இரவும் மழையும்!
மெல்லிய மழையில் வாழை
மேனியை நனைக்க வேண்டும்
கல்லிலே இருந்து காக்கை
கருஞ்சிறகு உதற வேண்டும்
புல்லிலே மறைந்து வாழ்ந்த
பூச்சிகள் பறக்க வேண்டும்
இல்லிலே மாலை நேரம்
இருந்ததைப் பார்க்க வேண்டும்!
முற்றத்தில் வெள்ளம் தங்க
முழுமழை பெய்ய வேண்டும்
சற்றதில் குமிழி துள்ளிச்
சட்டென உடைதல் வேண்டும்
மற்றதோர் பக்கம் காற்று
மழையிடை நுழைய வேண்டும்
பற்றியோர் கையால் என்னைப்
பாவைநீ அணைக்க வேண்டும்!
தூரத்தே பாட்டி வீட்டுத்
தோடைகள் ஆட வேண்டும்
பாரத்தால் முல்லை சோர்ந்து
படுத்திட வேண்டும் மண்ணில்
நேரத்தால் வேளைக்கு அன்று
நித்திரை வருகு தென்று
ஓரத்தால் பார்க்கும் உந்தன்
உள்ளத்தை உணர வேண்டும்
கூரையின் ஒழுக்கால் பாயின்
ஒருபுறம் நனைய வேண்டும்
தேரைகள் காதல் காதில்
தேனென ஒலிக்க வேண்டும்
காரையும் பெயர்ந்த திண்ணைக்
கட்டெறும்பு ஊர்ந்து வந்து
ஆரையோ தேடுவார் போல்
அறையெலாம் உலவ வேண்டும்
பெருமழை விடியும் மட்டும்
பெய்வது கேட்க வேண்டும்
ஒருமுறை மின்னல் வந்து
பலமுறை முழங்க வேண்டும்
கருமயிர்க் கூந்த லோடுன்
காதினை நீயும் பொத்த
இருமுலைக் கிடையே தாலி
இருந்திடும் வாழ்வு வேண்டும்!
இரா.சம்பந்தன்