ஆடு பாம்பே!
மூன்றுபத்து வருடங்களாய் முயன்று பார்த்து
முடியாமல் போய்விட்ட கனவை எண்ணி
நான்றுகொண்டு நிக்காமல் நாங்கள் எல்லாம்
நல்லவழி காண்பமென்று ஆடு பாம்பே!
ஆழ்கடலில் கொலைபுரியும் சுறாவைப் பார்த்து
அலைகடலின் கரையிருந்து புலம்பு வோரை
வாழ்கடலாம் வாழ்க்கையிலே நம்பிப் போனால்
வருமானம் இல்லையென்று ஆடு பாம்பே!
வன்னிநிலப் பெரும்பரப்பில் நின்று செத்தார்
வதைந்தமுறை கண்டபின்பும் புகுந்த நாட்டில்
தின்னுகிறார் சிங்களத்துப் பொருளை என்றால்
தீர்வொன்றும் இல்லையென்று ஆடு பாம்பே!
பொருள்கொடுத்தால் கிடைத்துவிடும் ஈழம் என்றே
புகுந்தநிலம் இருந்துபலர் நினைத்த தாலே
இருள்கிழிக்க எழுந்தபடை இழந்து நாங்கள்
இன்றடிமைப் பட்டோமென்று ஆடு பாம்பே!
உலகமெனும் ஆறுசெல்லும் பாதை மீறி
உத்தமராய் நடந்தாலும் உலகம் எம்மை
கலகநிறை கூட்டமென்று காறித் துப்பிக்
காலனிடம் கொடுக்குமென்று ஆடு பாம்பே!
புயலடித்த வீட்டினிலே உடைந்து போன
பொருள்பண்டம் அனைத்தையுமே கூட்டித் தள்ளி
அயலவரின் உதவியுடன் ஏதும் ஆக்கும்
அக்கறையே தேவையென்று ஆடு பாம்பே!
ஓட்டளித்தும் தோற்றுவிட்டால் கூட ஏதும்
ஒன்றுமில்லை! ஆனாலும் உயிர்கள் மிஞ்சும்!
வேட்டளித்து தோற்றுவிட்டால் என்ன ஆகும்?
வன்னியிலே கண்டோமென்று ஆடு பாம்பே!