நண்பனும் நானும்!
நண்பனும் நானும்!
எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை
எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை
தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத்
தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை இல்லை
பொழுதுதனைப் போக்கிடவே எழுதித் தள்ளிப்
புகழ்விரும்பாக் கவிஞனென ஒதுங்கி வாழும்
கழுதையெனும் பிறப்புனது! சிரித்தான் சொல்லிக்
கனகாலம் அருகிருந்த நண்பன் என்னை!
அடுக்குமொழி ஆயிரங்கள் எழுதி என்ன?
அக்கால இலக்கியங்கள் பாடி என்ன?
தடுக்கிவிழும் போதெல்லாம் தாங்கிக் கொள்ளும்
தமிழ்க்குறளில் புலமையெலாம் இருந்தும் என்ன?
ஒடுக்கிவிடும் எழுத்துலகம் ஒருவ ரோடும்
ஒன்றுபட்டு முன்னேறாப் பாவி உன்னை
மடைமகன்தான் வலைவீசிப் பிடிப்பான் என்றான்!
மையிருப்பை பேனாவில் பார்த்து நித்தம்
மனமகிழ்தல் அல்லாமல் எந்தன் வாழ்வில்
கையிருப்பை பார்த்தென்றும் மகிழ்ந்தேன் இல்லை
கனகால நண்பனுக்குச் சொல்லி வைத்தேன்!
நெய்யிருப்புக் கேற்றபடி எரியும் தீபம்
நெடுங்காலம் வாழ்ந்திடலாம் ஆனால் நானோ
வெய்யிலொளி என்பதனை அறிவார் யாரோ?
வெளியாலே சொல்வதில்லை வெட்கம்! வெட்கம்!!
நான்கவிஞன்! நான்கவிஞன்! என்பேன் என்னுள்
நான்குவகைச் சங்கநிலம் நடந்து பார்ப்பேன்!
தேன்ததும்பும் பறம்புமலை பார்ப்பேன்!
தேரோடும் பாண்டியரின் மதுரை பார்ப்பேன்!
கூன்முதுகு ஒளவையவள் ஏடு பார்ப்பேன்!
குற்றால அருவியிலும் குளித்துப் பார்ப்பேன்!
வான்நிலவைச்; சிலவேளை தொட்டும் பார்ப்பேன்!
வாழ்க்கையிலே வேறென்ன எனக்குத் தேவை?
பாரதியார் வந்திருந்து கதைப்பார் அந்தப்
பாஞ்சாலி என்னிடத்தில் நியாயம் கேட்பாள்
நேரெதிரே சிலவேளை கம்பன் வந்து
நெடுநேரம் பேசிடுவான் பலதும் பத்தும்!
கூரெழுத்து ஆணியுடன் ஏடும் ஏந்திக்
கூடிவிடும் புலவர்குழாம் என்னுள் வாழ
நீரெடுத்த குமிழியென நீங்கள் வாழும்
நெடுந்துயர வாழ்வெனக்கேன்? நண்பா என்பேன்!