நாயுருவிப் புல்லுக்கு!
நாயுருவி என்கின்ற…
நம்நாட்டுப் புல்லினமே!
பாலப்பருவத்தில் நான்
பற்றைகளில் நடந்தெல்லாம்
ரோஜா பூப்பறிக்க
மினக்கெடுவேன் அப்போது
காற்சட்டை கரையோடும்
காலின் தொடையோடும்
நீயொட்டிக் கொண்டல்லோ
உடன்வரவே அடம்பிடிப்பாய்!
ரோஜாவைத் தலை மேலும்
தடுத்துன்னைத் தரைமீதும்
எறிந்து பழக்கப் பட்ட
என்மனமோ பின்நாளில்
நாயுருவி உன்போல
நாள்தோறும் ஒட்டிநின்ற
மச்சாளை உதறிவிட்டு
ரோஜா போலொன்றின்
தோள்தடவ விரும்பியது!
நாயுருவி நீகீறி
நானென்றும் நொந்ததில்லை!
ரோஜாவும் முள்ளுமென்ற
கூட்டணியில் நான்சிக்கிப்
பாடாய்ப் படுகின்ற
பாடிருக்கே! இப்போது
ஓயாமல் புலம்புகிறேன்
உனக்காகக் கால்நீட்டி!