பிணத்துக்கு இனியெதற்கு இரத்த தானம்?
அறமுதலாம் முப்பாலைச் சொன்ன நூலின்
அறிவுரையைப் போற்றாமல் அழியும் நாடு
பிறவுயிர்க்கும் உரியவற்றை வாரிக் கொண்டு
பிழைசெய்யும் தலைவர்களை வளர்த்த நாடு
நிறம்பிறழும் பற்சோந்தி உடலைப் போன்று
நிறம்மாறத் தயங்காத தமிழர் தேசம்
துறவுமனப் பான்மையுடன் மடத்தைக் கட்டித்
தூங்குதற்கு பெண்துணையைச் சேர்க்கும் நாடு
கறவுபசு மடிக்காம்பு போல வாழ்வில்
கண்டதெலாம் கறந்துவிடும் காவல் நாடு
திறமைமிகும் ஒருசிலரும் தங்கள் வாழ்வைத்
திருடரிடம் ஒப்படைத்த திருந்தா நாடு
மறவுணர்வை வட்டியிலும் சாதி மீதும்
மறக்காமல் பயன்படுத்தும் மாந்தர் தேசம்
உறவுமுறை நட்புமுறை உதறித் தள்ளி
உயிர்க்கொடுமை செய்கின்ற நாட்டில் என்ன
சிறந்துவிடப் போகிறது தேர்தல் வந்து
செத்தபிணம் அதற்கென்ன இரத்த தானம்?
பிறந்துவந்து நல்லொருவன் புகுந்தால் அன்றிப்
பிழைத்துவிடாத் தமிழ்நாட்டில் ரஜனி அல்ல
வெறுந்தலைகள் எதுபதவி ஏற்றால் என்ன
விளைச்சலது பூச்சியந்தான் விடடா தம்பி!
இரா.சம்பந்தன்