பழைய நோவுகள்!
பிறந்த நாளுக்கு என்ன வாங்கித் தரவேண்டும்
என்று கேட்டாள் அவள்
கலர் பென்சில் பெட்டி என்றேன் நான்
அது ஏன் என்றாள் அவள்
படம் வரைந்து வர்ணம் தீட்டி
மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்க
என்றேன் நான் மீண்டும்
அதுசரி விலை ஐந்து டொலரும்
பெறுமதியற்ற பொருளாயிற்றே அது
அது தான் வேண்டுமா என்றாள் அவள்
பிறந்த நாள்வாழ்த்துச் சொல்லி
அதிலே நீ கையெழுத்தும்
போட்டுத்தானே தருவாய் என்றேன்
அதிலென்ன சந்தேகம் என்றாள் அவள்
அதற்குப் பின்பு அதன் பெறுமதிதான்
ஐந்து கோடிக்கும் மேலாகி விடுமே
அதையே வாங்கித்தா என்றேன் நானும்
சரி வேறு ஏதாவது தேவையா
ம் என்றேன் நான்
என்ன என்றாள் அவள்
கையெழுத்துப் போடும் போது
உன் பெயரை மட்டும் எழுதித்தா
அவரின் பெயர் என் மனதுக்கு வலிக்கும்
என்றேன் நானும் இருவிழி கலங்க
ஏன் எனக்கு வலிக்காதா
என்றவள் கேட்டாள் ஒருகணம் மௌனம்
என்னவள் சென்றாள் கணவனை நோக்கி!