சிலம்பும் சிதைப்பும்!
சிலப்பதிகாரத்திலே ஒரு உணர்ச்சி மயமான இடம். கட்டிய மனைவியை விட்டு மாதவியுடன் ஓடிய கோவலன் பொருள் இழந்து மானம் இழந்து மனைவி கண்ணகியிடம் திரும்பி வருகின்றான். இரவோடு இரவாக ஊரைவிட்டு வெளியேறி மதுரைக்கு வருகின்றார்கள் அவர்கள். அங்கே ஆயர் பெண்கள் தந்த வீட்டிலே கோவலனுக்குச் சமைத்துச் சாப்பாடு கொடுக்கிறாள் கண்ணகி.
நான் உனக்கு எவ்வளவோ கொடுமைகள் செய்தும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு நான் கூப்பிட்டதும் உன் சொந்த பந்தங்களை எல்லாம் உதறி விட்டு என்னை நம்பி என்னோடு வந்து விட்டாயே என்று கண் கலங்கினான் கோவலன்.கண்ணகி சொன்னாள். குடும்பப் பெண் என்றால் அறநெறி நிற்போர்க்கு உணவு கொடுத்துப் போற்ற வேண்டும் அந்தணரைப் பேண வேண்டும். துறவிகளை எதிர் கொண்டு வரவேற்க வேண்டும். எங்கள் முன்னோர்கள் வழக்கப்படி விருந்தினரை வரவேற்று உபசரிக்க வேண்டும். ஆனால் நீர் என்னைக் கைவிட்டு ஓடியதாலே இந்த நான்கு கடமைகளையும் வாழ்வில் நான் இழந்தேன்.
அந்த நேரத்திலே மிகவும் பணக்காரரான உமது அப்பாவும் அம்மாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். நான் கவலைப்படுவேன் என்று நினைத்து அவர்கள் நீர் செய்த வேலையாலே உம்மிலே கொண்டிருந்த தங்கள் அடக்க முடியாத கோபத்தையும் அடக்கிக் கொண்டு என்னோடு அன்பாகவும் பரிவாகவும் பேசினார்கள். என்னைப் பாராட்டினார்கள்.
நீர் என்னைக் கைவிட்டுப் போன கவலையும் அதனால் நான் பட்ட வேதனையையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுவது போல என் வாயிலே மெல்லிய புன்சிரிப்பு வெளிப்பட அவர்கள் அதைப் பார்த்து மிகவும் துன்பப்பட்டார்கள்.
வாழ்க்கையிலே யாருமே செய்ய விரும்பாத கூடாத வேலையைச் செய்து போட்டு வந்து நின்றீர். ஆனால் யாராலும் மாற்ற முடியாத அன்பை உம் மீது வைத்திருந்தவள் என்ற காரணத்தால் நான் நீர் கூப்பிட்ட உடனே எல்லோரையும் விட்டு உம்மோடு புறப்பட்டு வந்துவிட்டேன்.
அறவோர்க்கு அளித்தலும்இ அந்தணர் ஓம்பலும்இ
துறவோர்க்கு எதிர்தலும்இ தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும்இ இழந்த என்னைஇ நும்
பெருமகள் தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவு இகந்தனனாஇ
அற்பு உளம் சிறந்து ஆங்குஇ அருள் மொழி அளைஇ
என் பாராட்டஇ யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்தஇ
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்இ
ஏற்று எழுந்தனன்இ யான்’என்று அவள் கூற-
( சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை )
சிலம்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இலக்கியம். ஆனால் அதில் சொல்லப்பட்ட இந்தச் செய்தி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலே இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு வந்த கணவனுக்கு அவனிலே உயிர் வைத்திருக்கும் ஒரு மனைவி சொல்லக் கூடிய யதார்த்தமான வார்த்தைகளாக இருக்கின்றன.
அதையெல்லாம் விட பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் என்ற வெற்றி வேற்கை அறவுரையையும் தவிடு பொடியாக்கி விடுகின்றன அவளின் வார்த்தைகள் தனது வெறுப்பையெல்லாம் சொல்ல வேண்டிய நேரத்தில் போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்று கூறி கண்ணகி கணவனைக் கண்டித்தாள். வெற்றி வேற்கையைப் படித்து விட்டு மௌனமாக அவள் இருந்து விடவில்லை. நன்றாக உறைக்கும்படி கொடுத்தாள். சமைத்துச் சோறு போடும் போது!
சிலப்பதிகாரம் என்றவுடன் இந்திர விழாவும் சிலம்பு உடைத்து வழக்குப் பேசியதும் மதுரையை எரித்ததும் போன்ற நிகழ்வுகள் தான் பலரின் நினைவிலும் வரும். ஆனால் காலம் காலமாக கணவனைத் தொழுது கொண்டும் அவன் செய்வன எல்லாவற்றுக்கும் தலை ஆட்டிக் கொண்டும் இருந்து விடாமல் குடும்பத்தில் தப்பு நடக்கும் போது அதை எடுத்துச் சொல்லித் திருத்தக் கூடிய ஒரு மனநிலை கொண்ட பெண் சிலம்பிலே படைக்கப்பட்டிருப்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
குற்றம் கண்டவிடத்து பதியைக் கண்டிக்கத் தெரிந்த காரணத்தால் தான் கண்ணகியால் கொலை நடந்த போது பாண்டியனையும் தண்டிக்க முடிந்தது.
வீட்டிலே தப்பு நடக்கும் போது கண்டிக்கத் தெரிந்த ஒரு பெண்ணால் தான் நாட்டிலே தப்பு நடக்கும் போதும் கண்டிக்க முடியும் என்று கருத்தை நிறுவுவதற்காக சிலம்பிலே படைக்கப்பட்ட புரட்சிப் பெண் கண்ணகி உரை ஆசிரியர்களால் அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு திசை திரும்பி கற்பு என்ற மேடையில் ஏறி அதற்கு அரசியாக நின்று கொண்டிருக்கின்றாள் பாவம்.