தனித் தமிழ் இயக்கம்
அழகிய சிறிய மாளிகை! அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா! புல்வெளி பூஞ்செடி பழ மரம் நிழல் மரம்! ஊடே செல்லும் இத்தகைய மனங்கவர் சூழல்!
பதின்மூன்று அகவையுடைய இளங்குயில்! அக் குயிலைத் தமிழ் செய்த தவத்தால் தந்த தந்தையார்! இருவரும் புல்வெளியின் ஊடே அமைந்த நடை பாதையில் உலாவிக் கொண்டே நூல் ஓதகின்றனர்! உரையாடுகின்றனர்! இடை இடையே இசைக்கின்றனர்!
தந்தையார் இசையில் இளங்குயில் தோய்கின்றது! தந்தையின் குரலிசை தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைபோல் இனியது. அதனையும் வெல்ல வல்லது இளங்குயிலின் குரலிசை!
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் என்பது வள்ளுவம். பண்ணிசையுடன் பாடல் பொருளும் உணர்ந்து ஓதினால் அன்றோ உள்ளம் தளிர்க்கும்! உயிரும் தளிர்க்கும்! அவ்வாறு தளிர்க்கப் பாடவல்ல தந்தையும் மகளும் அவர்கள்!
தந்தையார் வள்ளலார் பாடிய பாடல் ஒன்றை மெல்லென இசைக்கிறார்! அம் மெல்லியல் குயிலும் மெல்லிதழ் அசைய மிழற்றுகின்றது!
பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சி வாயத்தை நான்மறவேனே!
இசைப் பாகாக வடித்த தந்தை முதலடியை முதலடியை மீண்டும் இசைத்து உற்ற தேகத்தை என்று சொல்லிச் சற்றே தயங்கினார். தந்தை முகத்தை நோக்கினார் இளஞ்செல்வி.
நீலா! வள்ளலார் பாடிய இவ் வளமான பாடலில் தேகம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இது வடசொல். இவ்விடத்தில் யாக்கை என்னும் தென் சொல்லைப் பெய்திருந்தால் இன்னும் எத்தகு சுவையாகவும் நயமாகவும் இருந்திருக்கும்! என்றார் தந்தையார்.
அப்பா! வடசொல் தமிழில் புகுவதால் சுவையும் நயமும் குறையுமா அப்பா?
சுவையும் நயமும் குறைவது மட்டுமில்லை. வழக்கில் உள்ள தென் சொற்களும் படிப்படியாய் வழக்கில் இருந்து நீங்கிப் போகும்! அதனால் கால வெள்ளத்தில் மறைந்து வழக்கற்ற சொற்களாகவும் போய்விடும்! அவ்விடத்தில் வேண்டாத வேற்றுச் சொற்கள் புகுந்து விடும்! அ
தனால் வேண்டியதை இழப்பதுடன் வேண்டாததை ஏற்குமபடியான இருமடங்குக் கேடும் உண்டாகும்!
அப்பா! அப்படியானால் நாம் வடமொழி முதலிய வேற்று மொழிச் சொற்கள் கலவாமல் பேசவும் எழுதவும் உறுதி கொள்ளலாமே! அது நம் மொழிக்காவல் ஆகுமே!
ஆம் குழந்தாய்! என்னுள் ஆழமாக அமிழ்ந்து கிடந்த செய்தி இது. உன் வழியாக வெளிப்படுகின்றது. நல்லது! இன்று முதல் நம் எழுத்திலும் பேச்சிலும் பிற மொழிக் கலப்பில்லாத கடைப்பிடி கொள்வோம்!
தந்தையும் மகளும் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவு இது. இதுவெ தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாறு ஆகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தையும் மகளும் தவத்திரு மறைமலை அடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர்! இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்போது அடிகளாருக்கு அகவை நாற்பது. மகளுக்கு அகவை பதின்மூன்று!
– புலவர். இரா. இளங்குமரனார்