வெள்ளிகள் ஆளட்டும்!
வெடித்தவெடி குடித்தவுயிர் போதுமடா போதும்!
வெந்தணலில் வெந்தவுடல் காணுமடா தமிழா!
படித்தபடிப் பினைகளெலாம் இன்றுடனே போதும்!
பழசையெலாம் மறந்திடவே பழகிடுவோம் நாங்கள்!
பிடித்தமுயல் அத்தனைக்கும் மூன்றுகால் என்ற
பிரச்சனைகள் வாழ்க்கையிலே இனியெமக்கு வேண்டாம்!
ஒடித்தகிளை வாடிவிடும் ஊன்றிவைக்கா விட்டால்
உவமையிதன் பொருளுணர்ந்து ஒற்றுமையாய் வாழி!
காயாத ரணங்களுக்கு கண்டுவைத்த மருந்து
களியாட்டம் ஒன்றேதான்! வேறொன்றும் இல்லை!
பாயாத ஆறேதான் பார்த்திடுவோம் என்றால்
பைத்தியங்கள் என்றேதான் எமையுலகம் சொல்லும்!
ஓயாத போராட்டம் வாழ்வென்றால் எப்போ
உன்னதத்தைக் காணுவது? எண்ணிப்பார் நீயும்!
வேயாத கூரையிலும் கோழியது நின்று
வெய்யோனை சிறகடித்து கூவுவதைக் காண்பாய்!
மாய்ந்தவர்கள் போகட்டும் மனக்கவலை வேண்டாம்!
மதியற்றோர் இருந்தழட்டும்! மற்றவர்கள் எல்லாம்
காய்ந்தவிற கெடுத்திடுவீர்! கதிரவனைப் போற்றி
கனிகரும்பு பொங்கலிட்டு களித்துமனம் இருப்பீர்!
சாய்ந்தபனை பட்டதில்லை சாய்ந்துகொண்டும் வாழும்!
சரிந்தபயிர் மடடும்தான் அறுவடையைக் காணும்!
தேய்ந்தநிலா செத்ததில்லை திரும்பவந்து தோன்றும்!
தேய்ந்துவிட்ட இடைவெளியில் வெள்ளிபல ஆளும்!