தேன் தேர் குறவர் தேசம் வேண்டும்!

எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் தமிழாசிரியராக இருந்தேன். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புகளுக்கு என் போன்றவர்களும் உயர்தரத்திற்கு செங்கை ஆழியான், இலங்காதுரை, கிருஸ்னானந்தன், குழந்தைவேலு, கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை போன்ற கல்விமான்களும் கல்வி போதித்து வந்தோம்.

அக்காலத்தில் தனியார் கல்வி நிலையங்களிடையே போட்டி இருந்தது. அதனால் எட்டாம் ஒன்பதாம் வகுப்புகளையும் மாலை வேளைகளில் ஆரம்பித்து நடாத்தி வந்தோம். இந்த வகுப்புப் பிள்ளைகள் பத்தாம் வகுப்புக்கு வந்ததும் எங்களுடனேயே இருக்க வேண்டும் என்ற வியாபார நோக்கம் எமக்கு இருந்தது. அதனால் கல்வித் தரத்திலும் நாம் கவனமாக இருந்தோம்.

படிப்பிப்பதற்காகவே நிறையப் படித்தோம். நாம் போதிப்பதில் சிறு தவறு இருந்தாலும் அது பெரும் வீழ்ச்சியையும் அவமானத்தையும் தமக்கு ஏற்படுத்தும் என கல்வி நிலைய நிர்வாகங்கள் விழிப்போடு இருந்தன. யாழ்ப்பாணத்துப் பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் எமக்கும் மாணவர்களாக இருந்தமையால் வேம்படி போன்ற கல்லூரிகளுக்குள்ளும் எமது கற்பித்தல் முறைக்கும் பாடக் குறிப்புகளுக்கும் மரியாதை இருந்தது.

இப்படியான கால கட்டத்திலே கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மகன் பூங்குன்றன் என்னிடம் எட்டாம் வகுப்பில் தமிழ் கற்று வந்தான்.வந்தான் என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம் இன்று இளைஞராக இருந்தாலும் அன்று சிறுவனாகவும் என் அன்புக்கு உரியவராகவும் பூங்குன்றன் இருந்தமையினால் ஆகும். ஒரு முறை வழி என்ற பொருள் கொண்ட அயனம் என்ற பதத்துக்கு நான் கன்னம் என்று பிழையாகப் பொருள் சொல்லி அவனும் எழுதிக் கொண்டு போய்விட்டான். இது தவறுதலாக நடந்தது அல்ல. அயனம் என்ற பதத்தின் பொருள் வழி என்று அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஒரு நாள் மதிய ஓய்வின் போது குணராசா குழந்தைவேலு போன்ற பெரியவர்களோடு என் மட்டதில் உள்ள சில ஆசிரியர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த சுந்தரம்பிள்ளை அவர்கள் என்னிடம் சம்பந்தன்! உந்தக் கடை வரைக்கும் போட்டு வருவோம். பேச்சுத் துணைக்கு வாடாப்பா என்று கூப்பிட்டார். நானும் எழுந்து அவருடன் சென்றேன். அவருடன் பேசிக்கொண்டிருப்பது என்பது எல்லோருக்கும் பிடித்தமான விடயம். மிகவும் யதார்த ்தமாகவும் நகைச்சுவையாகவும் பேசுவார். அவருடைய இந்துநாகரிக பாட வகுப்பிலே மிஞ்சிப் போனால் பத்துப் பிள்ளைகள் தான் படிப்பார்கள். ஆனால் அந்த வகுப்புத்தான் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும்.

வழியில் அவர் தம்பி! தற்செயலாக எனது மகனின் தமிழ்  அப்பியாசக் கொப்பியைப் பார்க்க நேர்ந்தது. அதிலே அயனம் என்றால் கன்னம் என்று படிப்பித்திருக்கிறாய். அது தப்பு. அயனம் என்றால் வழி. அதனால் தான் சூரியன் செல்லும் வழிகள் உத்தராயணம் தட்சினாயணம் என்று சொல்லப்பட்டன. உத்தர அயனம் உத்தராயணம். அது போல இராமாயணம் என்றால் இராமன் கதை அல்ல. இராமன் வழி அதுதான் சரியான பொருள். அவனோடை நான் இது பற்றி ஒன்றும் கதைக்கவில்லை. அதை நான் திருத்துவது அழகல்ல. அடுத்த தமிழ் வகுப்பிலே அதைத் திருத்தி விடடாப்பா என்றார்.

ஒருகணம் நான் பயந்து போனேன். சேர்! நான் கன்னம் என்றுதான் இப்பவும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று வெட்கத்தோடு சொன்ன போது இல்லை இல்லை அது வழக்கொழிந்த சொல். அதை விடு. அப்பா எப்படி இருக்கிறார்? என்று தானே பேச்சை மாற்றிக் கொண்டார்.

அன்று அவர் நினைத்திருந்தால் பலருக்கும் முன்னால் என்னைக் கண்டித்துச் செல்லாக் காசு ஆக்கியிருக் முடியும். மற்ற ஆசிரியர்களும் நிர்வாகமும் நான் படிப்பிப்பதைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் இழிவை எனக்கு ஏற்படுத்தியிருக்க முடியும். அவர் அப்படி நினைக்கவில்லை. தன் மகனுக்குக் கூட என்னை அவர் காட்டிக்கொடுக்கவில்லை. அவர் தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய சான்றோன். அதனால் அவரிடம் கான முயல் எய்த அம்புக்கும் ஆசை இல்லை. யானை பிழைத்த வேலுக்கும் ஆசை இல்லை.

குரு உபதேசம் என்கிறார்களே அந்த அனுபவத்தை அன்றுதான் நான் உணர்ந்தேன். ஆசிரியத் தொழிலிலே அவருக்குப் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். எழுத்துத் துறையிலும் அவருக்குப் பின்னால் நிற்கிறோம். கவியரங்கம் பட்டிமன்றம் போன்றவற்றிலும் எங்கள் பெயர் வருகின்றது. அவருக்கு எங்களிடம் காழ்புணர்ச்சி ஏற்படவில்லை. தட்டிக்கொடுத்து வளர்த்தார். வீழ்ந்து விடாமல் காப்பாற்றினார். அவரிடம் நான் கண்ட அந்தப் பண்பு இன்றுவரை என் மனதைத் தொட்டு நிற்கின்றது.

ஊரில் நடந்த இந்தச் சம்பவம் என்மனதைத் தொட்டு நிற்பது போல கனடாவில் நடந்த சம்பவம் ஒன்று நினைக்கும் போதெல்லாம் என் மனதைச் சுட்டெரிக்கின்றது.

நான் எழுதிய நாடகம் ஒன்றைக் கையளிப்பதற்காக வானொலி அதிபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது நான் எழுதிய காவியம் ஒன்றும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்து கொண்டிருந்தது. வானொலி அதிபருடன் நான் பேசிக்கொண்டிருந்த போது கவிஞர் ஒருவர் அங்கு வருகை தந்தார். அவரை முன்பின் எனக்குத் தெரியாது. அவருடைய தமிழ்க் களம் பற்றியும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சொல்லப் போனால் அவரின் பெயர் கூட அன்று வானொலி அதிபர் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. வானொலி அதிபரால் நான் கவிஞருக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டேன்.

மறு நிமிடமே கவிஞர் என்னிடம் உம்முடைய காவியத்திலே வெண்பாவில்; பிழை இருக்கின்றது அது பற்றி நீர் காவியத்திலே குறிப்பிடும் கவிஞருக்கும் சொல்லியிருக்கிறேன் என்றார் சம்பிரதாயத்துக்கு கூட ஒரு வரவேற்புச் சொல்லாமல்.    

இருக்கலாம் அப்படி எழுதினால் தான் இன்றைய வாசகருக்குப் புரியும். பாரதியார் கூடக் கண்ணன் பாட்டிலே

அண்ணா உனதடியில் வீழ்வேன் – என்னை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டாம் – பிறர்
கண்ணாலம் செய்துவிட்ட பெண்ணை – உன்
கண்ணால் பார்த்திடவும் தகுமோ

என்று பாடியிருக்கிறாரே கண்ணாலம் சரியா? என்றேன். தொடர்ந்து கேட்டேன்.

வண்ணமும் சீரும் பாட்டின்
வகையெலாம் தெரித்துக் காட்டி
திண்ணிய செய்யுள் யாக்கும்
திறனுளோம் எனினும் இந்த
மண்ணிலே வாழும் எங்கள்
மாந்தரின் தமிழால் நொந்து
பண்ணிலே தவறு செய்யும்
பாதையில் பயணம் ஆனேன்!

என்று ஒரு பாட்டும் தொடக்கத்தில் பாடியிருந்தேனே நீங்கள் பார்க்கவில்லையா?

கவிஞர் என்னைத் திரும்பிப் பார்க்காமலே வேறு வேலையாக உள்ளே போய்விட்டார். வானொலி அதிபரோ தரும சங்கடமான நிலையில் இருந்தார். நானும் என் வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி விட்டேன். வரும்போது என்மனதிலே பல சிந்தனைகள். கவிஞர் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது என்று நான் நினைக்கவில்லை. ஏன் சுந்தரம்பிள்ளை போல நடந்து கொள்ளவில்லை? காவியங்களுக்கு அவையடக்கம் என்று ஒரு பாடல் வைக்கும் மரபு இருக்கிறதே எதற்காக? குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்பதற்குத் தானே? நானும் என் காவியத்தில்

குருவியைப் போலக் கூடு
குரங்கினால் கட்டொ ணாதே
அருவியைப் போல ஆமோ
அடைமழை வெள்ளம் வீரர்
உருவிய வாள்போல் ஆமோ
உளிகளும்? தமிழில் தோன்றிப்
பெருகிய கவிதை யாமோ
பித்தனென் பிதற்றல் எல்லாம்?

என்று அவையடக்கம் பாடினேனே. அப்படி இருந்தும் ஏன் இவர்கள் குற்றம் சொல்கிறார்கள்? நீங்கள் குருவியாகவும் அருவியாகவும் வாளாகவும் இருங்கள். நாம் குரங்காகவும் அடைமழையாகவும் உளியாகவும் இருந்துவிட்டுப் போகிறோம் என்றாலும் விடுகிறார்கள் இல்லையே. சுந்தரம்பிள்ளை போன்றவர்களிடம் காணப்பட்ட மனித நேயம் இவர்களிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது? இவர்கள் குறையைத் திருத்த நினைக்கவில்லை. குருத்தை முறிக்க நினைக்கிறார்கள்.  இவர்கள் அறிவாளிகளாக இருக்கலாம். ஆனால் பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல் என்ற சான்றாண்மைத் தத்துவத்துக்குப் பொருத்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அம்மையார் சௌந்தரா கைலாசம் அவர்கள் தனது கவிதையிலே பாடினார்.

வீட்டுக்கு நாற்புறமும் வெளிச்சுவர்போல் எழுதுமொரு
பாட்டுக்கு இலக்கணமும் பரிமளித்தால் நல்லதுதான்
ஆனாலும் அச்சுவர்கள் அகத்தில் இருப்போர்க்கு
வீணாய்ச் சிறையானால் வேண்டுவதா சிந்தனைசெய்!
ஆற்றுக்கு இருகரைகள் அவசியந்தான் அதுபோல
ஊற்றுக் கவிதைக்கும் ஒருநியதி அவசியந்தான்
உணர்வுக்கு முன்னிடமும் உருவுக்கு மறுவிடமும்
புனையும் கவிதைக்குப் பொருத்திவிடு அதுபோதும்!

இதையெல்லாம் படித்து ஒருவித நம்பிக்கைபோடு அடியெடுத்து வைக்க முற்படும் போது இந்தக் கவிஞர்  பெருமக்கள் தலையில் குட்டி உட்கார வைக்க ஆசைப்படுகிறார்களே ஏன்? அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்.

சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே!

என்றார் அதிவீர ராம பாண்டியன். என்னிடம் பலரும் ஏன் இப்பொழுது அதிகம் எழுதுவதில்லை? ஏன் விழாக்களுக்கு வருவதில்லை? என்று கேட்பார்கள். நான் சிரித்துவிட்டு மௌனமாவேன். தேன் தேர் குறவர் தேயத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று நான் அவர்களுக்குச் சொல்லுவதில்லை!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.