ஆறாத் துயரம்

 

 

ஆறாத் துயரம்

நான் பல சமயங்களில் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியிருப்பதைப் பார்த்தும் இருக்கிறேன். அதை நேரில் நான் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது.

 

என் நண்பர் ஒருவர் போலந்துக்காரர் உடல் நலமில்லாமல் இருந்தார். வயது எண்பதுக்கு மேலே. புல மாதங்களுக்குப் பின் அவரை நேரில் பார்த்த நான் திடுக்குற்றேன். ஏடை சரி பாதியாகக் குறைந்து விட்டதென அவரே சொன்னார்.உடைகள் ஆணியில் கொழுவி விட்டது போல உடம்பில் தொங்கின. நீளமான கழுத்து சட்டென்று சட்டென்று நடுவில் வளைந்து போய்க் கிடந்தது. மிகவும் களைப்பாகக் காணப்பட்டார். இரண்டு வாக்கியத்துக்கு ஒருமுறை வாயைத் திறந்து காற்றை விழுங்கிவிட்டுப் பேசினார்.

 

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் கனடாவுக்கு வந்தவர் 60 வருடங்களைக் கனடாவில் கழித்து விட்டார். தனது இளவயதுச் சம்பவங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டு வந்தவர் தன் தகப்பன் புறா வளர்த்த கதையைச் சொன்னார். நிறையப் புறாக்களை வளர்த்து விற்பனை செய்வதை ஒரு பொழுது போக்காக அவர் செய்தார். தூது ஓலை கொண்டு போகும் புறாக்களுக்குப் பயிற்சி கொடுப்பதில் வல்லவர். ஓய்வு நாட்களில் புறாவை எடுத்துச் சென்று அதை ஆகாயத்தில் எறிந்து விடுவார்கள். இவர்கள் திரும்ப முன்னர் அது பறந்து கூட்டுக்கு வந்து விடும். சிறிது சிறிதாகக் தூரத்தைக் கூட்டிக் கொண்டு போய்ப் பயிற்சி கொடுப்பாகள். அவர் சொல்லத் தொடங்கினார்.

 

அப்பாவிடம் ஒரு அழகான புறா இருந்தது. வெள்ளை நிறம். அதற்கு நான் அல்பிங்கா என்று பெயர் சூட்டினேன். போலிஷ; மொழியில் அல்பிங்கா என்றால் வெள்ளை என்று பொருள்.நாங்கள் வளர்த்த புறாக்களில் அதைப்போல அழகான ஒரு புறாவையோ மூளைத்திறன் கொண்ட புறாவையோ நான் கண்டதில்லை. அந்தக் காலத்து அரசர்கள் கடிதங்களில் செய்திகள் அனுப்புவது இப்படியான புறாக்களில்தான். அப்பாவுக்கும் எனக்கும் இந்தப் புறாவில் தனி ஈடுபாடு இருந்தது. எந்தத் திசையில் கொண்டுபோய் விட்டாலும் அல்பிங்கா வீட்டுக்கு வந்துவிடும்.

அப்பாவுக்கு அடுத்த ஊரில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர். ப்ரனிஸ்லோ. எப்பொழுது அப்பாவைச் சந்திக்க வந்தாலும் அல்பிங்கா பற்றிப் பேசுவார். அதைத் தனக்கு விறகச் சொல்லி அப்பாவை வற்புறுத்துவார். ஆதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருந்தார். நான் அந்தப் புறாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன் என்பதை அப்பா அறிவார். பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் எனது முதல் வேலை அல்பிங்காவைக் கையில் எடுத்து வைத்துக் கொஞ்சுவதுதான். ஆகவே அப்பா நண்பரின் வேண்டுகோளைத் தட்டிக் கொண்டே வந்தார்.

 

1939ம் ஆண்டு ஜேர்மனி போலந்தின் மேல் படை எடுத்தது. இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது அப்படித்தான். போலந்து ஒரு மாதத்தில் முற்றாக வீழ்ந்தது. ஒரு வருடத்துக்குள் நிலைமை மிக மோசமானது. எங்கள் குடும்பம் பெரியது. ஆப்பாவினால் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது ஒருநாள் அப்பா ப்ரினிஸ்லோவுக்கு புறாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டார். அதில் வந்த பணம் இரண்டு மாதங்களுக்கு எங்கள் வீட்டுக்குச் சாப்பாடு போட்டது என்று பின்னாளில் அப்பா சொன்னார். பள்ளியிலிருந்து வந்த நான் அப்பா புறாவை விற்றதைக் கேள்விப்பட்டு அப்படியே மனமுடைந்து போனேன். ஒருநாள் முழுக்கச் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஒரு துண்டு ரொட்டிக்குச் சிரமப்பட்ட அந்தக் காலத்தில் பட்டினி கிடப்பதில் எந்தவித பொருளும் இல்லை.

 

ப்ரனிஸ்லோவுக்கு ஒரு விசயத்தை அப்பா அவருக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தார். இந்தப் புறா பயிற்சி கொடுக்கப்பட்டது. அதி புத்திசாலி. இது திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வந்தால் அதை நான் இன்னொரு முறை உங்களுக்குத் தரமாட்டேன். அவரும் சம்மதித்தே அதை வாங்கிப் போனார்.

 

இரண்டு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் காலை நான் பாடசாலைக்குப் புறப்பட்டேன். வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்ததம் அப்படியே திடுக்குற்று நின்றேன்.நான் வளர்த்த அல்பிங்கா திரும்பி வந்துவிட்டது. வாசலிலே நடுங்கிக்கொண்டு நின்றது. கழுத்தைச் சரித்து நிமிர்ந்து பார்த்த போது விழுந்து விழுந்துவிட்டது. இரண்டு கைகளிலும் அதனைத் தூக்கிய போது இருதயம் துடிப்பத போல இருந்தது. அதனுடைய இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டிருந்தன. அப்படியும் 17 மைல் தூரத்தை இரண்டு வாரமாக அது நடந்தே கடந்திருக்கிறது. புறா கிளையில் உட்காரும் பறவை என்பதால் அதற்கு காலின் முன்பகுதியில் மூன்று விரல்களும் பின்பகுதியில் ஒரு விரலும் இருக்கும். கிளையில் பிடித்து உட்கார வசதியாக. அல்பிங்கா நடந்து வந்ததில் அதன் பின்விரல் முற்றாகத் தேய்ந்து விட்டது. முன் விரல்களும் பாதியாக மழுங்கிப் போய் இரத்தம் கசியக் கிடந்தன. நிற்க வைத்த போது அல்பிங்கா நிற்க முடியாமல் சரிந்து சரிந்து விழுந்தது. அன்றிரவே அது இறந்துவிட்டது!

 

இந்தக் கதையைச் சொன்னபோது நண்பர் விம்மி விம்மி அழத் தொடங்கினார். அவர் தன் அப்பாவை நினைத்தாரோ அந்தப் புறாவை நினைத்தாரோ அல்லது தன்னை நினைத்தாரோ தெரியாது. அடக்க அடக்க அவரை மீறி ஏதோ ஒன்ற நடந்தது. மெலிந்து போன அவர் உடம்பு துடிக்க எக்கி எக்கி அழுதார். 80 வயதுக் கண்களில் இருந்து நீர் கொட்டியது. நான் என் ஆயுளிலே இவ்வளவு வயதான ஒருவர் அழுததைப் பார்த்தது இதுவே முதல் தடவை. 60 வருடங்களுக்கு முன்பு இறந்து போன ஒரு புறா. ஆதை நினைத்து அழுதார். ஆறாத் துயரம் என்பது இதுதான் என்று நினைக்கிறேன்.

 

அ. முத்துலிங்கம்

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.