இந்திர விழாவும் இரண்டு காப்பியங்களும்!
அன்று ஒலிபெருக்கி இல்லை. அச்சு அமைப்புகளும் இல்லை. அரசு ஆணைகளையும் பிற செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்க யானையின் பிடரியிலே நெய் பூசப்பட்ட பெரிய முரசத்தை ஏற்றி வைத்து வள்ளுவன் என்று சொல்லப்படும் குற்றமற்ற பணியாள் அதனைக் குறுந்தடி கொண்டு அடித்து ஒலியெழுப்பி மக்களைக் கூடச்செய்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டான்.
மணிமேகலை என்ற நூலிலே இந்திரவிழா கொண்டாட்டத்துக்கான அரசு அறிவுறுத்தல்கள் அவ்வாறு பகிரப்பட்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. செய்திகள் பகிரப்பட்ட விதம் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஒரு விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட செய்திகள் தான் விழுமிய சமுதாயம் ஒன்றை எமது மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
முதலில் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. வீதிகளில் தோரணங்களைக் கட்டுங்கள். வாசல்களிலே பூண கும்பம் வையுங்கள் பெண்கள் கைகளில் ஏந்துவது போன்ற பாவை விளக்குகளை அழகுற ஏற்றுங்கள். காய்த்த குலையோடு கூடிய கமுகும் தென்னையும் கரும்போடு நட்டு வையுங்கள். திண்ணைகளுக்கு மேலுள்ள தூண்களில் முத்துமாலைகளை தொங்க விடுங்கள். வீதிகளிலும் மன்றங்களிலும் பழைய மணலை அகற்றிவிட்டு புது மணலைக் கொண்டுவந்து பரப்பி வையுங்கள். தொடர் கொடிகளையும் கம்பங்களை நட்டுத் தனிக் கொடிகளையும் பறக்க விடுங்கள்.
தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
அடுத்து மதவாதிகளுக்கான அறிவுத்தல் விடுக்கப்படுகின்றது. நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் கோவில் முதல் சிறிய தெய்வமான சதுக்க பூதம் வரையுள்ள கோவில்கள் பல இங்கே இருக்கின்றன. அவற்றின் வழிபாட்டு முறைகள் வேறுபட்டவை. அவற்றின் மரபுகளை நன்றாகத் தெரிந்தவர்கள் அந்தச் சமயநெறிகளின் பிரகாரம் பூசைகளைச் செய்து கொள்ளுங்கள்.
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
அடுத்து கல்வியறிவு படைத்த சான்றோர்கள் இதைக் கேளுங்கள். குளிந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் மரநிழல்களிலும் கூடியிருக்கின்ற மக்களுக்கு புண்ணிய நல்லுரைச் சொற்பொழிவுகளை நீங்கள் ஆற்றுவீர்களாக.
அது போல எனது சமயம் பெரிது எமது கொள்கைதான் நல்லது என்று பட்டிமன்றம் செய்ய நினைப்பவர்கள் நீங்கள் வாதிட்டுத் தீர்வு காண்பதற்கு ஏற்ற இடங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை அறிந்து அங்கு சென்று பேசிக் கொள்ளுங்கள். மற்ற இடங்களில் இடையூறு செய்வது குற்றமாகக் கருதப்படும்.
தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்
இறுதியாக அனைவரது கவனத்தும் உரிய செய்தி இது. இந்த இந்திரவிழா நடக்கின்ற இருபத்தியெட்டு நாட்களும் பல ஊர்களிருந்தும் பிற தேசங்களில் இருந்தும் பலரும் வந்து கூடுவதால் கருத்து வேற்றுமைகள் எழும். ஆதனால் மனிதருக்கு மனிதர்கள் பிடிக்காமல் போகலாம். சிலருடைய செயல்களால் கோபமும் ஏற்படும்.
அப்படியான சூழ்நிலை வரும் போது நீங்கள் பொறுமையாக அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்று வீணான வாக்குவாதத்துக்கும் கலவரத்துக்கும் இடம்கொடுக்காமல் நடந்து கொள்ளுங்கள்.
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரு தமிழ் அரசாங்கம் மிகப்பெரும் விழா ஒன்றினை ஒரு மாதம் வரை நடத்தத் திட்டமிடும் போது எவற்றையெல்லாம் முன்னெச்சரிக்கையாகச் செய்து கொண்டது என்பதற்கு மணிமேகலைக் காப்பியத்தின் இந்த விழாவறை காதை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இனிச் சிலப்பதிகாரம் இந்திரவிழா பற்றிச் சொல்லும் போது அந்த விழாவை முன்னிட்டு போரிலே தோற்றுக் கைதிகளாக இருந்த பிற மன்னர்கள் விடுதலை செய்யப்பட்ட கருணை மிகுந்த செயல்களும் அந்நாளில் நிகழ்ந்தன என்று குறிப்பிடும்.
கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்
இத்தனை சிறப்பாக அரசு இயங்கியும் தீயவர்களும் நாட்டிலே இருந்தார்கள் என்று பட்டியல் இடும் சிலப்பதிகாரம்.தவ வேடம் தரித்துக் கொண்டு தீயன செய்பவர்கள் இருந்தார்கள். கள்ளத் தொடர்புடைய பெண்கள் இருந்தார்கள். அரசுக்கு குழி பறிக்கும் மந்திரிகள் இருந்தார்கள். அடுத்தவன் மனைவியை விரும்பும் ஆடவர்கள் இருந்தார்கள் பொய்ச்சாட்சி சொல்ல ஆட்கள் இருந்தார்கள். புறம் கூறித் திரிபவர்களும் இருந்தார்கள் என்ற உண்மையையும் மறைக்காமல் அந்தக் கால இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர்
பொய்க் கரியாளர் புறங்கூற்றாளர்
இவ்வாறு இந்திரவிழாவின் ஒரு பக்கத்தைச் சிலம்பும் மறுபக்கத்தை மணிமேகலையும் அழகாக எடுத்துக் கூறுகின்றன.
கனடா தமிழர் தகவல் 5.1.2024 இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது.