குறளில் ஒரு நாடகம்! – கோல் காணாக் கண்கள்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து!

தோழி:
மாலைப் பொழுது வரும்! மடிகிடந்தார் நினைவு வரும்! காலைத் தடவியவர் கை கிடந்த உணர்வு வரும்! கொதிப்பாள் ஒருத்தி! கொக்கரிப்பாள் காமத்தில்! குதிப்பாள் வானத்தில்! குறை சொல்வாள் காதலனை! முகம் கொடுத்துப் பேசேன்! முன்னாலே போய் நிற்கேன்! அகம் கொடுத்த காதலால் அழுதது இனிப் போதும் என்பாள்! மாலை முடிந்து இரவு வரும் அப்போது! பூனைபோல் ஒருவன்

புகுந்திடுவான் அவள் வீட்டில்! எண்ணெய்த் திரி விளக்கு எப்படியோ அணைந்து விடும்! வளையல் கலகலக்கும்! வாளி நீர் ஒலி கேட்கும்! சமையல் புகை வந்து சங்கதியைச் சொல்லிவிடும்! பொழுது விடியும்! பூனையதும் ஓடிவிடும்! கட்டிப் புரண்டதிலே கை நகத்து அடையாளம் குட்டி நிலாப் போலக் குவிந்துவிடும்! அதையெல்லாம்………

தலைவி:
போதும்! தாயே போதும்! காதல் வலை வீழாக் காரணத்தால் கண்மணியே மோதல் செய்ய வந்துவிட்டாய் காலையிலே! ஆற்றைக் கடல் அணைக்கும்! அருமதியை வான் அணைக்கும்! நாற்றை வயல் அணைக்கும்! நன்மலரை வண்டணைக்கும்! ஊற்றை நதி அணைக்கும்! ஓவியத்தைச் சுவர் அணைக்கும்! கொற்றொடியார் மார்பகத்தைக் கொழுநர் அல்லால் யார் அணைப்பார்? தெரியுமா தோழி உனக்கு? கிளைமாறி அமர்கின்ற கிள்ளையல்ல என்னகத்தான்! நானும்  மரம் மாறிப் படருகின்ற கொடியுமல்ல. கண்டோம்! காதலித்தோம்! கையளைந்தோம்! அதிலென்ன?

தோழி:
அணைத்திடுங்கள் நன்றாய்! ஆரும் தடுக்கவில்லை! துணைத்தலைவன் இல்லாத போதெல்லாம் நீ தொடுத்த கணைத்தடங்கள் எத்தனையோ. எண்ணிப்பார்! பாவி என்பாய்! பாவை மனம் அறியாப் பாதகனே எனச்சொல்வாய்! பகற்பொழுதில் வெறுத்து பகல் அழிந்த இராப்போதில் அகம் தழுவிக் கூடும் அதுவென்ன காதலோ? காலையிலே நெருப்பாகத் தெரியும் காதலர் மாலையிலே இனி;ப்பாவது எப்படி? இல்லாத போதினிலே எத்தயையோ குற்றங்கள்! இருந்துவிட்டால் கைநகமும் காயங்களும் வந்துவிடும்!

தலைவி:
இதோ பார்! என்ன இது? மையார் தடங்கண் மங்கையர்கள் கண்ணுக்கு மை தீட்டும் கரிக்கோல்! கரைத்த மையும் அதைக் கண்ணெழுதும் கோலுமாய் முன்னாலே காண்கின்றாய்! எடுத்துக்கொள்! எடுத்தாயா? கண்ணருகே கொண்டுபோ! உன் கருங்கண்ணில் மை எழுது! கையெடுத்த கோலதுதான் கண்ணருகே வந்ததும் இமை மூடும் பெண்ணணங்கே! காதலும் அப்படித்தான்! காமமும் அப்படித்தான்! மையெழுதும் கோலருகே வந்ததும் இமைமூடும் விழிபோல காதலன் அருகே வரும்போது அவன் குறை தெரிவதில்லை எனக்கும்! அகம் மூடிவிடும் எனக்கு! உடல் கூடிவிடும் அவனுடன்! எழுதி முடியும்வரை! உண்மை இதுதான் பெண்ணே!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து!

எழுதுங்கால் – கண்ணுக்கு மை எழுதும் போது: கோல்காணாக் கண்ணேபோல் – முடிக்கொள்வதால் மையைத் தொட்டு எழுதுகின்ற கரிக்கோலைக் காணமுடியாத கண்ணைப் போல: கொண்கன் பழி – காதலனுடைய தவறுகள் மனம் நிறைய ஞாபகம் இருந்தும்: கண்டவிடத்து கானேன் – என்முன்னே அவனைக் காணும் போது அவற்றைக் காணமுடியாதவள் ஆகின்றேன்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.