கேட்க மறுத்த கவிதையும் ஏற்க மறுத்த பரிசிலும்!
அது மன்னன் அதியமான் அரண்மனையின் வரவேற்பு மண்டபம். பல்வேறு தேசத்து புலவர்கள் சிலரும் உள்ளூர் புலவர்கள் பலரும் என்று மன்னனிடம் பரிசுபெற்றுச் செல்ல வந்த கவிஞர்கள் கூட்டத்தினால் அந்த மண்டபம் நிறைந்திருந்தது. பலரும் தங்கள் பிரயாண அனுபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்துள் பெருஞ்சித்திரன் என்ற ஒரு புலவனும் மன்னனைக் கண்டு ஏதாவது பொருள்; பெறும் எண்ணத்தோடு வந்திருந்தான். அவன் பயணம் செய்து வந்த வழியைப் போல அவன் நடந்த காலமும் மிகவும் நீண்டது. காத்திருப்போர் பட்டியலில் தன் பெயரையும் கொடுத்துவிட்டு மன்னனின் அழைப்புக்காகக் காத்திருந்தான் அவன்.
மலைத் தொடர்களையும் காட்டுப் பாதைகளையும் கடந்து வறுமையின் காரணமாக அந்தப் புலவன் அதியமானைத் தேடி வந்திருந்தாலும் அவன் ஏற்கனவே பல பரிசுகளை பல சபைகளில் வென்றவன்.
குமணன் என்ற குறுநில மன்னனுக்கு நெருக்கமானவன்.
அவன் தன் துணிப் பையில் இருந்து அதியமானைப் பற்றித் தான் எழுதிவந்த கவிதையை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கின்றான். இந்த மன்னன் எப்படி இருப்பான். இந்தப் பாடல் அவன் புகழுக்கும் சிறப்புக்கும் உரியதாக இருக்குமா தன் வாழ்நாளிலே எத்தனை பெரிய புலவர்களையும் செய்யுட்களையும் அவன் கண்டு கேட்டு மகிழ்ந்திருப்பான். என்பாடல் எடுபடுமா
அவனுக்கு ஒரு சோர்வு வருகின்றது. அனால் உள்ளமோ என் தமிழ் தோற்காது என்று சொல்லிக் கொள்கின்றது. மன்னன் என்னை எப்படி அழைப்பான். எங்கே இருத்துவான் அவன்கூட யார்யார் இருப்பார்கள் அவர்களுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் எத்தனையோ முன்னெச்சரிக்கை எண்ணங்களுக்கு மனம் இலக்காகி விடுகின்றது.
அப்போது தான் முரசம் ஒன்று ஒலிக்கின்றது. புலவர்களே மன்னர் அதியமான் முக்கிய அரண்மனை வேலைகள் காரணமாக இன்று யாரையும் சந்திக்க முடியாமல் இருக்கின்றார். ஆனாலும் மன்னரை நம்பி வந்த உங்கள் யாரையும் ஏமாற்றாது பெரும் பொருளை உங்களுக்கு வழங்கும்படி தந்திருக்கின்றார்.
எனவே நாம் அழைக்கும் பெயர் உடையவர்கள் வந்து உங்களுக்கான பரிசினைப் பெற்றுச் செல்லுங்கள். மன்னருக்கு நீங்கள் ஏதாவது தருவதற்கு விருப்பினாலும் மன்னர் சார்பில் எங்களால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் அது மன்னருக்குத் தெரியப்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்புச் சொன்னது.
பல புலவர்கள் தாங்கள் தங்கள் பெயர் அழைக்கப்பட்ட போது எழுந்து சென்று மலர்கள் கனிகள் தாங்கள் எழுதிவந்த கவிதை ஏடுகள் என்று பலதரப்பட்ட பொருட்களை மன்னருக்குக் கொடுத்துவிட்டு பரிசில்களை வாங்கிக் கொண்டு முக மலர்ச்சியோடு சென்றனர்.
பெருஞ்சித்திரன் என்ற பெயர் அழைக்கப்பட்ட போது அந்தப் புலவன் எழுந்து வந்தான். இது உமக்கான பரிசு. பெற்றுக் கொள்ளும் என்றான் ஒரு பணியாள்.
அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். மலைகளையும் ஆறுகளையும் கடந்து கடந்து இந்தப் பரிசுக்காக வந்தேன் என்று நினைத்து விட்டானா உங்கள் மன்னன். என்னை அழைத்துப் பேசி என் கவிதையைக் கேட்டு மகிழ்ந்து என்புலமை கண்டு வியந்து ஒரு சிறு பரிசு தந்தாலும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருப்பான் இந்தப் பெருஞ்சித்திரன். மன்னனைத் தரிசித்த மகிழ்வும் எனக்கு இருந்திருக்கும்.
என் முகத்தைப் பார்க்காமலே பரிசு தருகின்றானா அதியமான். என்னை என்ன கவிதை வர்த்தகம் செய்யும் வாணிபப் பரிசிலன் என்று நினைத்துக் கொண்டு உங்கள் மூலமாக பொருள் தந்து அனுப்புகின்றானா அவன். என் கவிதையை இந்த அரண்மனையிலே விற்றுக் காசாக்கிச் செல்லும் தமிழ் வணிகன் அல்ல நான். இந்தப் பொருளை நான் ஏற்க மறுத்துவிட்டதாகச் சொல்லி அவனிடமே ஒப்படைத்து விடுங்கள். நான் வருகின்றேன் என்று கூறி அரண்மனையை விட்டு வெளியேறினான் அந்தப் புலவன்.
குன்றும் மலையும் பல பின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அருங் காவலன்
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி
தினை அனைத்து ஆயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே
(சங்க இலக்கியம் – புறநானூறு – பாடல் 208 பாடியவர் – பெருஞ்சித்திரனார்)
இந்தப் பெருஞ்சித்திரன் பெரும் வசதியோடு வாழ்ந்த புலவன் அல்லன். வறுமை மிக்க குடும்பத்திலே தன் குழந்தைகளை வளர்ப்பதற்கு மனைவி படும் துன்பங்களை புறநானூற்றிலே இன்னுமொரு இடத்தில் விரிவாகச் சொல்லியிருப்பான் அந்தப் புலவன். மன்னன் என்பது அன்றைய அரசாங்கம். அந்த அரசுப் பரிசையே வாங்க மறுத்து வெளிநடப்புச் செய்வதற்கு எவ்வளவு மனத்தைரியம் இருக்கவேண்டும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்றைய தமிழ்ச் சமுதாயத்திலே நூல்களை எழுதி விட்டு யார் காலைப்பிடித்து அதற்குப் பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்று அலையும் மானுடர்களை எங்கும் காண்கின்றோம். எவ்வளவு பணம் செலவானாலும் சரி அரசின் உயர்விருது கிடைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்களை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். காசு கொடுத்துக் கௌரவ கலாநிதிப் பட்டம் வாங்கியவர்கள் பட்டியலும் எமக்குள் மிக நீளமானது.
பெருஞ்சித்திரன் போன்றவர்களோடு எம்மவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து சங்க மக்களின் சத்திய வாழ்வினை நாம் போற்றிப் பேண வேண்டும்.
இரா.சம்பந்தன்
(கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் 5.8.2024 வெளிவந்த எனது கட்டுரை இது)