இறைவனும் மரங்கொத்தியும்
பாழாய்ப் போகுது எனவிட்டேன்
தென்னையில் நீயும் துளையிட்டாய்
தெரியா ததுபோல் நானிருந்தேன்
வாழை கொத்தி இதழ்புதைய
இறைவா என்றே அழுகின்றாய்!
தவறைச் செய்து துணைக்காக
தானே என்னை அழைக்கின்றாய்
வாழை மரத்தைக் கொத்திடிலோ
வகையாய் அலகும் புதைந்துவிடும்
உன்வீரம் அங்கே செல்லாது
வாழை நாராய்த் தான்கிழியும்
இதுவென் படைப்பின் இரகசியமும்
இறைவன் என்னும் தனித்துவமும்!
வலிய அலகைத் தந்துனக்கு
வாழையை கொத்து எனவிட்டால்
இறைவன் என்போன் நானில்லை
உலகம் இயக்கியும் பயனில்லை!
கூடு செய்யத் தெரியாவுன்
குறையைப் போக்கக் கூரலகை
இட்டேன் உனக்கே மரங்கொத்தி
விரும்பும் மரத்தில் விருப்பம்போல்
வீடாய் பொந்து அதைச்செய்து
இருப்பாய் அங்கே எனவெண்ணி
அடுப்புக் கரிபோல் கருஞ்சிறகும்
அடுப்பில் நெருப்பாய் கொண்டையொன்றும்
நெருப்பில் சாம்பல் பூத்ததுபோல்
மேனி யெல்லாம் புள்ளிகளும்
இருந்தே கொத்தி இளைப்பாற
இனிய வலிய வாலிறகும்
கொடுத்த இறைவன் சொல்கின்றேன்
எடுப்பாய்க் கொத்தித் திரியாதே
என்றோ ஒருநாள் இடர்ப்படுவாய்!
கிடைத்த வாய்ப்பைத் தவறாக்கிக்
கெட்டார் பலபேர் பூமியிலே!
– இரா.சம்பந்தன் கவிதைகள்