பெட்டியும் பிரச்சனையும்!
பெட்டியும் பிரச்சனையும்!
காணி உறுதிகளும் கழுத்து அட்டியலும்
காசு பணத்தினொடு கட்டும் சேலைகளும்
பேணி வைத்திருக்கப் பெரிதும் உதவியவோர்
பெட்டி இருந்ததெங்கள் வீட்டில் ஒருகாலம்
பூச்சி மருந்துதரும் கற்பூர வாசனைதான்
பூட்டைத் திறந்தவுடன் முதலில் மணமெடுக்கும்
ஆச்சி ஆடுவித்த காசோடு ஐயாவின்
அதிக உழைப்புமங்கு காசாகச் சேர்ந்திருக்கும்
அதிகம் பணமில்லை என்றாலும் யாரிடமும்
அகலக் கைநீட்டா அமைதி வாழ்க்கையது
மதியும் சூரியனும் பொட்டுவைக்கப் பெட்டிக்கு
மண்கறையான் உதவிசெயும் கூரைக் கிடுகரித்து
பூட்டாமல் சிலவேளை திறந்தே அதைவிட்டால்
புதிசாய் எலிபுகுந்து துணியைக் கடித்துவிடும்
நாட்டாமை செய்துகொண்டு நாலிடமும் சுற்றிவரும்
நம்வீட்டுப் பூனையையும் ஏமாற்றி ஏய்த்துவிட்டு
இறங்குப் பெட்டியென்ற இதுவொன்றை வைத்திருந்து
ஈரெட்டுப் பிள்ளைகுட்டி அதையும் வளர்த்தெடுத்து
உறங்குபாய் தலகணியில் கடனில்லா வாழ்கையுடன்
உறங்கினான் என்னப்பன் பிள்ளைநான் அப்படியா
காரும் கடன்வீட்டுக் கட்டிடமும் வங்கிக்குத்தான்
நார்போன்ற தும்பில்செய்த தாலியுமோ கடனில்தான்
பேரும் வெளிநாட்டுப் பெருவாழ்வு எனக்கென்று
பிரச்சனைகள் கொஞ்சமல்ல பெட்டியதைத் தொலைத்தனால்!
இரா.சம்பந்தன்.