பொருளுக்கு என்ன பொருள்?
கம்பர் சித்திரம் 6
இராமாயணத்திலே அனைவருக்கும் தெரிந்த புகழ் பெற்ற பாத்திரங்களில் ஒன்று தாடகை என்ற பெண் பாத்திரம். தாடகை ஒரு அரக்கி. விசுவாமித்திர முனிவனின் யாகத்தைக் காப்பாற்றுவதற்காக இராமன் அவளைக் கொன்றான் என்பது பலரும் அறிந்த கதை. ஆனால் பிறப்பினால் அவள் அரக்கியல்ல. அவள் இயட்சர்கள் என்ற ஒரு குலத்தைச் சேர்ர்ந்த அழகான பெண்ணாக இருந்தாள்.
அவளைச் சுந்தன் என்ற அவள் குலத்து ஆடவனுக்கு மணமுடித்து வைத்தனர் பெற்றோர். அவளுடைய மகன் தான் இராமாயணத்திலே பொன்மானாக வந்து இராமருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்ட மாரீசன்.
இராமாயணத்திலே மாரீசனை இரு இடங்களில் சந்திக்கின்றான் இராமன். முதல் முறையாக தாடகாவனத்திலே விசுவாமித்திர முனிவனோடு இருக்கும் போது காண்கிறான். பின்பு சீதையை இராவணன் கடத்தும் இடத்தில் பொன்மானாக காண்கின்றான். முதல் சந்திப்பிலேயே மாரீசனை இராமன் கொன்றிருக்கலாம். இராமாயணத்திலே இந்த மாரீசனுக்குத் தான் பின்னாலே பெரிய ரோல் இருக்கின்றது என்று நினைத்து இராமன் விட்டுவிட்டான் போலும்.
ஒரு முறை மாரீசனின் தந்தையான சுந்தனை அகத்திய முனிவரின் கோபம் மிகுந்த சாபம் தாக்க அவன் மரணமடைந்து விட்டான். அதையறிந்து தாடகையும் மாரீசனும் அகத்தியரை எதிர்க்க அகத்தியர் அவர்களை கொடிய அரக்கர்களாகப் போங்கள் என்று சாபமிட்டதோடு அவர்கள் வாழ்ந்த அழகிய இடத்தையும் கொடிய வனாந்தரம் ஆக்கிவிட்டார்
அன்றிலிருந்து தன் அழகிய கோலத்தைச் சாபத்தால் மாற்றிக் கொடூரமாக்கியது ஒரு முனிவன் ஆகையால் முனிவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தன் எதிரியாக நினைத்து அவர்களின் யாங்ககளையும் அழித்து முடிந்தால் அவர்களையும் கொன்று வந்தாள் தாடகை. அவளுக்கு உதவியாக அன்றைய இலங்கை ஆட்சியும் இருந்தது. காரணம் இராவணன் அதிகாரத்தில் இருந்தான்.
அவளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே அயோத்திக்குப் போய் தசரத மன்னனைக் கண்டு அவன் பிள்ளைகளாகிய இராம இலட்சுமணர்களை காட்டுக்கு அழைத்து வந்து அவர்களை தாடகையைக் கொலைபுரிய வைத்தான் விசுவாமித்திரன்.
இந்த வரலாற்றில் கம்பன் எழுதிய ஒரு பாடல் கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி ஆக்கியதோ இல்லையோ பல பேச்சாளர்களுக்கு முகவரியை அள்ளிக் கொடுத்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பாடலில் வரும் ஒரு சொல்லுக்கு எந்த இலக்கியவாதியும் சரியான உரை சொல்லவில்லை என்பது என் ஆதங்கம். இனி அந்தப் பாடலைப் பார்ப்போம்.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே!
(கம்பராமாயணம் – பால காண்டம் – தாடகை வதைப் படலம்)
வாயிலே இருந்து வேகமாக வெளிவரும் சொல்லுப் போல புறப்பட்ட இராமனின் அம்பு வைரம் பாய்ந்த மலை போன்ற தாடகையின் நெஞ்சிலே படுகின்றது. அந்த அம்பின் வேகத்துக்கு தாடகையின் உடல் வலிமை நின்றுபிடிக்கவில்லை. அப்படியே துளைத்துக் கொண்டு முதுகு வழியாக வெளியே போய்விடுகின்றது.
அந்த அம்பு வெளியே போனதற்கு கம்பன் ஒரு உவமை சொல்லுவான். படித்தவர்கள் படிக்காதவர்களுக்கு சொன்ன அறிவுரை போல ஒருகணம் கூட தங்காமல் போய்விட்டது என்று சொன்னான் கம்பன்.
கம்பராமாயணத்திலே இந்த ஒரு உவமை தான் இந்தப் பாடலைச் சாகா வரம் பெற்ற பாடலாக உயரத்தில் தூக்கி வைத்தது. இதை மேடைகளில் சிலாகித்துப் பேசி கைதட்டல் வாங்கியவர்கள் ஏராளம்.
கேள்வி என்னவென்றால் தாடகையின் மார்பிலே சொல்லுப் போலப் புகுந்த அம்பு முதுகால் வெளியேறும் போது அப்படியே சொல்லாகவே வெளியேறி விடாமல் பொருளென மாற்றமடைந்து போயிற்று என்கிறானே கம்பன் என்ன காரணம் என்பது தான்.
சொல்லெனப் புகுந்தது சொல்லெனப் போக வேண்டியது தானே ஏன் பொருளாக மாறிப் போக வேண்டும். இதுக்குள்ளே கம்பன் எதையோ சொல்ல வருகின்றான்.
அதை படித்தவன் படிக்காதவனுக்கு சொல்லும் அறிவுரை என்று குறுக்கிப் பொருள் எடுத்து இலக்கிய வாதிகள் மேற்கொண்டு சிந்திக்க விடாமல் தடுக்கின்றார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளே என்றும் எழுந்து கொண்டிருக்கும்.
சொற்கள் என்றால் அவற்றுக்கு பொருள் இருக்க வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய இலக்கணம். அப்படியானால் பொருள் இல்லாத சொற்கள் என்று எவையும் கிடையாது சொற்கள் வாயிலிருந்து வந்ததும் அவை ஏதோ ஒரு பொருளைத் தமதாக்கிச் சுமந்து கொண்டுதான் சஞ்சரிக்கின்றன.
ஓ! அப்படியானால் கம்பன் சொல்ல வந்த செய்தியும் இது தான். வாயிலே இருந்து வெளிவரும் சொல்லுப் போன்று இராமனின் வில்லிலே இருந்து புறப்பட்ட அம்பு தாடகையின் நெஞ்சிலே புகுந்து அங்கிருந்து சொல்லாகவே வெறுமனே புறப்பட்டு விடாமல் அவள் உயிர் என்று ஒரு பொருளை எடுத்துக்கொண்டு முதுகு வழியாக வெளியேறுகின்றது.
இப்படிப் பார்க்கும் போது தான் சொல்லாகப் புகுந்து பொருளாக வெளியேறிய காரணம் புரிகின்றது. கம்பனின் கவிதைச் சித்திரமும் உயருகின்றது. ஒரு உவமைப் பொருத்தமும் இருக்கின்றது.
கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.6.2022) வெளியான எனது கட்டுரை இது.