பதவியும் தகுதியும்!
வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டும் கணவனின் தவறான நடத்தையால் பொருள் இழந்து காற்சிலம்போடு மட்டும் மதுரைக்கு வருகின்றாள் அந்தப் பெண்! ஆம்! போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! என்று இளங்கோவடிகள் சொல்லுவாரே! அதைத்தான் மற்றவர்கள் மதிக்காத வேலை செய்து விட்டீர்கள் என்று கணவனைக் கோபித்துப் கொண்டதோடு அவனின் குற்றங்களை மறந்து தன் காற்சிலம்பு ஒன்றைக் கொடுக்கிறாள் அதை விற்றுத் தொழில் தொடங்கும்படி கணவனிடம்!
மதுரையிலே சிலம்பு விற்கப் போன கணவன் கையில் இருந்த சிலம்பு தொலைந்து போன பாண்டிய அரசியின் சிலம்பாகச் சித்தரிக்கப்பட்டு கள்வனைக் கொல்லும்படி பாண்டிய அரசிடம் இருந்து ஆணையும் தந்திரமாகப் பெறப்பட்டு தவறாக தண்டனையும் நிறைவேற்றப்பட்டு விடுகிறது அரசாங்கச் சிலம்பை ஏற்கனவே திருடியவர்களால்!
கணவனை இழந்த கவலை ஒரு புறம்! கள்வன் என்ற அவமானம் ஒரு புறம் என்று துடித்தாள் அந்தப் பெண்! கவலைகள் திரண்டு கோபக் கனலாக மாறியது! மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் என்று பாண்டிய மன்னனைப் பார்க்கப் போனாள்!
அரன்மனைக் காவலன் அவள் கோலத்தைக் கண்டு திகைத்தான்! சற்றுப் பொறு தாயே என்று கூறி விட்டு மன்னனிடம் ஓடினான்! அங்கே தான் இளங்கோவடிகள் பதவியில் இருப்பவன் தகுதி பற்றிச் சுட்டிக் காட்டுவார்!
மன்னனிடம் ஓடிய பணியாள் அரசே ஒரு பொம்பிளை அழுது கொண்டு கையிலே சிலம்போடு உங்களைப் பார்க்க வந்திருக்கின்றாள் என்று மட்டும் சொல்லியிருப்பானேயானால் அதை இங்கு எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது! அது சாதாரண உரையாடலாக மறைந்திருக்கும்!
வந்திருக்கும் பெண் பற்றி அந்த வேலைக்காரன் சில கருத்துக்களைச் சொல்கின்றான். அந்தக் கருத்துக்கள் அவனின் அறிவையும் அனுபவத்தையும் பறைசாற்றுகின்றன! அவன் காவலாளியாக தொழில் பார்த்தாலும் கல்விக் கடலாக மிதக்கிறான்!
அரசே! கோபத்தோடு வந்திருக்கிற பெண் முன்பு மகிடாசூரனின் தலையை வெட்டி வீழத்திவிட்டு அருவி போலக் கொட்டிய குருதியையும் பொருட்படுத்தாமல் அந்த தலையின் மீது ஏறி நின்ற வெற்றி வேல் தாங்கிய தடக்கையை உடைய இளங்கொடியாகிய கொற்றவையோ என்று பார்த்தேன் அவளும் இல்லை!
கன்னியர் ஏழு பேரில் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் இல்லை! இறைவனை நடனமாடக் கண்ட அணங்கு போலவும் தெரியவில்லை! காண்பவரை அஞ்சச் செய்யும் பாலை நிலத்தை விரும்பி உறைகின்ற காளியோ என்றால் அவளும் இல்லை1 தாரகாசுரனுடைய அகன்ற மார்பைப் பிளந்த துர்க்கையோ என்றால் அவளும் இல்லை! இவர்களை எல்லாம் விடக் கோபக் காரியாகத் தெரிகின்றாள்!
உங்களைப் பார்க்க வேண்டுமாம் என்கிறாள் என்று சொல்கிறான் அந்தக் காவலாளி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடை அகத்தாளே!
( சிலப்பதிகாரம் – வழக்குரை காதை )
இங்கே பாருங்கள்! ஒரு பணியாளின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை! எத்தனை வரலாற்றுச் செய்திகளை அவன் தெரிந்து வைத்திருக்கின்றான்! எத்தனை சமயக் கதைகள் அவனுக்குத் தெரிந்திருக்கின்றது.
உமாதேவி மகிடாசூரனை வதம் செய்த செய்தி அழகாக அவனுக்குத் தெரிந்திருக்கின்றது! கொடிய பாலை நிலத்திலே வாழ்கின்ற காளி பற்றியும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. துர்க்கா தேவி தாருகனோடு போர் செய்த செய்தி பற்றியும் அவனுக்குத் தெரிந்திருக்கின்றது!
இதிலே இன்னொரு விடயமும் மறைந்திருக்கின்றது! வாயில் காக்கும் பணி செய்யும் அவன் போர்ப் பயிற்சி பெற்ற போர்வீரனாகத் தானே இருப்பான்! அதனால் அரசனுடன் பேசும் போதும் யுத்தங்களின் செய்திகளையே அவன் உதாரணம் காட்டுகின்றான்! யுத்தத்திலே வெற்றியைச் சந்தித்த கொற்றவையையும் காளியையையும் துர்க்கையையும் அந்தப் போர் வீரன் தன் மனத்திலே உயரத்தில் வைத்திருக்கின்றான்!
இங்கே தான் பதவிக்கான தகுதி இளங்கோவடிகளால் மறைத்து வைக்கப்படுகின்றது! இது காவியம் தானே! காவலாளி சொல்லாமலேயே இளங்கோவடிகள் கற்பனையில் இதை எழுதி இருக்கவும் கூடும்! என்று கதைப்பவர்களும் நிச்சயம் இருப்பார்கள்!
அப்படித்தான் கற்பனையில் பாடி இருந்தாலும் கூட அந்த இலக்கிய கருத்தா அரன்மனைக் காவலாளிக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை தன் கற்பனையால் பதவித் தகுதியாகக் காட்டுகின்றானா? இல்லையா? என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!
போர்க்களங்களும் அதில் போராடியவர்களும் அதன் வெற்றி தோல்விகளும் அந்தப் போர்ச் சம்பவங்களும் காவலுக்கு நியமிக்கப் படுபவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்! என்ற சிந்தனையை மௌனமாக வலியுறுத்திவிட்டுப் போய்விட்டார் இளங்கோவடிகள்!
இதைத்தான் இன்ன வேலையை இதைக் கொண்டு அல்லது இந்த அறிவைக் கொண்டு இவன் செய்து முடிப்பான் என்று முடிவெடுத்து அந்த வேலையை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் திருவள்ளுவர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்!
என்பது பதவி கொடுப்பதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்குறள் ஆகும்!
கனடா தமிழர் தகவல் இதழில் 5.1.2014 அன்று வெளியான எனது கட்டுரை!