எழுத்தாளர் இணையத்துக்கு வாழ்த்து!
20 ஆண்டுகளை நிறைவு செய்யும்
எழுத்தாளர் இணையத்துக்கு வாழ்த்து!
விழிப்புடனே நடுநிலையாய்
வாழி! வாழி!!
கொம்புக்கு மண்ணெடுத்துத் திரியும் மாடாய்
கொழுவலுடன் எழுத்தாளர் கிடந்த காலம்
வம்புக்கு எதையேனும் வலிந்து சொல்லி
வரியெல்லாம் பொய்யாக வரைந்த நேரம்
அம்புக்கு இரையாகும் பறவை போல
அவலமுடன் எழுத்துலகம் இருந்த போதில்
கும்பிட்டு அனைவரையும் ஒன்று சேர்க்கக்
குதித்ததெழுந்த இணையமேநீ வாழி வாழி!
மாறுபட்ட அரசியலும் மதியும் மேலும்
மறுக்கப்பட்ட நீதிகளும் வடுவாய் நெஞ்சைக்
கூறுபட்ட துண்டுகளாய்க் குலைத்துப் போட்ட
குறைதுடைக்கத் தோன்றியநீ பகையால் இங்கே
வேறுபட்ட மனத்தையெலாம் ஒன்று சேர்த்தாய்
வேதனையை எழுத்துகளால் கழுவித் தீர்த்தாய்!
சேறுபட்ட எண்ணங்களை விலக்கி நீயும்
செந்தணலாய்க் குற்றமற இருந்தாய் அன்றோ!
ஓடிவந்த எத்தனையோ எழுத்து மாந்தர்
ஒதுங்கவென இடங்கொடுத்தாய் அதற்கு மேலும்
தேடிவந்த பிறநாட்டு எழுத்து வேந்தர்
திறமைகளை உபசரித்தாய் சிறப்புச் செய்தாய்!
கூடிவந்த நூல்களெலாம் பதிப்புச் செய்தாய்
கூடவந்து முகவரிகள் தேடித் தந்தாய்!
கோடியல்ல கொஞ்சப்பணம் வைத்துக் கொண்டு
குறைகளையப் போர்தொடுத்தாய்; வாழி வாழி!
எழுத்துலகம் எனவொன்று இருக்கும் மட்டும்
எழுத்தாளர் இணையம்நீ இருந்து வாழி!
பழுத்தபழம் பலவிழுந்து போகும் ஆனால்
பழுதாகிப் போவதில்லை மரங்கள் மீண்டும்
கழுத்துவரை பூமலர்ந்து சிரிக்கும் காய்க்கும்!
காலத்தின் நியதியது அதனைப் போல
விழுத்துவதும் உயர்த்துவதும் இயற்கை என்ற
விழிப்புடனே நடுநிலையாய் வாழி! வாழி!!
(28.4.2013)