கூவட்டும் ஒரு சேவல்!
பொழுது முழுமையாக விடியவில்லை. ஆனாலும் தோட்ட வரம்புகள் ஒரளவுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. வெங்காயப் பாத்திகளின் இடையே அறுகம் புற்களால் கோடு இழுத்தது போலத் தெரிந்த வரம்பிலே காலை வைத்து நடந்தார் அரியகுட்டி.
என்ன இன்றைக்கு சதாசிவம் வீட்டுச் சேவலின்ரை குரலைக் காணவில்லை. இல்லாது போனால் பூவரசு மரத்திலே நின்று கூவிக் காதைக் கிழிக்கும். எவ்வளவு காலமாக இந்தக் கோழியாலே நாங்கள் படுகிற பாடு. நாய் வளர்த்துப் பார்த்தாச்சு. காவல் இருந்து பார்த்தாச்சு. பொறி வைத்துப் பாhத்தாச்சு. ஒன்றுக்கும் மசியாமல் கண்ணுக்குள்ளாலே போய் மூக்காலே வந்து எத்தனை பயிர்களை கிளறி நாசமாக்கிப் போட்டுது.
நினைவுகள் அலை மோத கொஞ்சத் தூரம் நடந்தவருக்கு தூரத்தில் வெங்காயப் பாத்தியில் என்னவோ கறுப்பு உருண்டையாகத் தெரிந்தது. விரைவாக நடந்தார். குனிந்து பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி. அது அந்தச் சேவல்தான். தலையிலே காயத்தோடு செத்துக் கிடந்தது. அரிய குட்டியருக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. நாங்கள் இதைக் கொன்றிருக்கேலாது. பக்கத்து வீட்டுப் பொன்னுச்சாமி ஆட்களின் செங்கட்டி எறியிலே தான் உயிர் போயிருக்கு. இப்ப என்ன செய்யுறது?
தலை கிறுகிறுக்க வரம்பிலே சிறிது நேரம் குந்தியிருந்து அதைப் பார்த்தார். இறந்து போய்விட்டாலும் நேராக அதைப் பார்க்க தைரியம் வரவில்லை அரிய குட்டிக்கு. காலை எறிந்து கொண்டு செட்டையை விரித்தபடி கொண்டையைச் சிலுப்பிக் கொண்டு கிடந்த அதை ஓரக்கண்ணால் பார்க்கவே பயமாக இருந்தது அவருக்கு.
வெளி ஊருக்கு போன அண்ணைக்குத் தான் முதலிலே இந்த விசயத்தைச் சொல்ல வேணும். அது தான் இந்தச் சேவலாலே இரவு பகல் என்று பாராமல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. கேட்டால் சந்தோசப்படும். அது வந்து முடிவெடுக்கட்டும்.
சேவலைத் தொடாமல் தோட்டத்துப் பாத்தியில் வைத்தே கடகத்தால் மூடிவிட்டு வேகமாகத் திரும்பி நடந்தார் அரியகுட்டி. எல்லாம் கனவு மாதிரி இருந்தது அவருக்கு. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக போட்டுது. அண்ணைக்கு நல்ல காலம். அதுகுடிவந்த கொஞ்ச நாளிலேயே நல்ல செல்வாக்கு தேடிப் போட்டுது இனி அதை அசைக்கேலாது! என்ன இருந்தாலும் இந்தச் செல்வாக்கும் என்றும் நிலையானது அல்ல. ஒரு நாளைக்கு கவிழத்தான் செய்யும். அண்ணா வந்து சேவல் பிரச்சனை தீர்ந்ததிலே தன்னை மறந்து சந்தோசமாக இருக்கட்டும். நான் குடும்பச் சொத்தை சுருட்ட வேண்டியது தான்! அதுக்கு பொன்னுச்சாமிதான் நல்ல வழி சொல்லும். இந்தச் சேவலையே இரண்டாம் பேருக்கும் தெரியாமல் திட்டம் போட்டு கண்காணிச்சு மடக்கின தந்திரம் ஒருதராலேயும் நினைச்சுப் பார்க்க ஏலாத விசயம்! தன்னையும் அறியாமல் வாய்விட்டுச் சிரித்த அரிய குட்டிக்கு முன்பொருநாள் பொன்னுச்சாமி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
அரியகுட்டி! நான் சொல்லுறதைக் கேள். உந்தச் சேவலாலே உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்காதே. என்றைக்கு நாங்கள் போட்ட தீனியைக் கொறிச்சுப் போட்டு எங்களின்ரை நாத்துக் கீரையைக் கொத்திச் சாய்ச்சுதோ அன்றைக்கே இது கெட்ட சாமான் என்று நாங்கள் முடிவெடுத்துப் போட்N;டாம். இப்ப அங்கே இங்கே போகாத படி வேலிப் பொட்டெல்லாம் முள்ளு வைச்சு அடைச்சு இருக்கிறம். அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் சேவலின்ரை அட்டகாசம் பற்றிச் சொல்லியிருக்கிறம். அவர்களும் கவனம் எடுப்பதாக சொல்லியிருக்கினம். இப்ப சதாசிவத்தின்ரை கொஞ்சக் காணிக்குள்ளே தான் மேஞ்சு கொண்டு திரியுது. இருட்டும் போது மரத்திலே ஏற வரும். சரியாத் திட்டம் போட்டு நீங்களும் நாங்களும் சேர்ந்து எறிஞ்சால் சாகத்தானே வேணும். சேவல் என்ன சாகா வரம் பெற்றுக் கொண்டே வந்தது?
அதை விட்டுப் போட்டு மேற்காலே பஞ்சன் வீட்டிலும் கிழக்காலே சீனு வீட்டிலும் ஏன் உதவிக்கு போறியள்? நீங்கள் அப்படி அங்கேயெல்லாம் போறது எங்களின்ரை ஆச்சிக்கு கவலை கண்டியோ. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பக்கத்திலே அடுத்த வீட்டில் இருக்கிற நாங்கள் தான் முதலிலே வருவோம். பிறகு தான் பஞ்சனும் சீனுவும் என்று ஆச்சி சொல்லச் சொன்னது.
ஒருநாள் பொன்னுச்சாமி தோட்டத்துக் கிணத்தடியில் வைத்துச் சொன்ன போது வழிக்கு வந்திட்டான் பொன்னுச்சாமி. சீனுவோடை சேருற மாதிரிப் போக்குக் காட்டியே வாங்கக் கூடிய எல்லாத்தையும் வாங்கிப் போட வேணும். இவன்களை வைச்சே கோழிப் பிரச்சனையை முடித்துப் போட வேணும். சதாசிவத்தோடு சேர்ந்து இந்தக் கோழிக் கலாச்சாரத்தைக் கொண்டுவந்ததே இந்தப் பொன்னுச்சாமி கூட்டம் தான், முதல்லே கோழிப் பிரச்சனை முடியட்டும். பிறகு தான் பொன்னுச்சாமிக்கு பாடம் படிப்பிக்கிறது.
மனதில் ஒரு முடிபு எடுத்துக் கொண்டார் அரியகுட்டி. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு சொன்னார்.
பொன்னுச்சாமி நாங்கள் சீனு வீட்டுக்கு அடிக்கடி போறம் என்று நீங்கள் குறை சொல்லுறியள். ஆனால் உங்க வீட்டிலே இருக்கிற பெரியவர் தான் சிலநேரம் சேவல் செய்யுறதெல்லாம் சரி என்ற மாதிரிக் கதைக்கிறார். நீங்களும் பேசாமல் இருக்கிறியள் அப்ப நாங்கள் என்ன செய்யுறது? உங்களை நம்புற மாதிரி நேர்மையாக நடவுங்கோ. நாங்கள் சீனுவை விட்டு வீடுகிறோம்.
பயத்திலே சும்மா அலம்பும் அந்த மனுசன். சிலநேரம் சதாசிவம் தனக்கு சொந்தம்! சதாசிவம் குடும்பத்துக்கு தானே தான் எல்லாம் என்ற மாதிரி கயிறு விடும். ஆச்சி சின்ன வெருட்டு விட்டுதென்றால் மாதக் கணக்கிலே வாலைச் சுருட்டிக் கொண்டு கிடக்கும். அதனுடைய வீரமெல்லாம் ஒரு காலத்தோடு போட்டுது. அரிய குட்டி ஒன்றைத் தெரிந்து கொள். இவர்கள் யார் துள்ளினாலும் ஆச்சியை மீறி ஒரு துரும்பையும் இவர்களால் அசைக்க முடியாது.;
அரியகுட்டி ஒருவனை அழித்து ஒழிப்பதக்கு சரியான வழி என்னை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என்ற மமதையை அவனுக்கு ஏற்படுத்துவது தான்.
இது உங்களுடைய சேவலுக்கும் பொருந்தும். இந்த வழியிலே முயற்சி செய்யுங்கோ. வேளைக்குப் பலன் கிடைக்கும். சிங்கத்துக்குப் பலம் அதிகம். மனிதனுக்கு அறிவு அதிகம். அதனாலே தான் எதிரியை வீழ்த்த திருமால் நரசிங்க அவதாரம் என்று கூட்டணி அமைத்தார். கடவுளே கூட்டணி அமைச்சு எதிரியை காலி பண்ணினார் என்றால் கூட்டணியிலே விசயம் இருக்கு எல்லாவற்றையும் யோசியுங்கோ! நான் போட்டு வாறன்.
போர்க்களத்திலே கீதை பிறந்தது போல கிணற்றடியிலே வேலை பிறந்தது! வேலைத்திட்டத்தைச் சொல்லிவிட்டு மறையும் பொன்னுச்சாமியையே பார்த்துக் கொண்டு நின்றார் அரியகுட்டி.
அன்று பொன்னுச்சாமி சொன்னது போலவே எல்லாம் நடந்து முடிந்தில் மனத்திருப்தி மட்டுமல்ல. பொன்னுச்சாமி மீது ஒரு பயங்கலந்த மரியாதையும் ஏற்பட்டு விட்டது அவருக்கு. சதாசிவம் நெருங்கிய சொந்தமாக இருந்தும் தங்கள் பக்கம் நின்றதை எண்ணிய பொழுது பொன்னுச்சாமியை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் சிறிதாகத் தோன்றி மறைந்தது. அந்த அதிகாலையிலும் அவரையும் அறியாமல் கால்கள் பொன்னுச்சாமி வீட்டை நோக்கித்தான் இழுத்தன. தன் பேரனை அழைத்து வீட்டுக்குத் தகவல் சொல்லிவிட்டு பொன்னுச்சாமியிடம் ஓடினார் அரியகுட்டி.
சேவல் செத்த விசயத்தைக் கேட்டு பதட்டமில்லாமல் புன்னகைக்கும் பொன்னுச்சாமியையே பார்த்துக்கொண்டு நின்றார் அரியகுட்டி.
இங்கே பார் அர ியகுட்டி! சேவல் செத்ததோடு உங்களின்ரை பிரச்சனை முடியவில்லை. இனித்தான் நீங்கள் கவனமாக நடக்க வேண்டும். சதாசிவம் ஆட்கள் ஒருநாளும் சேவல் செத்துப்போச்சு என்றதை ஒத்துக்கொள்ள மாட்டான்கள். நீங்கள் சேவலைக் கொண்டுபோய் நீ சதாசிவம் வீட்டு முற்றத்திலே போட்டாலும் உது எங்களின்ரை சேவல் இல்லை! எங்களின்ரை சேவலுக்கு செட்டை கொஞ்சம் கறுப்பு. கால் உந்தச் சேவலை விட மொத்தம்! என்றுதான் மறுப்பான்கள் சதாசிவம் ஆட்கள்.
சில நேரம் பொன்னுச்சாமி குடும்பத்துக்கே வீரம் காட்டின அதை இவர்களாலே கொல்ல முடியுமோ! அது இப்ப எங்கேயோ மறைஞ்சிட்டுது! ஒருநாளைக்கு வந்து கூவும் போது தான் தெரியும்! என்று நடைமுறைக்கு ஒத்துவராத கதையைத்தான் கதைப்பான்கள்.
கெட்டித்தனமான சேவல்தான்! எத்னையோ ஆட்கள் கலைச்சும் தப்பி ஒருகாலத்திலே பொன்னுச்சாமி குடும்பத்துக்கும் விளையாட்டுக் காட்டின சேவல்தான்! என்ன செய்யுறது எங்களுடைய கெட்ட காலம் செத்துப் போச்சுது. அதனாலே மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தைக் கவனிப்போம் என்று சதாசிவம் ஆட்கள் கடைசி வரைக்கும் நினைக்க மாட்டான்கள்! அதுதான் உங்களுக்கு தேவை. அந்த எண்ணம் சதாசிவம் குடும்பத்துக்கு வந்தால் உங்களுக்கு ஆபத்து ஆரம்பம் என்று திட்டவட்டமாக நினைச்சுக் கொள்ளுங்கோ. அந்த எண்ணம் சதாசிவம் குடும்பத்துக்கு வராமல் இருக்க வேணும் என்றால் செத்தது அவர்கள் சேவல் தான் என்று நிரூபிக்கப் போகாதையுங்கோ! கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ!
நானும் சேவல் செத்துப்போச்சு என்று அரியகுட்டி சொல்லுறதை முழுசாக நம்ப முடியாமல் கிடக்கு. பெருமைக்காக வேறு சேவலை காட்டி ஊரை ஏமாற்றக் கூடியவன்கள் அரியகுட்டி ஆட்கள் என்று நாளைக்கு சந்தையிலே கதை கட்டி விடுகிறன். அது உங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்! சேவல் செத்துப் போச்சு என்று நீங்கள் சொல்லுங்கோ. இல்லை நாங்கள்; நம்ப மாட்டோம் என்று நாங்கள் சொல்லுவோம். இப்படியே காலத்தை கடத்தினால் பூவரசுக்கு இன்னொரு சேவல் வராது. சதாசிவம் ஆட்கள் சேவல் இருக்கோ இல்லையோ என்று யோசித்து மூளை குழம்பிப் போவான்கள்.
என்ன இவ்வளவு கஸ்டப்பட்டு சேவலை முடிச்சும் அதை ஊரறிய சொல்லி சந்தோசப்பட ஏலாமல் இருக்கே என்ற வருத்தம் உன்னுடைய அண்ணைக்கும் குடும்பத்துக்கும் இருக்கும். என்ன செய்யுறது. சில நீண்ட கால நன்மைக்காக சின்னச்சின்ன சந்தோசங்களை விடத்தான் வேணும். உன்னுடைய அண்ணன் கிட்டே சொல்லு. யார் கேட்டாலும் சேவல் செத்துப் போச்சு என்கிறதோடை கதையை நிப்பாட்டச் சொல்லு. வேறு வியாக்கியானத்துக்குப் போக வேண்டாம் என்று பொன்னுச்சாமி சொன்னதாகச் சொல்லு என்ன! மற்றப்படி மடைத்தனமான வேலை ஒன்றும் செய்து போடாதையுங்கோ!
அமைதியாகவும் தெளிவாகவும் அடுத்த நகர்வை சொல்லிவிட்டு; வேப்பங் குச்சியை பற்களில் தேய்க்கும் பொன்னுச்சாமிக்கு கண்களாலேயே நன்றியைச் சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் அரியகுட்டி. வீட்டை நெருங்கும் போது பக்கத்து வீடான சதாசிவம் ஆட்கள் ஏதோ கத்திப் பேசுவது கேட்டது அவர்களின் வீட்டை கடந்து போன போதுதான் அவர்களின் வீட்டில் நாலைந்து சைக்கிள்கள் வந்திருப்பது தெரிந்தது. எல்லோரும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்! கிழக்குப் பக்கத்து மூரி வேலியடியில் போய் என்ன கதைக்கிறார்கள் என்று கேட்டார் அவர். கிழக்கு வேலி சதாசிவம் வீட்டு அடுப்படிப் பக்கம் என்பதால் எல்லாம் தெளிவாகவே கேட்டது.
எல்லாரும் சேர்ந்து தாக்கினால் சேவல் என்ன செய்யும்! வளர்த்த என்னை நினைச்சுதோ இல்லை தீனி போட்ட உன்னை நினைத்துதோ போய்ச் சேர்ந்திட்டுது. சதாசிவத்தார் கவலையோடு சொல்ல படபடன்று வெடித்தாள் மனைவி மங்களம்.
ஐயோ! சேவல் செத்துப் போச்சு என்று ஏனப்பா அபசகுனமாக கதைக்கிறியள்! அது சாகேல்லை என்று என்னுடைய மனம் சொல்லுது. ஒருநாளைக்கு வருமப்பா! இருந்து பாருங்கோ! வேறு ஆருடையதோ கோழியை பிடித்து அறுத்துப் போட்டு எங்களின்ரை சேவல் என்று குதிக்கிறான்கள். நீங்களும் நம்புறியளோ? அது இவர்களின்ரை கையிலே சிக்குப்படாதப்பா! என்னை நம்புங்கோ!
அப்பாவுக்கு விசரம்மா! அது தான் எங்களின்ரை சேவல் செத்துப் போச்சு என்று சொல்லி இவரே எங்களை மானம் கெடுக்கிறார். அதைக் கொல்ல இனி ஒருதன் பிறந்து வரவேணும்! சதாசிவத்தின் இளைய மகன் மேசையில் அடித்துச் சொன்னான்.
சதாசிவ மாமா சொல்லுறது போல சேவல் செத்திருந்தால் இனி சேவல் ஒன்று எங்களின்ரை காணிக்குள்ளே வளருகிறது என்கிறது ஒரு காலத்திலும் நடக்கப் போவதில்லை. அந்தக் காலமெல்லாம் போட்டுது! சேவல் என்று கதைச்சாலே மங்களம் மாமி அடிக்கத்தான் வருவா. அந்தளவுக்கு மாமி ஏமாந்து போனா! பிள்ளைகள் காசு அனுப்பியும் அதுவும் வீணாய்ப் போட்டுது. இல்லையோ மாமி. எதிர் வீட்டுக் கோபாலு தனது சேவல் எதிர்ப்பை மனதிலே வைத்துக் கொண்டு மங்களத்தைத் தூண்டி விட அவனுடன் தெருவடி சுந்தரமும் சேர்ந்து கொண்டான்.
இல்லை மங்களமக்கா! சேவலும் ஒருதரின்ரை சொல்லையும் கடைசியிலே கேட்காமல் போட்டுது. பொன்னுச்சாமியின்ரை நாத்துக் கீரையைக் கொத்தினது படுபிழையான வேலை கண்டியோ அதனாலே தான் இத்தனை பிரச்சனை எல்லாருக்கும்! அதை விளங்கிக் கொள் அக்கா தெருவடி சுந்தரம் சொல்லி முடிப்பதற்குள் தம்பி சுந்தரம் இதே வாயாலே தானே முந்தி பொன்னுச்சாமியின்ரை காவலையும் உச்சிக் கொண்டு சேவல் போட்டுது என்று வீரம் பேசினாய் தம்பி. இன்றைக்கு இப்படிக் குற்றம் சொல்லுறியே என்ன செய்வம்? சேவலுக்கு ஒத்தாசையாக இருந்த நீங்களே நாக்குப் புரண்டு கதைக்கிறியளே தம்பி மற்றவன் என்ன எல்லாம் கதைப்பான்? என்று தெருவடியின் உள்மனம் தெரியாமல் வேதனையோடு கேட்டார் சதாசிவம்.
முந்தியும் இப்பிடித்தான் சேவல் செத்துப் போச்சு என்று கதைச்சினம். வளைச்சுப் பிடிக்கப் போட்டும் பாவம் என்று விட்டனாங்கள் என்று எவ்வளவு கதையைச் சொல்லிச்சினம். பிறகு சேவல் வந்தது தானே என்றாள் சதாசிவத்தின் மகள்.
எடியே! முந்திக் கானாமல் போனதுக்கும் இப்ப காணாமல் போனதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கடியம்மா! முந்தி சேவல் மறைந்த பொழுது இருந்த சுவடே தெரியாமல் மறைஞ்சுது. ஆனால் இப்ப அது இருந்த இடத்திலே செட்டைகள் பிடுங்குப்பட்ட அடையாளம் தெரியுது. வேற கோழிகள் செத்துக் கிடக்கு. சில நல்ல கோழிகளை காணவில்லை. சாப்பாட்டுத் தட்டு கவிழ்ந்து கிடக்குது. கூடு உடைஞ்சு கிடக்கு. மரந்தடிகள் முறிஞ்சு கிடக்குது! மறைந்து இருக்க நினைத்தாலும் ஏன் இப்படி கரைச்சல் பட்டு மறைய வேணும். என்றுதான் என்னுடைய மனம் நினைக்குது. நீங்கள் நினைப்பது போல அது தப்பியிருந்தால் அரியகுட்டி ஆட்கள் நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்களா? முந்தி இப்படி நடந்தவன்களா? எந்தத் தைரியத்திலே கோயிலெல்லாம் நுளையுறாங்க? யோசித்துப் பார் பிள்ளை!
மாமா! மாமா! அரியகுட்டி ஆட்களுக்கு வால் பிடிக்கிற பொன்னுச்சாமியே இப்ப என்னைக் கண்டு தம்பி சேவல் முடிஞ்சுது என்று ஒரு கதை அடிபடுகுது! அது சேவல் உங்களுடையது தானா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கடாப்பா அதனாலே பெரிசாக வருத்தப்படாதையுங்கோ என்று சொல்லிச்சுது. அதே அப்படி சொல்லும்போது உள்வீட்டிலே இருக்கிற நீங்கள் இப்படி கதைக்கிறது நல்லதில்லே. இது எல்லாரையும் பாதிக்கும்!
தன்பங்கிற்கு மருமகனும் சதாசிவத்தைக் கண்டித்து வைத்தார்.
அதில்லைத் தம்பி சேவலுக்கென்றுதான் என்னுடைய பிள்ளைகள் வெளி நாட்டிலே இருந்து காசு அனுப்பறவன்கள். இந்த மனுசன் தேவையில்லாத கதை கதைச்சு அதை நிப்பாட்டப் போறார் மங்களம் தீர்க்கமாகச் சொன்னாள்.
அது மட்டுமே அம்மா வெளிநாட்டிலே அண்ணா ஆட்கள் சேவலுக்கு மருந்துகள் சாப்பாடுகள் வாங்க கூடு கட்ட என்று கன பேரிட்டை காசு கொடுத்து வைச்சிருக்கினம். அப்பான்ரை கதையைக் கேட்டால் இனி சேவல் இல்லை என்று வாங்கினவர்கள் ஒரு சதமும் திருப்பித் தரமாட்டினம் தெரியுமே மகள் அம்மாவுக்குச் சொன்னாள் பதட்டத்தோடு!
அப்படியென்றால் ஒரு கதைக்கு சேவல் செத்து போச்சு என்று எடுத்தாலும் இந்தக் காசுப் பிரச்சனைகளாலே எல்லாக் காசும் வரும் வரைக்கும் நாங்கள் சேவல் சாகேல்லை என்றுதானே நிக்க வேணும்! இளைய மகன் கேட்டான்.
அட பாவிகளா! எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்பட்டுது அந்தச் சேவல்! காசுக்காகவும் வரட்டுக் கவுரவத்துக்காகவும் உண்மையை மறைச்சு சேத்துத் தண்ணியிலே அனாதரவாக அதைச் சாக விடுகிறியளே! இது கடவுளுக்கே அடுக்குமா? இருக்கும் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்துவிட்டு இன்றைக்கு அதை இப்படி அடுத்தவன் எடுத்து அடக்கம் செய்ய பார்த்துக் கொண்டு நிக்கிறியளே! பொய் பேசிக்கொண்டு! நன்றியே இல்லாத நாய்களா! எதிரியாக இருந்தாலும் அரியகுட்டி சேவல் செத்ததுக்கு பிறகு காலிலே பிடித்து தூக்கி ஊருக்கு காட்டாமல் கடகத்தாலே மூடி வைச்சான். சீரழிக்காமல்! அந்த மனப்பான்மை கூட இல்லாத உங்களுக்காகவா இவ்வளவு காலமும் கஸ்டப்பட்டேன் என்று தான் சேவலின்ரை ஆவி நினைக்கும்! என்னுடைய கவலையெல்லாம் கடைசிவரைக்கும் எங்களுக்காகவே வாழ்ந்த சீவனை நாங்களே ஏமாற்றி அனுப்பி வைத்துவிட்டு இருக்கிறம் சுகமாக! இனி நல்லாக இருங்கோ உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு!
சால்வையை உதறித் தோளிலே போட்டுக் கொண்டு வெளியே வந்த சதாசிவத்தின் கண்களில் பட்டுவிடக் கூடாதென்று திரும்பிய அரியகுட்டிக்கு எடேய்! சதாசிவம் கொஞ்சம் நில்லு என்று தகப்பன் சண்முகத் தாத்தா சதாசிவத்தை தடுத்து நிறுத்துவது கேட்கிறது. தானும் நின்றார் அரியகுட்டி.
மவனே! நீங்கள் எல்லாரும் கதைச்சதைக் கேட்டன். இப்ப நான் சொல்லுறதை எல்லாரும் கேளுங்கோ. நாங்கள் வளர்த்த சேவல் மறைஞ்சு போச்சோ அல்லது செத்துப் போச்சோ தெரியவில்லை. ஆனால் அது இப்ப இல்லை. அது தானே உண்மை. சேவல் பாவித்த ஒரு பொருளை அதாவது உடமையை ஞாபகப்; பொருளாக அறிவித்து விட்டு இன்னெரு சேவலை அதன் நிழலிலே வளவுங்கோ! இதிலே தப்பில்லை. தப்பு எங்கே என்றால் மூத்த சேவலுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் விட்டால் தான் தப்பு. இன்னமும் அதை நீங்கள் கொடுக்கவில்லை! பழைய சேவல் வந்தால் அது தன்னுடைய இடத்தை ஏற்றுக் கொள்ளட்டும். அதற்கான நெறிமுறைகளை ஏற்படுத்தி வையுங்கோ. அதை விட்டுப் போட்டு சேவல் வாழ்ந்த பூவரசையும் பறிகொடுக்கிற வேலை பார்க்காதையுங்கோ
இனி யார் சேவல் வளக்கிற எண்ணத்திலே இருக்கினம். எல்லாரும் நொந்து கெட்டுப்போய் இருக்கினம் என்று கதைக்கிறவன் சேவல் வளத்தவனல்ல. சேவலை எதிர்த்தவன் தான் அப்படிப் பயத்திலே கதை விடுகிறான். சேவல் வளரத் தொடங்கினது ஒன்று இரண்டு பேரோடு தான். அப்படி ஒன்றிரண்டு பேர் இன்னமும் இருப்பினம் அதையும் மறந்து போகாதையுங்கோ!
மற்றது என்னவோ காசுக்கதை கதைச்சியள். சேவல் என்னத்துக்கு வளர்த்தோம் என்று நல்லா விளங்கினவன் சேவல் செத்துப் போச்சுது என்று காசை ஏமாற்ற மாட்டான். அப்படி ஏமாற்றினால் அவனை அந்தப் பொறுப்பிலே விட்ட குற்றம் உங்களுடையது. அப்படிப் பட்டவனோடு முரண்டு பிடித்து வற்புறுத்தி வாங்கித்தான் என்ன ஆகப் போகுது. ஏனென்றால் காசைக் கொடுக்கக் கூடாது அதை எடுக்கிறதுக்கு என்ன வழி என்று நினைக்கிறவனுக்குத் தான் சேவல் இருக்கோ இல்லையோ என்ற பிரச்சனை கை கொடுக்கும். அவன் தனக்கு வசதிப்பட்ட போது சேவல் இருக்கு என்பான். பிறகு இல்லை என்பான். அப்படிப் பட்டவன் காசைத் தந்து என்ன தராட்டில் என்ன? விடுங்கோ கொண்டு போகட்டும்! எவ்வளவோ போட்டுதாம். அதொடு இதுவும் போகட்டும். இதிலே இரகசியம் வைக்காமல் யார் யார் எவ்வளவு ஏமாற்றினார்கள் என்று பட்டியல் வெளியிடுங்கள்! அதிலே தயக்கம் உங்களுக்கு இருந்தல் அந்தப் படிட்டியலில் உங்கள் பேருக்கும் இடமிருக்கு என்றுதான் அர்த்தம்! கூட்டுக் கொள்ளை! அவ்வளவுதான் என்று கை விரித்துவிட்டுப் போக வேண்டியது தான்! வேறு என்ன செய்கிறது. நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாம். நித்திரை மாதிரி நடிக்கிறவனை என்ன செய்யுறது? அது மாதிரித்தான் இதுவும்!
கலைஞ்சு போன கூட்டை குருவி கட்டாமல் விடுவதில்லை! உடைஞ்சு போன தேன் கூட்டை தேனீக்கள் ஒட்டித்தான் குடியிருக்கின்றன. கட்டுங்கோ! ஒட்டுங்கோ! வளைந்து இடைஞ்சல் செய்யுது என்றால் வெட்டுங்கோ! அதை விட்டுப் போட்டு சேவல் அப்படி பிடிவாதம் செய்தது. இப்படிக் கூவிச்சுது என்று இப்ப குற்றம் சொல்லாதையுங்கோ!
உங்கள் விருப்பப்படி ஆட வேண்டும் என்றால் நீங்கள் மயில் வளத்திருக்க வேணும்! நீங்கள் சந்தோசப்பட பாட வேணும் குயில் வளத்திருக்க வேணும். இல்லைச் சமாதானம் தான் வேணும் என்றால் புறா வளர்த்திருக்க வேணும்! நீங்கள் வளர்த்தது சேவல்! அதுக்கு பொழுது விடியவேண்டும் என்று செட்டை அடித்துக் கூவத்தான் தெரியும்! சண்டை போடத்தான் தெரியும்! அதை அது சரியாகத்தான் செய்தது. இதிலே நீங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை! குற்றம் சொல்ல ஒன்றுமில்லை!
என்னுடைய அப்பு மண்ணாலே தன் காலத்தில் கட்டின வீட்டுக்கு நான் எனது காலத்தில் கிடைத்த சுண்ணாம்பு வாங்கி சாந்து சுவர் வைத்தேன்! பிறகு நீ அதே வீட்டுக்கு சீமெந்து வந்ததால் கல் மதில் கட்டினாய்;! நாளைக்கு வாறவன் தகரக்; கூரையை சரியில்லை என்று பிடுங்கிப் போட்டு ஓடு போடுவான்;! காலத்துக்கு காலம் ஒரே வீடு வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பல மாறுதல்களை அடையும்! எல்லாம் முடிந்து அடுத்த வருடம் மாடி வீடு கட்ட வேணும் என்று நினைத்திருக்க புயல் அடித்து எல்லாம் போய் திரும்பவும் அப்பு காலத்து மண் வீட்டிலே இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியும் வரும்!
இதுக்குப் பெயர்தான் பரினாம மாற்றம்;! காலத்தின் வரலாறும் அதுதான். அப்படிக் காலத்துக்கக் காலம் பலமாக நிலை கொள்வதை விட்டுப் போட்டு நான் செத்துப்போன அப்பு தொடக்கின வீடு அது வந்து தான் எல்லாம் செய்ய வேணும் என்று நினைச்சால் மண் வீடு கரைஞ்சு வாழ்ந்த இடத்து சுவடு தெரியாமல் நடுத் தெருவிலே நிக்க வேண்டியது தான்!
போங்கோ பிள்ளைகள்! கூட்டம் கூடி கதைச்சு காலத்தை வீணாக்காதையுங்கோ! உங்களுக்குள்ளே சண்டைப்பிடியாதையுங்கோ! புதுச் சேவலை கொண்டு வாங்கோ! வளவுங்கோ! பூவரசிலே ஏறி கூவச் செய்யுங்கோ! அந்தச் சத்தம் அரியகுட்டி ஆட்களை மட்டுமல்ல பொன்னுச்சாமி குடும்பத்தையும் இனி நிம்மதியாகப் படுக்க விடாமல் செய்து கொண்டே இருக்கட்டும்! அரியகுட்டி கூட்டத்தாலே எவ்வளவு காலத்துக்கு எவ்வளவு சேவல்களை அழிக்க முடியும் என்றுதான் பார்ப்போமே! சேவல்கள் மாறினாலும் கூவல் சத்தம் ஒன்றுதான் என்று அவன்களுக்கு புரியும் போது தன்னாலே எல்லாம் சரிவரும்!
ஒரு நோய்க்கு எல்லா வைத்தியமும் செய்து பார்த்து சரிவரவில்லை என்ற நிலையில் அறுவைச் சிகிச்சை செய்வது தான் இனி வழி என்று முடிவெடுத்த பிறகு எவ்வளவு செலவானாலும் எவ்வளவு வேதனை வந்தாலும் அதைச் செய்யுறது தான் முறை. அதை விட்டுப் போட்டு இடையிலே என்ன சித்த வைத்திய மயிர் வேண்டிக் கிடக்குது என்று கேட்கிறன்? ஆயுதத்தோடு நிக்கிற இடாக்குத்தர் செய்ய முடியாததை அறுகம் புல்லோடை நிக்கிற பரியாரியார் செய்து போடுவரே! புண்ணுக்கு மருந்து கட்ட வேணும்! நோவுக்கு ஒத்தணம் பிடிக்க வேணும்! நீங்கள் புண்ணுக்கு ஒத்தணம் பிடிக்க யோசித்தால் தண்ணீர் பட்டு சிதழ்ப்பிடித்து கொதிவலிதான் மிஞ்சும். இதை நல்ல வடிவாக விளங்கிக் கொள்ளுங்கோ! பாக்கப் போனால் அரியகுட்டி பொன்னுச்சாமி கூட்டத்தை விட நீங்கள் தான் படு போக்கிலிகளாக தெரியுறியள் எனக்கு!
அரியகுட்டியின்ரை வேலியை பிரிச்சு அவன் பிடிச்ச கோழிகளைப் பறித்து எடுக்க யோசிக்காமல் அடுத்த கிழமை இரண்டை தாறன் என்றவன் பிறகு ஒன்று தாறன் என்றவன் என்று கதைக்க வெட்கமாக இல்லை உங்களுக்கு? இதென்ன நடக்கிற கதையோ என்று உன்னுடைய மகன் என்னுடைய பேரன் சிரிக்கிறான்! அது இப்ப நடக்காத கதை என்றாலும் கூட அந்த நினைப்பு மனதில் எப்பவும் தணல் போல புகைந்து கொண்டு இருக்க வேணும். அணைந்து போகக் கூடாது என்று உன்னுடைய பிள்ளைக்கு சொல்லி வை சதாசிவம்.
கூட இருந்த சேவலே பிரிஞ்சு ஆபத்தாய் போன போது எதுக்கும் கலங்காமல் அடிச்சு எங்கன்ரை காணி எல்லைக்;கு அங்காலே துரத்திக் கொண்டுபோய் விட்ட சேவலுக்கு நீங்கள் காட்டுற நன்றி ஒன்று இருக்கும் என்றால் வீரத்தை விலை பேசாதையுங்கோ! வீரத்தை விலை பேசும் ஈனச் செயலுக்கு இராஜதந்திரம் என்று பெயர் வைக்காதையுங்கோ! எவனை இன்று பாhத்தாலும் அடிமைத் தனத்துக்கு கூட்டிப் போகிறேன் சுகமாக இருக்கலாம் என்கிறான். எங்களின்ரை கோழியிலே வைத்த குழம்பு அடுத்த வீட்டிலே நிறைய இருக்குது. வா வாங்கித் தாறன் பசி கிடக்காமல் சாப்பிடு என்று புத்தி சொல்லுறான். அதை இராஜதந்திரம் என்று நினைக்கிறான் இந்த மடைப்பயல்!
உங்களின்ரை இராஜதந்திரங்களை எல்லாம் கொண்டுபோய் குப்பையிலே போடுங்கோ. இன்றைக்கல்ல நூறு வருசம் போனாலும் அடிச்சு அடக்கினால் ஒழிய அரியகுட்டி ஆட்கள் அடங்க மாட்டான்கள்! அதை வடிவாக உணர்ந்தது அந்தச் சேவல் தான்! நீங்கள் அல்ல! அதனாலே தான் அது பிடிவாதமாக நின்றது. அட மடைப் பயல்களா! சந்தர்ப்பம் வசதி இல்லை என்று எங்களை அடித்த ஒருதனை அடிக்காமல் விடுகிறது வேறு. அவனை அடிக்க வேணும் என்ற எண்ணத்தையே கை விடுகிறது வேறு! இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் தாளம் போடுறியளே! அது வேறொன்றுமில்லை. அடுத்த வீட்டுக்காரன் உங்களின்ரை காலை முறித்தாலும் நொண்டிக் கொண்டு சீவிச்சுப் போடலாம் என்ற நினைப்புள்ள ஆட்களின்ரை சேர்க்கை வாசனை உங்களுக்கு கூடிப்போச்சு! அது தான் சேவல் முன்பு அப்படி உங்களைக் கெடுத்த ஆட்களைத் முதலிலே கொத்திச்சுது! அவைதான் இப்ப திரும்ப முளைக்கப் பார்க்கினம். அதுக்குத்தான் இன்னொரு சேவல் உடனடியாக வேணும்! என்று சொல்லுறன்.
இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகேல்லை. முதல்லே தோல்வியை ஒத்துக் கொள்ளுங்கோ. பிறகு எங்கே பிழை நடந்தது என்று கண்டு பிடியுங்கோ. அதுக்கு காரணம் என்ன என்று யோசியுங்கோ! தவறைத் திருத்திக் கொள்ளுங்கோ! அதுக்குப் பிறகு சரியாகச் செய்யுங்கோ! போங்கோ! அதை விட்டுப் போட்டு அந்த ஒரு சேவல்தான் தைரியமானது என்று முடிவு கட்டாதையுங்கோ அதுவும் தைரியமானது என்று நினைப்பை மாற்றிக்கொண்டு என்றைக்கு நீங்கள் இறங்கிவந்து இன்னொரு சேவலை வைத்து செயலாற்ற நினைக்கிறியளோ அன்றைக்கு உங்களுடைய இன்றைய கண்ணீரும் துன்பமும் இருந்த இடம் தெரியாமல் போகும்! இல்லாவிட்டால் நீங்கள் தலை கீழாக நின்றாலும் ஒன்றும் நடக்காது என்றார் சண்முகத் தாத்தா.
எல்லாவற்றையும் மூரி வேலிக்கரையில் நின்று கேட்ட அரியகுட்டி திரும்பி நடந்தார். அவர் மனதில் சேவல் செத்த மகிழ்ச்சி இப்போது இல்லை! அந்தச் சாவு விதையிலிருந்து விருட்சமாக எழ இருக்கின்ற நாற்றின் அசைவுக்கு எதிர்காலத்தில் என்ன விலை கொடுக்கப் போகிறோம்? என்ற கவலை தோய்ந்த கேள்வியே வியாபித்திருந்தது!. அவர் நடையில் ஒரு சோர்வு தெரிந்தது! வெற்றுப் பூவரசை ஒருகணம் அவர் கண்கள் பார்த்துக் கொள்கின்றன!