பாவிநான் படிக்கவில்லை!
அகலத் திரிபோட்ட விசிறி விளக்கொன்று
அப்பன் வாங்கிவந்து படியென்றான் வெளிச்சத்தில்
நானோ படிக்கவில்லை அவன்மனது கேட்கவில்லை
அகலச் சிமிலியுடன் அரிக்கன் இலாம்பொன்றை
அடுத்து வாங்கிவந்து அதிலே படியென்றான்
அப்போதும் படிக்கவில்லை அவனும் விடவில்லை
பெற்றோமாக்ஸ் என்ற பெருவெளிச்ச விளக்குவைத்து
பிள்ளைநான் படிக்கவென்று பெருமுயற்சி அவன்செய்தான்
அதிலும்நான் படிக்கவில்லைப் பார்த்தான் எனதப்பன்
தாலிதவிர்த்து அம்மாவின் வெறுங்கொடியும் காப்புகளும்
தன்கையில் இருந்தபணம் அதையும் அவன்போட்டு
மின்சார இணைப்பெடுத்து மின்விளக்கு ஒளியினிலே
படிதம்பி இருந்தென்றான் படிக்கவில்லை அப்போதும்
அப்பன் போய்விட்டான் அவன்பின்னே அம்மாவும்
அவசரமாய் போய்விட்டாள் நான்மட்டும் இப்போது
புறநாட்டில் தொழிற்சாலை கூலித் தொழிலாளி
பெட்டியெல்லாம் பாரந்தான் தூக்கி அடுக்குகிறேன்
முட்டி மட்டுமல்ல முழுக்காலும் வலியெடுக்கும்
கட்டிவந்த சாப்பாடு கைப்பையில் ஒளித்திருக்க
எட்டி மணிக்கூட்டை நான்பார்ப்பேன் பசியோடு
சொன்னகதை விளங்காது மொழிதெரியாக் காரணத்தால்
என்னவோ செய்தெந்தன் பொழுதைநான் ஓட்டுகிறேன்
மெத்தைக் கதிரையிலே மேலே விசிறிசுற்ற
மொத்தப் பைல்புரட்டி கணணியிலே சரிபார்த்துப்
பத்துப் பேருடனே படித்திருந்தால் இருந்திருப்பேன்
துண்டுதறித் தோள்போட்டு என்னப்பன் மகிழ்ந்திருப்பான்
கண்டுகொள்ள வில்லைநான் கல்வியென்ன செய்யுமென்று
படிதம்பி படியென்று என்னப்பன் சொன்ன குரல்
பக்கத்தில் கேட்கிறது படுத்துறங்கும் போதெல்லாம்
இடிபோல அச்சொல்லு இதயத்தைப் பிளக்கிறது.
சேர்த்துவைத்த காசையெலாம் மகனெக்குத் தந்தப்பன்
படியென்று அதனைமட்டும் பலகாலம் கேட்டானே
பாவிநான் படிக்கவில்லை படிக்கவில்லைப் பாவிநான்!