வண்டின் காதலும் மானுட வீழ்ச்சியும்!
அந்தக் காதல் மலர்ந்த இடம் இந்தியத் தமிழ் நாட்டிற்கும் கேரள தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமத்தில். மலைவாழ் மக்கள் நிறைந்த இடம். கேரளத்திலே உயர் கல்வி கற்றவள் அந்தப் பெண் என்பது மட்டுமல்ல சாதியாலும் உயர்ந்தவள் அந்தப் பெண். ஊர் முழுவதுமே அவள் வீட்டுப் பண்ணைகளிலும் தோட்டங்களிலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள்.
ஒரு முறை அவள் அம்மாவுக்கு சுகவீனம் ஏற்பட்டு விடுகின்றது. வசதி இருந்ததால் சென்னையில் ஒரு பெரிய மருத்துவ மனையில் அம்மா சேர்க்கப் படுகின்றாள். அம்மாவைப் பார்த்துக் கொள்ள மகள் அங்கே வந்து உறவினர் வீட்டில் தங்கி விடுகின்றாள். அப்போது அந்த இளைஞனுடன் பழக்கம் ஏற்படுகின்றது. வசீகரமான தோற்றம் இருந்தாலும் சாதியும் வறுமையும் அவனை மருத்துவ மனையில் குலத்தொழில் செய்ய வைத்துவிட்டதை சில நாட்களிலே உணர்ந்து கொண்டாள் அவள்.
அவனைக் காணும் போதெல்லாம் பேசினாள். வேண்டும் என்றே பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவித்தாள். அவன் மறுத்தாலும் மீதிப் பணத்தை அவனிடமே விட்டு வைத்து சாப்பாடு வாங்கி உண்ணச் செய்தாள். நட்பு மலர்ந்தது. காதல் ஆகியது. தன் பெற்றாரைக் கொண்டு அவனது வறுமையைச் சரிசெய்து கொண்டாலும் சாதியைச் சரிசெய்ய முடியாது என்று அவளுக்குத் தெரியும்.
தாய் சுகம் பெற்று கிராமத்துக்குத் திரும்பிய பின்னும் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். வீட்டிலே பேராசியர்களையும் மருத்துவர்களையும் பெற்றார் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க ஒருநாள் அவள் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு அவனிடம் வந்து விடுகின்றாள்.
இருவரும் சட்டப்படி நடந்து கொள்ள முடிவெடுக்கின்றார்கள். காவல் நிலையத்தில் வயதை உறுதிப்படுத்தி பாதுகாப்புத் தேடிக் கொள்கின்றார்கள். கையில் இருந்த காசுக்கு ஒரு இடம் எடுத்து குடும்பமாக வாழ்கின்றார்கள். பெற்றோரும் சகலதையும் மூன்று வாரங்கள் கழித்துத் தெரிந்து கொண்டு காவல் துறையை நாடுகின்றார்கள்.
பாதுகாப்புக் கொடுத்த காவல் துறையே திரும்பவும் அவர்களைப் பிடித்து வந்து பெற்றோர் முன்னிலையில் பிரித்து பையனை அவன் சித்தப்பாவோடும் பெண்ணை ஒரு மகளிர் விடுதியிலும் வைக்கின்றார்கள். அன்றிவே சித்தப்பா வீட்டுக்கு வந்த ஒரு கூட்டம் அவனைத் வெட்டிக் கொல்கின்றது. அந்தப் பெண் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றாள்.
கீழ்ச்சாதி பையன் தொட்ட பெண் இனி எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என்று பெற்றோரும் உறவுகளும் முடிவு செய்கிறார்கள். அந்த முடிவின்படி அந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய நன்மை ஒன்றைச் செய்கிறார்கள் நடு இராத்தியில் அப் பெண்ணை வயற்காட்டில் கொண்டுவந்து உயிரோடு எரித்து அவளின் காதலன் சென்ற உலகத்துக்கே அனுப்பி வைக்கின்றார்கள்.
இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு தமிழகம் கேரளம் என்ற இரு தேசங்களையும் நிலை குலைய வைத்த இந்தச் சம்பவத்தை மனத்தில் நிறுத்திக் கொண்டு புகழேந்திப் புலவன் வாழ்ந்த பழைய தமிழ்ச் சமுதாயதில் நளவெண்பா காலத்துக்குச் செல்கின்றோம்.
அவர்கள் இருவரும் காதலர்கள். அன்று விடுமுறை நாள். இன்று போல புற வசதிகள் எதுவும் அவர்களுக்கு அன்று பொழுது போக்க இருக்கவில்லை. எனவே காலையிலேயே ஒரு சோலைக்கு வந்து விடுகின்றார்கள். அங்கே அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். காதலி எழுந்து பூக்களைப் பறிக்கப் போகின்றாள். பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவள் ஒரு மலரிலே ஒரு காட்சியைக் காண்கின்றாள்.
வரிகளை உடைய இரண்டு வண்டுகள் அந்த மலரின் நடுவிலே ஒன்றையொன்று தழுவிக் கொண்டு தமக்குள் கலந்து கிடக்கின்றன . துள்ளிக் குதித்து மலர் பறிக்கச் சென்றவள் வண்டுகளைக் கண்டதும் ஒரு கணம் அப்படியே நின்று விடுகின்றாள். தன் கால் சிலம்பு ஒலி எழுப்பினால் கூட அந்த வண்டுகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு வந்து விடுமே என்று பயந்து அது ஒலி எழுப்பா வண்ணம் மெதுவாக நகர்ந்து சில இலைகளை மட்டும் பறித்துக் கொண்டு தன் காதலனிடம் திரும்பி வந்து விடுகின்றாள்.
புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து – மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.
இந்தக் காட்சி நளவெண்பாவிலே கலி தொடர் காண்டத்திலே புகழேந்திப் புலவனால் எடுத்துக் காட்டப் படுகின்றது. வண்டின் காதலைப் பிரிக்கவே அஞ்சிய மனிதர்கள் வாழ்ந்த தமிழச்; சமுதாயத்திலே தான் இன்று இத்தனை கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஒரு காதலி தானும் காதலனும் எதுவித சமுதாயாக் கொடுமைகளின் அச்சமுமின்றி சோலைகள் போன்ற பொது இடத்திலே நடமாட முடிந்த காரணத்தால் தான் வண்டுகளின் அச்சத்தைப் போக்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
புகழேந்திப் புலவன் இந்தப் பாடலிலே காட்டுவது ஒரு பெண் மனத்து இயல்பை மட்டும் தான். பொதுவாகவே பெண்களுக்கு இத்தகைய இரக்க சுபாபவம் இயல்பாக உண்டு என்று நாம் நினத்துக் கொண்டாலும் அகநானூறு என்ற சங்க இலக்கியம் வேறு ஒரு செய்தியைச் சொல்கின்றது.
ஒரு காதலன் தன் காதலியைப் பார்ப்பதற்காக ஊருக்கு வருகின்றான். அப்போது எல்லாம் பிரயாண சாதனமாக இருந்தது தேரும் குதிரைகளும் தான். அப்படித் தேரிலே வந்து கொண்டிருந்த காதலன் ஒரு சோலையின் ஊடாக வழி செல்வதைக் காண்கின்றான்.
இந்த வழியால் போகும் போது என் குதிரைகளின் கழுத்து மணிச் சத்தம் கேட்டு தமது காதல் துணையொடு மகிழ்ந்திருக்கும் தேன் உண்ணும் வண்டுகள் அஞ்சி விலகி விடுமே அது பாவம் அல்லவா என்று நினைத்தவன் உடனே தன் தேரை நிறுத்தி குதிரைகள் பூட்டப்பட்ட முன் புறத்துக்கு வந்து அந்த மணிகளின் நாக்குகள் அசைந்து ஓசை எழுப்பாத வண்ணம் தடுத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான் என்று சொல்லியது அகநானூறு.
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
பெண்கள் தானென்று இல்லை. ஆண்களும் கூட இரக்க சுபாவம் மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள் அந்தக் காலத்தில். இளம் வயதினருக்கே இப்படிப்பட்ட தருமம் தவறாத சுபாவம் இருந்தது என்றால் பெரியவர்கள் எப்படிப்பட்ட அறம் நிரம்பிய வழியிலே அன்று வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்விரு செய்தியும் தமிழர்களாகிய நாம் எப்படியானதொரு சமுதாய விழுமியத்தில் இருந்து விலகித் தவறான பாதையில் பயணித்து இன்றைய இழி நிலையை அடைந்திருக்கின்றோம் என்பதற்கு இலக்கியச் சான்றுகளாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன.