சாதியில்லா இடம் எங்கே?
செத்துவிட்ட ஆடொன்றைப் புதைக்க வீட்டில்
சின்னப்பன் முற்றத்தில் வந்து நின்றான்
முத்துமுத்தாய் அவன்முகத்தில் வியர்வை அந்த
மூன்றுபனைக் கள்ளிறக்கி இளைத்த தேகம்
பத்துமுழக் கிடங்கினித்தான் வெட்ட வேண்டும்
பக்கத்தில் கடகத்துடன் மனைவி வள்ளி
கொக்கரித்து முட்டையிட்ட கோழி போல
குனிவதுவும் எழுவதுமாய் சிரித்து நின்றாள்.
தாவணியும் மறைக்காத கிழிந்த சட்டை
தன்னுடைய கடமையினைச் செய்யப் போக
ஆவணங்கள் இல்லாத காணி போன்ற
அவையிரண்டும் அதைமறுத்து எட்டிப் பார்க்கும்
கோவணமும் நான்குமுழத் துண்டும் கட்டி
குற்றேவல் செய்கின்ற பயலுக் கிந்தப்
காவனத்தைக் கொடுத்தானே கடவுள் என்று
காண்பவர்கள்; பொறாமையுற வள்ளி நின்றாள்
நேற்றுவைத்த பழங்கறியியும் சோறும் என்று
நிலமிருந்த பெட்டியிலே அம்மா போட்டாள்
ஊற்றிவைத்த வடிகஞ்சி இந்தா என்று
ஓடிவந்து அக்காளும் கொடுத்துப் போனாள்
தோற்றமதில் தாமரைபோல் தெரிந்தாள் தன்னை
தோட்டத்தின் பின்புறத்தில் அழைத்து நானும்
சேற்றுக்குள் கால்வைக்க நினைத்துக் கொஞ்சம்
சில்லறையும் தாளுமென நீட்டிப் பார்த்தேன்.
பள்ளிகளும் நளத்திகளும் பறைச்சி என்றும்
பகுத்துவைத்த மானுடர்கள் காணும் போது
தள்ளிநின்று கதைப்பார்கள் ஆனால் எங்கள்
தாளிடுக்கில் அமைந்தவிடம் ஒன்றில் இந்தக்
கள்ளருக்குச் சாதியில்லை ஆனால் நாங்கள்
கள்ளவழி நினைப்பதில்லைக் காசைக் காட்டி
கொள்ளிநெருப்பு அதையெடுத்துக் கூரை வைத்துக்
கொண்டவர்கள் பலபேர்கள் என்றாள் வள்ளி!