பாபாவின் வாழ்க்கையில்!

மனைவிளங்க விளக்கெடுத்தல் வழக்கம்! அந்த
வேளையிலே எரிப்பதற்கு எண்ணெய் வேண்டி
வீதியிலே கடைத்தெருவில் நடப்பார் பாபா!…
ஆதியிலே இலவசமாய் எண்ணெய் இட்டோர்
அப்புறமாய்க் குணம்மாறி நிந்தித் தார்கள்!
பாதியிலே இடைமறித்து ஒருநாள் அந்தப்
பாவியர்கள் சொன்னார்கள் பாபா காதில்!
வெறுங்கைக்கு எண்ணெயிட விருப்பம் இல்லை!
முடியும்வரை செய்துவிடோம் இனிமேல் எண்ணெய்
முடியாது தருவதற்குப் போங்கள் என்றார்!
கடியும்வரை விட்டுவைத்தே தெய்வம் என்றும்
கருணையினைப் பிறகளிக்கும் போலும் ஐயோ!
மடியும்வரை தீராத பாவம் வேண்டி
மானுடர்கள் இதைச்சொன்னார் தெய்வம் முன்னால்!
நல்லதெனச் சிரித்துவிட்டு திரும்பிச் சென்றார்
நாயகனாம் பாபாவும் வெறுங்கை யோடே!
அல்லதெலாம் செய்துவிட்ட அந்த மாந்தர்
அப்புறமும் விடவில்லை! இன்று பாபா
இல்லமது இருட்டினிலே கிடக்கும் அங்கே
எப்படித்தான் விளக்கெரியும் என்று பார்த்தார்!
சொல்லவொரு வார்த்தையிலாக் கடவுள் என்ற
சோதியவர் பாபாவும் ஒன்றைச் செய்தார்!
பாத்திரத்தில் குளிர்நீரை எடுத்துக் கொண்டார்
பலர்காண விளக்கெல்லாம் எண்ணெய் போல
சாத்திரங்கள் உச்சரித்து சிறிதே இட்டார்
சாந்தமுடன் திரியிட்டுத் தீபம் இட்டார்
நாத்திகராய் மறுத்தவர்கள் முகங்கள் நாண
நன்றாக எரிந்தனவே தீபம் எங்கும்!
ஆத்திரத்தால் அறிவிழந்த மாந்தர் வந்து
அழுதார்கள் பாபாவின் காலில் வீழந்தே!