நான் திருமால் என்று இராமன் சொன்ன இடம்!
முதன் முதலாக தன்னை வந்து சந்தித்துவிட்டு அநுமன் சென்றதும் தம்பி இலட்சுமணனிடம் இராமன் கேட்டான்! தம்பி! இப்போ வந்துவிட்டுப் போனானே ஒருவன் அவனுடைய புகழ் பரவாத தேசமே இருக்காது போலிலிருக்கே! அவன் கல்லாத கலைகளும் இல்லைப் போலிருக்கின்றது! நான்கு வேதங்களிலும் கடலாக அவன் இருப்பது இங்கு வந்து கதைத்ததில் இருந்து தெரிகிறறே! சொல்லின் செல்வனாக இருக்கும் இவன் யாராக இருக்கும்? ஒருவேளை பிரம்மன் அல்லது விடையிலே வலம் வரும் சிவனாக இருப்பானோ?
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர! விரிஞ்சனோ? விடை வலானோ?
(கம்பராமாயணம் – கிஷ;கிந்தா காண்டம்)
இங்கே இராமன் வந்து போனது சிவனா அல்லது பிரம்மனா என்று கேட்டானல்லவா? ஏன் மும் மூர்த்திகளிலே திருமாலைத் தவிர்த்து மற்ற இருவரில் இவன் யாரென்று கேட்டான்? ஏனெனில் தான் திருமாலாக இருப்பதால் திருமால் பற்றிக் கேட்காமல் மற்றவர்களை மட்டும் கேட்டான்! தானே திருமால் என்று இராமன் அறிவித்த இடம் இது!