திரை இசைப் பாடல்களில் தமிழ் இலக்கணம்!
திருவள்ளுவர் மானம் என்ற அதிகாரத்திலே ஒரு கருத்தைசொல்ல வருகின்றார்.
கல்வியாலோ செல்வத்தாலோ வீரத்தாலோ மலைபோல உயர்ந்தவர்களாக இருந்தாலும் தாழ்வுக்கு ஏதுவான செயல்களை ஒரு குன்றிமணி அளவுக்கு சிறிதாக செய்தால் கூட அவர்கள் தாழ்வடைந்து போவார்கள்.
இந்தக் கருத்தை குறளாக அமைக்கும் போது வள்ளுவர் சொற்பின் வருநிலை அணி என்ற ஒரு இலக்கணத்தை அங்கு பயன் படுத்துவாவார். ஒரு சொல்லே வேறுபட்ட பொருள்களில் திரும்பத் திரும்ப வருவது சொற்பின் வருநிலை.
குன்றின் அனையரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
(திருக்குறள் – அதிகாரம் – மானம் – குறள் 965)
இந்தக் குறளிலே குன்று என்ற சொல் நான்கு இடங்களிலே வருகின்றது. ஆனால் நான்கு இடங்களிலும் நான்கு வேறுபட்ட பொருட்களை குன்று என்ற ஒரு சொல் குறிக்கின்றது.
முதலாவதாக குன்றின் அனையரும் என்பதில் வரும் குன்று மலை என்ற பொருளில் மலைபோல உயர்ந்தவர்களாக இருந்தாலும் என்ற பொருளில் கையாளப்படுகின்றது.
இரண்டாவதாக குன்றுவர் என்பதில் வரும் குன்று தாழ்ந்து போவார் என்ற பொருளில் கையாளப்படுகின்றது.
மூன்றாவதாக குன்றுவ என்பதில் வரும் குன்று தாழ்வான காரியங்கள் என்ற பொருளில் கையாளப்படுகின்றது.
நான்காவதாக குன்றி அளவினும் செயின் என்பதில் வரும் குன்று குன்றிமணி என்னும் மரத்தின் வித்தைக் குறிக்கும் பொருளில் கையாளப்படுகின்றது.
கண்ணதாசன் தெய்வத்தின் தெய்வம் என்ற படத்துக்கு பாட்டு எழுதும் போது இந்த அணியை மெதுவாக தொட்டுக்கொண்டு போவார்
நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை என்ற சுசீலா பாடிய பாட்டிலே பின்வருமாறு கண்ணதாசன் எழுதியிருப்பார்.
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே
உன்னை புரிந்து கூட சிறையில் மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
நான் என்றும் உன் எல்லையிலே வந்திடுவேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இதிலே இரண்டு நாளை வருகின்றன. முதல் வருகின்ற நாளைக்கு நாளைய தினம் என்ற பொருளும் அடுத்து வாற நாளைக்கு நாட்கள் என்ற வேறு பொருளும் அமைவதால் இது கண்ணதாசன் காட்டிய சொற்பின் வருநிலை அணி.
இரா.சம்பந்தன்