்றாய்க் – குளத்தில்
கூடவே வாழ்நிதிட்ட ஆமைக்கு உதவத்
தடியொன்றை எடுத்துமே வந்து – கொக்கும்
தங்களின் திட்டத்தை ஆமைக்குச் சொல்லும்
இரண்டு முனையிலும் தடியை – நாங்கள்
தூக்கிப் பறக்கிறோம் நடுவிலே நீயும்
இரண்டு உதடுகள் பல்லால் – தடியை
இறுகக் கவ்விக்கொள் உயரத்தில் பறப்போம்
எந்த நிலையிலும் நீயும் – எந்தக்
காரணத் தாலுமே வாய் திறக்காதே
அந்தக் கொக்குகள் சொல்லி – சிறகை
அடித்துப் பறந்தன ஆமையை சுமந்து
வழியிலே ஒருபள்ளிக் கூடம் – அங்கு
படிக்கின்ற மாணவர் ஆமையைப் பார்த்து
விழியிலே வியப்புடன் கத்த – எங்கள்
விதிகெட்ட ஆமையும் வாயினைத் திறக்கும்
மதிகெட்ட ஆமையும் கீழே – வீழ்ந்து
மறுகணம் உயிரினை விட்டதே பாவம்
கதியற்று வருந்தின கொக்கும் – அந்தக்
களிமண் ஆமையின் மூளையை நினைத்தே
நன்றியை மறவாமல் செய்ய – எமக்கும்
நண்பர்கள் இருக்கிறார் கொக்குகள் போல
ஒன்றுமே சிந்திப் தில்லை – நாங்கள்
வாயைத் திறக்கிறோம் ஆமையார் போன்றே!