அசோகவனச் சீதைகள்

 

 

மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆடி மாதத்துக் கொழுத்தும் வெய்யில் அன்றும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மாங்கறை கணுவாய் குருடிமலைப் பகுதிகளில் இருந்து கோவைக்கு மலர்களின் வாசனையைச் சுமந்து வரும் ஆடிக்காற்றானது பெரிய நாயக்கன் பாளையக் காவல் நிலையத்தின் சிறைக் கம்பிகளுக்குள்ளேயும் நுளையத்தான் செய்கிறது. மெல்லிய காற்றுப் படவே வேதனை தாங்க முடியாமல் நெளிந்தாள் காயத்திரி.

 

உடம்பு அசையும் போது உடலில் இரத்தம் உறைந்து காய்ந்து போயிருந்த காயங்கள் எல்லாம் மீண்டும் திறந்து கொண்டு இரத்த வெள்ளத்தினால் புடவையை நனைக்கின்றன. எஸ். பி சுப்பிரமணியம் நேற்று இரவு நகக் கண்களிலே ஏற்றிய குண்டூசிகளால் பத்து விரல்களும்  விண்ணென்று வலித்தன. கைதான அன்றே சொல்ல முடிந்ததை எல்லாம் சொல்லியும் பொலீஸ் விடுவதாக இல்லை.

 

 

சார்! எனது கணவர் தொழில் ரீதியாகத்தான் இவர்களைத் தெரிந்து வைத்திருந்தார். இவர்கள் ஆடர் கொடுத்த உலோகப் பொருட்களை நாங்கள் செய்து கொடுத்தோம். நல்ல பணம் தந்தார்கள். இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது வெடி குண்டின் உதிரிப்பாகம் என்று நிச்சயமாக எங்களுக்குத் தெரியாது. இவர்களுக்கு கணபதியிலும் முனுசாமி நகரிலும் நான் வீடுகளை எடுத்துக் கொடுத்த நேரத்திலும் கூட இவர்கள் போராளிகள் என்றோ இந்த வீடுகளை வேறு தேவைகளுக்காக உபயோகப்படுத்துவார்கள் என்றோ கனவிலும் நினைக்கவில்லை. என்னை நம்புங்கோ.

 

கண்ணீர் முதற்கொண்டு ஒரு பெண்ணிற்குத் தெரிந்திருக்கக் கூடிய சகல ஆயுதங்களையும் அவள் பயன்படுத்திப் பார்த்துவிட்டாள். எதுவுமே எடுபடவில்லை என்ற போது தலைகுனிந்து மௌனமாக இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. இதோ பார் திருச்சி திருநெல்வேலி கோயம்புத்தூர் இராமநாதபுரம் என்று நீங்கள் கொடுக்கிற ஆதரவிலே தான் இவர்கள் எங்கள் நாட்டுக்கே சவால் விடுகின்றார்கள். அவங்களுக்கு முன்பு உங்களைத் தொலைக்கணும். நேற்றிரவு கடைசியாக சுப்பிரமணியம் சொன்ன வார்த்தைகள் உனக்கு மீட்சியே இல்லை என்று அவளுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டன.

 

இப்போது அவளுக்கு கணவனின் ஞாபகம் வருகின்றது. வேதாரண்யம் மிராசுதார் சண்முகம் போல பொலிஸ் என் கணவனையும் கொன்றுவிட்டால்? என்ற ஏக்கம் வருகின்றது. குழந்தையின் நினைவு வருகின்றது. மூன்று நாட்களாக என் குழந்தை என்ன பாடுபடும் என்ற உணர்வு வருகின்றது. தான் படித்த பல்கலைக்கழக ஞாபகம் வருகிறது. அங்கு வாங்கிய எம். ஏ பட்டம் நினைவுக்கு வருகின்றது.

 

தெய்வமே எங்களைக் காப்பாற்று என்று நினைத்தவள் மறுகணம் அதையெண்ணித்தானே வெட்கப்பட்டுக் கொண்டாள். நேற்றிரவு விசாரணை என்ற பெயரில் அந்த இருவருக்கும் நடந்த சித்திரவதையும் அதில் பொலிஸ் அடைந்த தோல்வியும் இறுதியில் நட்பு முறையில்  முத்துக் கருப்பனிடம் அவர்கள் சொன்ன கருத்துக்களும் அவர்களுக்கு உதவி செய்ததை ஒரு பெரும் பேறாக அவளை நினைக்க வைத்துவிட்டன. கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் காட்சியை மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கிறாள் காயத்திரி.

 

அவர்கள் நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் பொலிஸ் சுற்றி வளைத்தபோது  தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு விட்டார்கள். அது கூட பொலீசைக் கண்டதும் பயந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அல்ல. தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்துக்கு தொடர்பு கொண்டு நிலையை விளக்கி விட்டு ஆயுதங்கள் கருவிகள் ஒரு சிறு காகிதம் கூட இல்லாமல் குண்டு வைத்துத் தகர்த்து தாங்களும் தகர்ந்து போனார்கள்.

 

எஞ்சிய இருவரும்தான் இப்போது சிறையில். அவள் பார்க்கும் போது இருவரின் கையும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. கணபதி நகரில் இருந்து யாழ்ப்பாண மண்ணுக்கு எத்தனையோ ஆயிரம் வெடிகுண்டுகளைச் சுமந்த கைகளில் விலங்கைக் கண்டாள் அவள். பதறிப் போனாள் ஆனால் அவர்களிடம் எந்தப் பதட்டமும் இல்லை. மூக்கினாலும் வாயிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கால்களையும் அறுத்துப் பார்த்திருக்கிறார்கள். ஓ! விசாரணை செய்தது டில்லி மாந்தர் அல்லவா? அதுதான் அப்படி. தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் அவள்.

 

தங்களால்; எதுவும் செய்ய முடியவில்லை என்ற நிலையில் போராளிகளோடு நீண்டகாலமாக உறவு வைத்திருந்த எஸ். பி முத்துக் கருப்பனிடம் அவர்களை ஒப்படைத்து விட்டு வெளியேறியது மத்திய படை! எத்தனையோ அடிகளுக்கும் உதைகளுக்கும் அசந்து கொடுக்காத அந்தத் தூண்கள் முத்துக் கருப்பனின் ‘தம்பிகாள்!’ என்ற அழைப்புக்கு நாணலாக ஆடின.

 

எங்கள் இடத்தில் நாங்களும் உங்களைப் போல அதிகாரிகள் தான். அதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று வார்த்தைகளால் கார்த்திகேயனை நிலைகுலைய வைத்த அந்த இரு எரிமலைகளும் முத்துக்கருப்பனின் அன்புக்கு முன்னால் அருவியாய்க் குளிர்ந்தன. உலகம் எல்லாம் ஆழ்ந்து உறங்கும் அந்த இரவுப் பொழுதிலே நான்கு சுவர்களுக்கு நடுவே ஆரம்பமாகிய அந்த விசாரணையை ஒரு மூலையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்திரி. இப்பொழுது அவர்களின் கைவிலங்குகள் அகற்றப்படுகின்றன.

 

தம்பிகாள் தமிழ் நாட்டிலே எத்தனையோ இடங்கள் இருக்க ஏன் நீங்கள் கோவையை தேர்ந்தெடுத்து செயற்படுகின்றீர்கள்? கோவை மக்களின் உதவியில் உள்ள நம்பிக்கையினால் என்று எடுத்துக் கொள்ளலாமா?  முத்துக் கருப்பனின் முதற் கேள்வியே காயத்திரியை என்னவோ செய்தது. ஆம் என்று அவர்கள் தலையசைத்து விட்டால் தன் நிலையை எண்ணிப் பார்த்தாள் அவள். எடுத்த எடுப்பிலேயே தான் உட்பட எல்லோரையும் பிரச்சினையில் மாட்டி வைக்கக் கூடியதாக ஒரு கேள்வியைக் கேட்ட முத்துக் கருப்பனின் அனுபவ ஞானத்தையும் அவளால் போற்றாமல் இருக்க முடியவில்லை.

 

நீங்கள் நினைப்பது தவறு. எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு மலையும் மலை சார்ந்த இடமும் கடலும் கடல் சார்ந்த நிலமும் தேவைப்படுகிறது. அதனால் மலைக்கு கோவையையும் கடலுக்கு வேதாரண்யத்தையும் தெரிவு செய்திருக்கிறோம். அது மட்டுமல்ல இலங்கையைப் போல கோவையும் ஒருபுறம் தமிழ்நாடும் மறுபுறம் கேரளாவும் என்று மாறுபட்ட ஆட்சி அதிகாரத்தையும் கொண்டிருப்பதும் ஒரு காரணம். இங்குள்ள தட்ப வெட்ப நிலையும் யாழ்ப்பாணத்தைப் போன்றுள்ளதும் ஒரு காரணம். இதைத்தவிர கோவை மக்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 

அவர்களின் அந்தப் பதிலில் தன்னை விடுவிக்கும் உணர்வு இணைந்து இருந்ததை உணர்ந்தாள் அவள். உண்மை அதுவல்ல என்று அவளுக்கு தெரியும். போராளிகளுக்கும் தங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் உறவு அரசியல் பொருளாதார சமூகக் காரணிகளுக்கு அப்பாற்பட்ட ஆத்மீகத் தொடர்பு என்று அவளுக்கு யாரும் உணர்த்தத் தேவையில்லை.

 

பொதுவாக ஈழத்தமிழர் தமிழ்நாட்டுத் தமிழர் என்று ஒற்றுமை இருந்தாலும் யாழ்ப்பாணத்தவர்கள் எம்மவர்கள் என்ற உணர்வும் ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களில் பத்து வீட்டுக்கு ஒரு வீடு இலங்கைத் தமிழருக்கு வாழ்க்கைப்பட்ட வீடு என்ற உணர்வும்தான் இன்று நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் ஆன்றோரையும் சான்றோரையும் சொந்த நாட்டிலேயே தடாக் கைதிகளாக்கி சிறையில் வாட வைத்திருக்கின்றது என்று அவளுக்குத் தெரியும்.

 

அந்தச் சு10ழ்நிலையிலும் தங்களுக்கு உதவியவர்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்று நிதானத்துடன் பேசும் அந்தப் போராளி களைப் பார்த்துப் பிரமித்துப் போனாள் காயத்திரி. ஒருவேளை எனக்கு விடுதலை கிடைத்தாலும் இவர்களுக்காகவே வாழ வேண்டும் என்று அவள் மனம் சொல்லிக் கொண்டது.

 

சார் யாராவது காட்டிக் கொடுத்துத்தான் எங்களைக் கைது செய்தீர்களா? என்று அவர்கள் கேட்பதும் இல்லை. யாரும் உங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் அடிக்கடி அதிசக்தி வாய்ந்த தொலைத்தொடர்புக் கருவிகளை இயக்கியதால் சாயிபாபா காலனி துடியலூர் பகுதிகளில் ரி.வி றேடியோ கருவிகளில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு மக்கள் முறையிட்டதால் நீங்கள் இருக்கிறீர்கள் என்று பொலீஸ் அறிந்து கொண்டது. அவ்வளவுதான் என்று முத்துக்கருப்பன் பதில் சொல்வதும் அவள் காதுகளில் தெளிவாக விழுகின்றது.

 

நீங்கள் அப்படி முட்டாள்த்தனமாக நடந்து கொள்ளலாமா? நீங்களாகத் தேடிக் கொண்ட வினையிது என்ற முத்துக் கருப்பன் நினைவை அவ்வளவுதான் என்ற சொல்லை அவர் உச்சரித்த விதத்தில் இருந்து அந்தப் போராளிகள் மட்டுமல்ல காயத்திரியும் தான் உணர்ந்து கொண்டாள்.

 

ஐயோ இந்தப் பிள்ளைகளுக்குப் படிச்சுப் படிச்சு சொன்னேன் இப்போ தமிழ்நாட்டு நிலமை சரியில்லை. எம். ஜி. ஆர், கருணாநிதி காலத்தில் இல்லாத அளவுக்கு மத்திய உளவுத்துறை தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டது கவனம் கவனம் என்று கேட்டால்த்தானே. வீணாக இன்று தி.க ஆட்கள் இராமகிருஷ;ணன் ஆறுச்சாமி எல்லாரையும் பிடித்து விட்டார்களே. எல்லாரையும் இழந்துவிட்டு இந்தப் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்களோ.

 

காயத்திரி இன்று பூந்த மல்லிக்கு மாற்றப்பட்டு விட்டாள். அந்தப் போராளிகளும் கூடத்தான். இப்போதும் கூட அவள் அவர்களுடன் தான் சேர்ந்து அடைக்கப்பட்டிருக்கிறாள். வெடிகுண்டு தயாரிப்பு வெடிகுண்டுக் கடத்தல் என்ற அடிப்படையில் அவர்களும்  அவர்களுக்கு பக்க பலமாக இருந்தது வெடிகுண்டுகளைப் பதுக்க தளம் அமைத்துக் கொடுத்தது என்று அவளும் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு நாள் அந்தச் சந்தப்பம் அவர்களுக்கு எதிர்பாராமல் கிடைத்தது.

 

அம்மா காயத்திரி நீங்கள் மூவரும் தப்பிச் செல்ல ஒரு வழி இருக்கிறது. நீங்கள் நிறையப் பணத்தை இழக்க நேரிடும். அவர்களின் ஆட்களிடம் தான் நிறையப் பணமும் தங்கமும்  இருக்கே கேட்கிறாயா? விட்டு விடுகிறோம்.

 

இந்தியாவுக்கே உரிய அந்த சாபக்கேடான தேசிய ஆசையுடன் சிறைச்சாலை அதிகாரிகள் பேரம் பேசியபோது அவள் மனதில் அந்த ஆசையும் வந்துவிட்டது. நான் தப்பிப் போகாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களைத் தப்ப வைத்து யாழ்ப்பாணம் அனுப்பிவிட்டால் என்ன? என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி நின்றது.

 

காயத்திரி தப்பிப் போயும் தொல்லைதானே என்று யோசிக்கின்றாயா? நீ போக வேண்டாம். அவர்களை அனுப்புவோம். பின்பு உனது வழக்கும் ஆட்டம் கண்டு விடும். நீ விரைவில் விடுதலை செய்யப்பட்டு விடுவாய். என்ன சொல்கிறாய்? கனக்க வேண்டாம் முடிந்ததை வாங்கிக் கொடு. தினமும் சிறை அதிகாரிகள் நச்சரிப்பு தாங்க முடியாமல் ஒருநாள் அவர்களிடம் கேட்டாள் அவள்.

 

அக்கா நாங்கள் உள்ளே இருப்பதைப் பற்றி மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த  வேதனை எங்கள் பெற்றோரையோ மனைவி பிள்ளைகளைப் பற்றியோ அல்ல. போராட ஆட்கள் போதாமல் இருக்கும் வேளையில் பயிற்சி பெற்ற நாங்கள் எல்லாம் இப்படி வீணாகக் காலத்தைக் கடத்துகிறோமே என்று வேதனைப்படுகின்றோம் தான்.

 

இங்கிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்தான் ஆனால் அந்த விடுதலை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று எங்கள் மனதிலே ஒரு எதிர்பார்ப்பு இலட்சியம் உண்டு. நாளைக்கு நீதிமன்றம் கூட எங்களை விடுவிக்கலாம். ஆனால் அந்த விடுதலை கூட எங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்து விடப்போவதில்லை என்னும் போது பணம் கொடுத்துத் தப்பிப் போவது என்பது எவ்வளவு தூரம் எங்களுக்கு உடன்பாடாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அது கோழைகளின் வழி அக்கா.

 

உங்களுக்கு தெரியுமா அக்கா இராமாயணத்திலே அசோகவனத்திலே சிறைவைக்கப் பட்டிருந்த சீதையிடம் அநுமான் சென்று நீங்கள் என்னோடு வாருங்கள் இராமனிடம் சேர்த்து விடுகின்றேன் என்று கேட்கின்றான். சீதைக்கு அந்த முயற்சியில் விருப்பம் இல்லை. மறுத்து விடுகின்றாள்.

 

அவளுக்கு விடுதலை தேவை. அது எப்படிப் பட்ட விடுதலை என்றால் தன் தலைவரான இராமன் வந்து இராவணனை அழித்து தன்னை மீட்கும் வீரம்  மிக்க விடுதலையே அவள் விரும்பினாள். அதை விடுத்து பின் கதவால் இலகுவில் இராமனை அடைய அவள் விரும்பவில்லை, அசோக வனச் சீதையின் மனநிலையிலேதான் நாங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

என்றோ ஒரு நாள் எங்கள் கமாண்டோக்கள் இந்தச் சிறையை முற்றுகையிடுவார்கள். எங்கள் வீரர்களின் கையால் நாங்கள் மீட்கப்படுவோம். எத்தனையோ போராளிகளின் வேதனைக்கு நிலைகளாக விளங்கிய இந்தப் பூந்தமல்லிச் சிறைச்சாலை நாங்கள் விடுதலை பெற்றுச் செல்லும் போது பூகம்பம் நிகழ்ந்த பூமியாக காட்சியளிக்கப் போகிறது அக்கா. நீங்கள் இருந்து பாருங்கள்.

 

இந்தச் சிறையில் இருந்து நாங்கள் பெறப் போகும் விடுதலை உலக சரித்திரத்தில் ஈழப்போராளிகளின் வீரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பேசப்பட இருக்கிறது அக்கா. அந்தப் பொன்னான நாளை எண்ணித்தான் நாங்கள் இன்று எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொள்கிறோம்.

 

இதை அவளுக்கு அவர்கள் சொல்லி இன்று நான்கு வருடங்களுக்கும் மேலாகி விட்டன. இந்தியா எந்தப் பெரிய தேசம்! அதனுடைய இராணுவ பலத்துக்க முன்னால் இதெல்லாம் சாத்தியப் படக்கூடியதா? என்ற சிறு சலனம் கூட அவர்களிடம் இல்லை. எதுவும் எங்களால் முடியும் என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செயலிலே காட்டும் ஒரு உன்னதமான அமைப்பில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அதனால் தான் அவர்களை அடைத்து வைக்கும் இடமெல்லாம் தீயை மிதித்தவர்கள் போல இந்தியப் பாதுகாப்புப் படையினர் பதட்டத்துடன் காணப்படுவார்கள்!

 

ஆனால் இராமர்கள் அந்தச் சீதைகளிடம் இன்னும் வந்த பாடில்லை. ஆனாலும் இன்றும் கூட அவர்கள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் தேசத்தையும் மக்களையும் அந்த மக்களுக்காகப் போராடும் இயக்கத்தையும் இன்றும் அவர்கள் உள்ளன்போடு நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களை யாரும் நேசித்ததாகத் தெரியவில்லை. அவர்களைத் தேடி சிறை வாசலுக்கு உறவுகள் உட்பட யாருமே வருவதில்லை! தமிழகத்து அநுமான்கள் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை!

 

இப்போதெல்லாம் காயத்திரி கணவனைப் பற்றியெல்லாம்  எண்ணுவதில்லை. குழந்தையைக் காண விரும்புவதில்லை. அவள் சிந்தனையெல்லாம் வன்முறை எதுவும் வேண்டாம்! இந்த அசோகவனச் சீதைகளை இராமர்கள் சாத்வீக வழியிலாவது மீட்கும் உத்தேசம் உண்டா? என்பதுதான். இந்தச் சீதைகளின் நினைவுகள் கனவாகிப் போய்விடுமா என்பதுதான். பாயத் தெரிந்தால் மட்டும் போதாது! பதுங்கவும் கத்துக்கணும்! வளையத் தெரிந்தால் மட்டும் போதாது! நெளியவும் தெரியணும்!

 

அந்தப் போராளிகளை எத்தனை ஈழத்தமிழர்கள் நினைத்துப் பார்க்கிறார்களோ தெரியாது. ஆனால் இந்தியத் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தின் சராசரிப் பெண்ணொருத்தி பூந்தமல்லிச் சிறையில் இருந்து கொண்டு ஒவ்வொரு கணமும் எண்ணிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

 

——————-

( இந்தக் கதை விகடனில் வெளியான செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு 1998ம் ஆண்டு எழுதப்பட்டது)

 

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.