வெண்ணிலாவே!
ஈழமெனும் இலங்கைதனில் வெண்ணிலாவே – நீ
இருந்தனையோ தெரியலையே வெண்ணிலாவே
ஆழவெட்டு விழுந்ததனால் வெண்ணிலாவே – உன்
அழகுமுகம் போனதுவோ வெண்ணிலாவே!
பாதிமுகம் காட்டுகிறாய் வெண்ணிலாவே – மீதி
பறித்தனரோ இலங்கையிலே வெண்ணிலாவே
வீதியெலாம் தேடினையோ வெண்ணிலாவே – இல்லை
விதியென்று விட்டனையோ வெண்ணிலாவே
கம்பிமுள்ளு வேலிகளை வெண்ணிலாவே – நீ
கடந்துதானே வந்திருப்பாய் வெண்ணிலாவே
தம்பியம்மா இருவரையும் வெண்ணிலாவே – அங்கு
தாட்டனரோ எரித்தனரோ வெண்ணிலாவே
நான்பிறந்த தேசமதில் வெண்ணிலாவே – ஈழ
நாடுமலர் கின்றதென்றார் வெண்ணிலாவே
ஏன்பிறந்தேன் என்றுவென்னை வெண்ணிலாவே – இன்று
ஏங்கவைத்துப் போயினரே வெண்ணிலாவே
தென்னகத்து திராவிடரால் வெண்ணிலாவே – நாம்
தேடிக்கொண்ட ஆசையெலாம் வெண்ணிலாவே
என்னகத்தில் தேவையில்லை வெண்ணிலாவே – இதை
இன்றுணர்ந்து என்னபயன் வெண்ணிலாவே
வீரமென்ற ஒன்றைமட்டும் வெண்ணிலாவே – தேடி
விவேகமற்று வைத்திருந்தோம் வெண்ணிலாவே
தூரநின்ற எதிரிகளை வெண்ணிலாவே – நாம்
தூதுவிட்டு வரவழைத்தோம் வெண்ணிலாவே
பாடுபட்ட வீரமதை வெண்ணிலாவே – போற்றிப்
பாதுகாக்கத் தெரியவில்லை வெண்ணிலாவே
நாடுவிட்டு ஓடிவிட்டோம் வெண்ணிலாவே – இதில்
நாங்களுமே குற்றவாளி வெண்ணிலாவே
செய்ததெலாம் தியாகமதே வெண்ணிலாவே – அதைச்
செய்தவரை மறக்கவில்லை வெண்ணிலாவே
செய்துவிட்ட தியாகத்தால் வெண்ணிலாவே – நாங்கள்
சேர்த்ததென ஒன்றுமில்லை வெண்ணிலாவே
ஏடுகளும் இசைத்தட்டும் வெண்ணிலாவே – எங்கள்
இருவிழியை மறைத்தனவே வெண்ணிலாவே
மாடுகளாய்த் தலையசைத்து வெண்ணிலாவே – நாங்கள்
மானமற்று இருந்துவிட்டோம் வெண்ணிலாவே
தோற்றுவிட்டோம் என்பதனை வெண்ணிலாவே – இன்றும்
தூரவைக்கும் வேலைகள்தான் வெண்ணிலாவே
ஆற்றுகிறார் எம்மவர்கள் வெண்ணிலாவே – ஐயோ
ஆபத்தை உணராமல் வெண்ணிலாவே