விழியும் துளியும்

சிறுகதை

கோமதி! நான் மஞ்சு கதைக்கிறன். நான் இங்கே சுகமாக வந்து சேர்ந்திட்டன் பிறகு எல்லாம் ஆறுதலாகக் சொல்லுறன் என்ன?

சந்தோசம் அக்கா!

ஆறு கூடாரங்கள் தள்ளிப் போய் இரவல் போனைக் கொடுத்து விட்டு வந்து சரிந்து படுத்தாள் கோமதி. மண்தரையில் கை பட்டதும் சில்லென்று குளிர்ந்தது. மழை ஈரம் இன்னும் காயவில்லை. போர்வைக்குள் கையை எடுப்பதற்குள்ளாகவே இரண்டு இடங்களில் நுளம்புகள் கடித்து விட்டன.

இந்தக் கண் கெட்டுப் போன நுளம்பு ஆமிக்காரனை விட மோசமாகக் கிடக்குப் பிள்ளை. எல்லாப் பக்கத்தாலையும் வருகுது தங்கச்சி. பக்கத்து மரத்தடி ஆச்சி பின்னேரம் சொன்னது உண்மையாகத்தான் இருந்தது.   கோமதிக்கு உறக்கம் வரவில்லை. காயப்பட்டவர்களின் வேதனைக் குரலும் ஒற்றை வேட்டுச் சத்தமும் சிங்களக் குரல்களும் என்று இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் மரண பூமியில் யாருக்குத்தான் தூக்கம் வரும்?

அவள் போராளி தான். ஆனால் நூற்றுக்கணக்கில் இலையான்கள் ஊரும் முகத்தை இதுவரை அவள் கண்டதில்லை. அழுகிய பழங்களைக் கண்டிருக்கிறாள். ஆனால் மருந்தின்றி அழுகிய காலை கண்டதில்லை. ஐயோ! என்ரை பிள்ளையைக் கொண்டு போகினமே என்ற ஓலத்தைக் கேட்டதில்லை. பகலிலே கண்ட காட்சிகள் இரவில் மனத்திரையில் விரியும் போது ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும்.

முன்பெல்லாம் தூக்கம் வராவிட்டால் நிலவின் ஒளிபட்டு கையில் ஆடும் மரத்து இலைகளின் நிழல்களை மஞ்சுவுடன் சேர்ந்து எண்ணி விளையாடுவாள் இருட்டில். ஓரு மாற்றத்துக்காக! பயத்தை மறப்பதற்காக!

மஞ்சக்கா! எத்தனை தோட்டாக்களை எண்ணிய கைகளாலே இப்படி நிழலை எண்ண வேண்டி இருக்கே பார்த்தியளா?

பேசாமல் இரடி!  அக்கம் பக்கத்திலே தாய் தகப்பனை தவறவிட்டதுகள் என்று ஒரு அனுதாபம் இருக்கு. எல்லாத்தையும் போட்டு உடைச்சுப் போடாதே!

ஓற்றைப் போர்வைக்குள் கிடந்து கொண்டு பயத்தில் மஞ்சு கையில் கோபமாக கிள்ளும் போது கோமதி சிரிப்பாள்.

இனி மஞ்சுவைச் சந்திக்க முடியாது என்று கோமதிக்குத் தெரியும். மூன்று மாத முகாம் வாழ்வை முடித்துக் கொண்டு மஞ்சுளா தமிழ்நாட்டுக்குப் போய்விட்டாள் அண்ணன்கள் வெளிநாட்டில் இருந்ததால் இலட்சக் கணக்கில் பணம் கொடுத்து மஞ்சுவை மீட்டுவிட்டார்கள். இனி சுவிஸ் அல்லது கனடா என்று உறவுகளோடு அவள் போய்ச் சேர்ந்து விடுவாள்.

கோமதிக்கு யாரும் அப்படியில்லை. ஒரேயொரு சின்னத் தங்கை. அப்பா விவசாயி. ஓலை வீட்டில் இருந்து இயக்கத்துக்கு வந்தவள். இன்று அவளுக்கு வீட்டுத் தொடர்பு எதுவும் இல்லை. இப்போது பெற்றார் பழைய வீட்டிலும் இல்லை.

அப்பாவைக் கடைசியாகக் கண்ட போது அவர் தோட்ட வரம்பில் வைத்துச் சொன்ன வார்த்தைகள் இன்றும் வடுக்களாக அவள் மனதில் பதிந்து கிடக்கின்றன.

என்ரை வயிறு எரியுற மாதிரி நீயும் ஓரு நாளைக்கு நாசமாய்த்தான் போவாய்!. அவள் பாவி அம்மாவைக் கலங்க விட்ட பழி இருக்கே அது எங்கே போனாலும் உன்னை விடாது பாரடி. தான் முள்ளுத் தின்று உனக்குச் சதை தீத்தி வளத்தவளுக்கு ஒரு சொல்லுச் சொல்லாமல் சாமத்திலே ஓடின நீ இப்ப இங்கே யாரைப் பார்க்க வாறாய்? போ! என்னுடைய கண்ணிலே முழிக்காதே!

நாசமாய்த்தான் போவாய்! நிறை மொழி. சாபம்! அப்படியே இன்று சூழ்ந்து பிடித்து விட்டது. அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அந்தந்தப் பலன்களைத் தந்துவிடும் மொழிகள் என்று வாரியார் சொல்வாரே அந்த நிறைமொழிகள் தான் அறுவடைக்குத் தயாராகி விட்டன. ஏற்றக்கொள்ள வேண்டியது தான்!

மஞ்சக்கா! இனிச் சண்டைப் பிடிக்கிறதா இல்லையா?

கோமதி ஒருதரும் தொடர்பிலே வருகினம் இ;ல்லை. நான் நினைக்கிறன் எல்லாம் கைமீறிப் போட்டுது என்று. தலைவர் ஆட்களுக்கும் என்னவோ நடந்திட்டுது போல கிடக்குது. முப்பது வருடங்கள் பட்ட கஸ்டம் எல்லாம் வீணாய்ப் போட்டுது என்று என்னுடைய மனம் சொல்லுது. எங்கே பார்த்தாலும் எங்களின்ரை சனங்களின்ரை பிணங்களாகத்தான் கிடக்குது. பாவங்கள்!

இப்ப என்ன செய்யிறது அக்கா?

ஆயுதத்தைப் போட்டு விட்டு சனத்தோடை சனமாக ஆமியின்ரை பக்கம் போவம். மற்றதைப் பிறகு யோசிப்பம்.

இல்லை அக்கா நான் குப்பி கடிக்கப் போறன். இனி இருக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு சரனடைய விருப்பம் இல்லை.

ஏன் எனக்கு சாக விருப்பம் இல்லையோ? சாகிறதல்ல இப்ப பிரச்சனை கோமதி. இவ்வளவு தூரம் பயிற்சி எடுத்த நாங்கள் எல்லாம் நாட்டுக்காக ஒரு வேளை திரும்பவும் கூடவேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தால் இப்பவே உயிரை விடுகிறது பிழை தானே என்று யோசிக்கிறேன். அது துரோகமும் கூட கோமதி.

நீங்கள் அப்படி நினைத்தால் அங்காலே போவம் அக்கா.

கோமதி போறதுக்கு முன்னாலே ஒன்று. எனக்கு கீழே நீங்கள் முப்பது பேர் இருந்தும் கடைசியிலே எல்லாரையும் போக விட்டுப்போட்டு நான் உன்னை கூட்டி வந்ததுக்குக் காரணம் எத்தனையோ ஆபத்தான நேரத்திலே உன்னுடைய உயிரைப் பொருட்படுத்தாமல் என்னை நீ காப்பாற்றினது தான். அது போல இனியும் நடக்க வேணும். ஏன் சொல்லுறன் என்றால் முகாமிலே கட்டாயம் தேடுவான்கள். விசாரிப்பான்கள். வெருட்டுவான்கள். சில வேளை ஆசை வார்;த்தை காட்டுவான்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னை நீ காட்டிக் கொடுக்கக் கூடாது.

அக்கா நான் போராளி என்றாலும் உங்களை என்னுடைய சொந்த அக்கா என்றுதான் என்றைக்கும் நினைக்கிறேன். நீங்கள் என்னுடைய கட்டளை அதிகாரி என்று என்றைக்கும் நான் நினைத்து நடந்தில்லை.

அது தெரியும் கோமதி. ஆனால் தூரத்திலே நின்று ஆமியைச் சுடுகிறது ஒருவகைப் போராட்டம். அவனுடைய இடத்திலே போய் சந்தேகம் வராமல் நடக்கிறது அதைவிட கடினமான போராட்டம் அதனாலே சொன்னேன். சரி உடுப்பை மாத்து. கோமதி! கசங்கிய பழைய உடுப்பாய்ப் போடு. பின்னலை அவிழ்த்து குடும்பியாக முடி என்ன? மற்றது குப்பியை களட்டி எறி முதல்லே. ஏய்! உடம்பிலே கந்தகம் மணந்தால் கண்டு பிடிச்சிடுவான்கள். உந்தப் புல்பூண்டுகளைப் பிடுங்கி உடம்பிலே தேய்ச்சுப் போட்டு சட்டையைப் போடு என்ன?

எந்தப் பகைவர்களை அழித்தொழிக்க வேண்டுமென்று கோமதி ஆயுதம் ஏந்தினாளோ அந்தப் பகைவருக்கு முன்னாலேயே தலை குனிந்து நிராயுத பாணியாக சென்ற போது அவள் உள்ளம் அழுதது. இப்படி ஆகிவிட்டதே என்று நினக்கும் போதே வழிகளில் உருண்ட கண்ணீர்த் துளிகள் கன்னங்களை நனைத்தன.

கோமதி! நித்திரையா?

இல்லையக்கா சொல்லுங்கோ

இன்றைக்கு இரவு என்னை கொழும்புக்கு கூட்டிப்போக ஆட்கள் வருகினம் என்று கடிதம் கொண்டுவந்து தந்தவையள்.

திடுக்கிட்டாள் கோமதி. நீயுமா? என்றது மனம். அதை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

கொழும்பிலே நிக்கிறது பயமில்லையோ? கவனம் அக்கா!

இல்லை கோமதி. சிங்கள ஆமியிலே ஒரு பெரிய ஆள் எல்லா ஒழுங்கும் செய்யுறாராம். நான் கொழும்பிலே நிக்கேல்லை. அப்படியே விமான நிலையம்; போறன். நாளைக்கு பகல் இந்தியாவிலே நிற்பேன் என்று நினைக்கிறன்.

மஞ்சக்கா! போன உடனே அந்த செல்போன் மாமிக்கு போன் பண்ணி என்னோடை கதையுங்கோ. இல்லாட்டில் என்ன நடந்துதோ என்று நான் பயந்து கொண்டிருப்பன்.

நான் போய்க் கதைக்கிறேன் அம்மா! நீ தான் கவனமாக இரு

எப்பவாவது பிரச்சனை தீர்ந்து ஊருக்கு நீங்கள் வந்து போகக் கூடியதாக இருந்தால் மறந்து போகாமல் என்னை வந்து பாருங்கோ என்ன அக்கா. எங்கையாவது இப்படி முகாமிலே தான் இருப்பேன்.

நான் உன்னை மறந்தாலும் அந்த எலிக்குஞ்சு பிரச்சனையை மறக்க மாட்டன் கோமதி.

கோமதி சிரித்தாள்.

என்னுடைய கவசத்; தொப்பிக்குள்ள எலி குட்டி போட்டிருந்தால் அது என்னுடைய பிழை இல்லை. க ண் திறக்காத குட்டிகளை நீங்கள் தூக்கி எறியச் சொன்னது தான் எனக்கு கோபம் வந்தது.

கோமதி மேலிடம் சண்டைக்கு போகச் சொன்னால் எலிக்குஞ்சு தொப்பிக்குள்ளே இருக்குது இப்ப போக இயலாது என்று சொல்லேலாது. நடபடிக்கை எடுத்துப் போடுவினம்.

எங்கன்ரை சண்டைக்காக எலிக்குஞ்சுகள் ஏன் சாக வேணும்? எங்களுடைய போராட்டத்துக்கும் அந்த அப்பாவி எலிக்குஞ்சுகளுக்கும் என்ன சம்பந்தம்? அதுகளை ஏன் சாகடிக்க வேணும்?

நீ சொல்லுறது சரி. என்றாலும்.

என்ன என்றாலும் என்று இழுக்கிறியள்? கொஞ்ச நேரம் விட்டால் தாய் எலி வந்து ஒவ்வொன்றாய்த் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குப் போகும். வெளியிலே விட்டால் எறும்பு அதுகளை கடிக்கும். காகம் கொத்தும். வெய்யில் சுடும். பாவந்தானே. அதைச் சொன்னதுக்காக எதிர்த்துக் கதைச்சது என்று  என்னை ஒருநாள் முழுக்க முகாமைச் சுற்றி ஓட விட்டீங்கள் தானே! சாப்பாடும் தராமல்!. நான் எவ்வளவு அழுதனான் தெரியுமே.

ஏய்! அதிலே இருந்து தான் உன்னிலே எனக்கு விருப்பம் இனி பேசாமல் இரு.

அதில்லை மஞ்சக்கா பயிற்சிக்காக நாவல் மரத்திலே இருந்த குரங்கைச் சுடச் சொல்லிக் கேட்டதுக்கே நான் மாட்டேன் என்று அழுதது உங்களுக்குத் தெரியும் பிறகு நீங்களும் என்னை வற்புறுத்தினது தான் எனக்குப் பிடிக்கேல்லை.

எடி! மேலிடம் என்ன சொல்லுதோ அதை மட்டும் தான் நான் செய்யலாம். திருப்பி கதைக்கேலாது.

நீங்கள் எல்லாரும் அப்பிடித் திருப்பிக் கதைக்காமல் இருந்து தான் இன்றைக்கு இப்படி வந்து சிங்களவன்ரை காலுக்கு கீழே வந்து கிடக்கிறம் அக்கா. கருத்துச் சுதந்திரம் தந்திருந்தால் இப்படிக் கேவலப்பட வேண்டி ஏற்பட்டிருக்காது!

கோமதியிடம் இப்போது மஞ்சுவின் போர்வை ஒன்றுதான் ஞாபகத்துக்கு இருந்தது. மூன்று மாதங்களாக வவுனியாவில் இருந்து ஒவ்வொரு கிழமையும் வந்து பார்த்த மஞ்சுவின் ஆட்கள் இன்றோடு வரமாட்டார்கள். அதனால் இனி காசு என்ற ஒன்றை அவள் காணப்போவதில்லை. பசிக்கும் போதெல்லாம் முகாமில் முளைத்த சிங்களக் கடையில் மஞ்சு வாங்கும் சாப்பாட்டில் இனிப் பங்கு கிடைக்காது. இப்போது கோமதியின் சொத்தாக இருந்தது அரைப்போத்தல் தண்ணீரும் அந்தப் போர்வையும் தான்.

காலையில் இருந்தே தண்ணீர்த் தாகமாகத்தான் இருந்தது. ஆனாலும் கோமதி அந்தத் தண்ணீரைக் குடிக்கவில்லை. போர்வைக்கடியில் பத்திமாக வைத்திருந்தாள். அது நாளைக்கு அவளுக்கு காலைக்கடனுக்கு வேணும். அதிகாலையிலே ஆடை களைந்து ஒதுங்கும் போது கிழிந்த கூடாரமானாலும் அதிலே மஞ்சு அக்கா துணைக்கு இருக்குது என்ற தெம்பு நேற்றுவரை இருந்தது. இன்று காலை தான் தனிமையின் கொடுமையை உணர்ந்தாள் அவள்.

தங்கச்சி! அக்கா எங்கே பிள்ளை?

அவவுக்கு சுகமில்லைப் பாருங்கோ. வவுனியாவுக்கு மருந்தெடுக்க போட்டா. வந்திடுவா! சில வேளை ஆஸ்பத்தியிலே மறிச்சுப் போட்டினமோ தெரியாது!

காலையில் இருந்து இதையே சொல்லிக் கொண்டு இருந்தாள் கோமதி.

மோனே! நல்லாக இருட்டிப் போட்டுது. கொக்காவை இரண்டு நாளாய் காணல்லே தங்கச்சி. உந்தத் துன்மத்தரின்ரை கையிலே சிக்கிச் சிரழிந்து போகப் போகுதே அருமந்த பின்ளை ஏன் தனிய போக விட்டநீ பிள்ளை! சீ! அக்கம் பக்கத்திலே யாரையாவது கேட்டியளோ. நான் என்றாலும் போயிருப்பேனே.

ஊர் பேர் தெரியாத பக்கத்து மரத்தடி ஆச்சி புலம்பிக் கொண்டிருந்தாள் மெதுவாக! கோமதி பதில் பேசவில்லை.

களத்திலே உண்மை விசுவாசிகள் எல்லாம் போராடி உயிர் துறந்து போய்விட்டார்கள். வெளிநாட்டிலே ஆட்கள் இருந்தவர்களும் பணம் கொடுத்துத் தப்பிப் போய்விட்டார்கள். இன்றைக்கு மிஞ்சி இருப்பது திக்கற்ற நீயும். திசை தெரியா நானும் தான். ஆச்சி நீ எனக்கு விழியாக இரு. அதில் நான் துளியாக இருக்கிறேன். இதைத்தான் ஆச்சிக்கு சொல்லலாம். அது எவ்வளவு தூரம் ஆச்சிக்கு விளங்கும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.